காரை வாங்கியவர் முகத்தில் அப்படியொரு சந்தோஷம்! பின்ன இருக்காதா...? எளிதில் கிடைக்காத டாடா கார் ஆச்சே!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் அதன் ஹெரியர் (Harrier) மற்றும் சஃபாரி (Safari) கார்களின் புதிய ஸ்டீல்த் எடிசன்கள் (Stealth Editions)-ஐ அறிமுகம் செய்தது. மிகவும் சில எண்ணிக்கைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார்களுக்கான முன்பதிவுகளும் அப்போதே துவங்கப்பட்டன. இந்த நிலையில், புதிய டாடா ஹெரியர் & சஃபாரி ஸ்டீல்த் எடிசன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளன. அவ்வாறு ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட காரை வாடிக்கையாளர் ஒருவர் டெலிவிரி பெற்றுள்ளார்.
இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த காலங்களில் பல்வேறு தரமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒன்றுதான், சஃபாரி (Safari) ஆகும். இந்த பெயருக்காகவே டாடா சஃபாரி காரை வாங்கியவர்கள் ஏராளம்.

கார்களை உற்பத்தி செய்து விற்கும் முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் வந்த பிறகு அறிமுகம் செய்த முதல் கார்களுள் ஒன்று, சஃபாரி ஆகும். 1998ஆம் ஆண்டில் சஃபாரியை டாடா அறிமுகம் செய்தது. இந்த வகையில் பார்த்தால், முதல்முறையாக சஃபாரி கார் அறிமுகம் செய்யப்பட்டு 27 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவுக்கூறும் விதமாகவே கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களில் புதிய ஸ்டீல்த் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
மார்க்கெட்டில் 27 வருடங்களாக டாடா சஃபாரி கார் விற்பனையில் உள்ளது என நினைத்துவிட வேண்டாம். ஏனெனில், 1998இல் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் சில வருடங்களுக்கு பின் சஃபாரி காரின் விற்பனையை நிறுத்திய டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதனை மீண்டும் கடந்த 2021ஆம் ஆண்டில் துவங்கியது. 2021இல் முற்றிலும் புதுமையான தோற்றத்தில் சஃபாரி கார் அறிமுகம் செய்யப்பட்டது.

ஹெரியர் ஆனது சஃபாரியின் 5-சீட் வெர்சன் ஆகும். அதுவே, சஃபாரியை 6 அல்லது 7 இருக்கைகள் உடன் வாங்கலாம். இந்த கார்களில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்டீல்த் எடிசன்கள் இதே சீட் ஆப்ஷன்கள் உடன் தான் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த புதிய ஸ்டீல்த் எடிசன் கார்களை வாங்குவது சற்று கடினம் ஆகும்.
ஏனெனில், சஃபாரி அறிமுகம் செய்யப்பட்டு 27 வருடங்கள் ஆனதை நினைவுக்கூறும் விதமாக, வெறும் 2,700 ஸ்டீல்த் எடிசன் கார்களை மட்டுமே விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், சஃபாரி ஸ்டீல்த் எடிசன் காரின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களில் மும்பையில் கஸ்டமர் ஒருவருக்கு சஃபாரி ஸ்டீல்த் எடிசன் கார் டெலிவிரி செய்யப்படுவதை காணலாம்.
ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களின் புதிய ஸ்டீல்த் எடிசன்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.25.10 லட்சம் மற்றும் ரூ.25.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வழக்கமான டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி கார்களுடன் ஒப்பிடுகையில் புதிய ஸ்டீல்த் எடிசன்கள் தோற்றத்தில் வேறுப்படுகின்றன. முக்கியமாக, இந்த புதிய ஸ்டீல்த் எடிசன்கள் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
காரின் 19-இன்ச் அலாய் சக்கரங்கள் கூட அடர் கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன. இதற்கேற்ப காரின் உட்புற கேபினும் முழுவதுமாக கார்பன் நோய்ர் தீம்-இல் உள்ளது. காரை சுற்றிலும் நிறைய இடங்களில் 'ஸ்டீல்த் எடிசன்' என்பதை குறிக்கும் லோகோக்கள் இடம்பெற்றுள்ளன. மற்றப்படி என்ஜின் ஆப்ஷனில் எந்த மாற்றமும் இல்லை. சஃபாரியில் வழங்கப்படும் அதே 2 லிட்டர் டீசல் என்ஜின் தான் புதிய ஸ்டீல்த் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் காராக சஃபாரி விளங்குகிறது. இருப்பினும், சஃபாரி கார்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் ஓரளவிற்கு நல்லப்படியாகவே உள்ளது. இதனை மேலும் அதிகரிக்கும் முயற்சியாகவே புதிய ஸ்டீல்த் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறுகிய எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதால், சஃபாரி கார்கள் விற்பனையில் இது பெரிய அளவில் பங்களிக்காது என்றே கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications







