ஒரே நாள்ல இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா! டாடாவே இதை எதிர்பாத்திருக்காது! மாருதியை கலங்கடிக்கும் புது கார்
இந்திய சந்தையில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் டாடா சியரா (Tata Sierra) கார் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த நவம்பர் 25ம் தேதிதான், சியரா காரை இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
இதை தொடர்ந்து டாடா சியரா காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் நேற்று முன் தினம் (டிசம்பர் 16) தொடங்கப்பட்டன. முதல் நாளிலேயே டாடா சியரா காரை, 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து விட்டனர். மேலும் டாடா சியரா காரை வாங்குவதற்கு தற்போதைய நிலையில் மட்டும் 1.35 லட்சம் வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை வரும் நாட்களில் தொடர்ச்சியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், இந்தியா முழுவதும் உள்ள டீலர்ஷிப்களுக்கு டாடா சியரா கார்கள் தற்போது வர தொடங்கியுள்ளன. இதன் மூலம் டாடா சியரா காரை நேரில் பார்வையிட வாடிக்கையாளர்களுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சியரா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகளை வரும் ஜனவரி 15ம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், கூடிய விரைவிலேயே டாடா சியரா கார்களை நாம் இந்திய சாலைகளில் பார்க்க போகிறோம்.

டாடா சியரா காரில் மொத்தம் 3 இன்ஜின் ஆப்ஷன்கள் (Engine Options) வழங்கப்பட்டுள்ளன. அவை மூன்றுமே 1.5 லிட்டர் யூனிட்கள்தான். இதில், ஒன்று நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆகும். மற்றொன்று TGDi Hyperion டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும். மூன்றாவது இன்ஜின், டீசல் இன்ஜின் ஆகும்.
அதே நேரத்தில் லெவல் 2 அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), பனரோமிக் சன்ரூஃப், பிரீமியம் ஆடியோ சிஸ்டம், முன் பக்க டேஷ்போர்டில் 3 திரைகள் (முன் பக்க பயணியின் இருக்கை முன்பாக 12.3 இன்ச் திரை, 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர்) போன்ற வசதிகள் (Features) எல்லாம் டாடா சியரா காரில் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா காரின் வருகை, இந்திய சந்தையில், மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) போன்ற போட்டி மாடல்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் ஹோண்டா எலவேட் (Honda Elevate), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) போன்ற கார்களுக்கும், டாடா சியரா, விற்பனையில் கடுமையான சவாலை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மேலும் கூடிய விரைவில் விற்பனைக்கு வரவுள்ள ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), நிஸான் டெக்டான் (Nissan Tekton) ஆகிய கார்களுக்கும், டாடா சியரா போட்டியை ஏற்படுத்தும்.
டாடா சியரா காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை வெறும் 11.49 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மிகவும் மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக டாடா சியரா கருதப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த காருக்கு, மிகவும் பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








