வர்ற தீபாவளிக்கு ஜவுளி எடுக்கற மாதிரி எல்லாரும் இந்த காரை வாங்க போறாங்க! இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!
இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் விற்பனையில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). ஆனால் சமீப காலமாக டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும், டாடா பன்ச் கார் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், வெறும் 10,446 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இது பார்ப்பதற்கு பெரிய எண்ணிக்கையாக தோன்றலாம். ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம், 18,238 டாடா பன்ச் கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.

அதாவது டாடா பன்ச் காரின் விற்பனை 43 சதவீதம் சரிவடைந்துள்ளது. கிட்டத்தட்ட பாதி விற்பனை அப்படியே குறைந்துள்ளது. இதன் காரணமாக நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் (Top 10 Cars Sold In June 2025), டாடா பன்ச் காருக்கு 9வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 கார்களின் பட்டியலில் டாடா பன்ச் முதல் இடத்தை பிடித்து அசத்தியிருந்தது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 10,990 டாடா பன்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை, 18,238 ஆக உயர்ந்தது. இதன் மூலம் 66 சதவீத வளர்ச்சியுடன், டாடா பன்ச் கார், முதல் இடத்தை பிடித்திருந்தது. ஆனால் தற்போது 9வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுதாரிக்க வேண்டிய நேரம் இது என்பதையே இந்த எண்கள் உணர்த்துகின்றன.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில், பன்ச் காரின் பங்களிப்பு மிகப்பெரியது. இதில் சரிவு ஏற்பட்டால், அது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் மிக கடுமையான எதிர்மறை பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுதாரித்து கொள்வது அவசியம்.
இதற்கான பணிகளை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது செய்து கொண்டுதான் உள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த புதிய மாடல், அனேகமாக வரும் அக்டோபரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள டாடா பன்ச் காரில், 7.0 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஆனால் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டிசைனிலும் நாம் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்த புதிய மாடலின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 6.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே புதிய மாடலின் வருகைக்கு பின்னர், டாடா பன்ச் காரின் விற்பனை எண்ணிக்கை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என நாம் நம்பலாம். இன்னும் ஒரு சில மாதங்களில் இது நமக்கு தெரிந்து விடும். டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் வருகை, ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) போன்ற கார்களுக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு மைக்ரோ எஸ்யூவி ரக காரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள், டாடா பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு காத்திருக்கலாம். தீபாவளிக்கு புதிய கார் வாங்க நினைக்கும் பலர், டாடா பன்ச் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








