டீசர் வீடியோ விட்டதுக்கே மார்க்கெட் கதிகலங்கி போயிருச்சு! கார் வந்துச்சுனா போட்டி நிறுவனங்கள் மொத்தமும் காலி!
இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் டாடா சியரா (Tata Sierra). ஆனால் கடந்த 2003ம் ஆண்டிலேயே டாடா சியரா காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சியரா காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாடா சியரா கார், வரும் நவம்பர் 25ம் தேதி (November 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், புதிய டாடா சியரா காரின் டீசர் வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன.

இந்த வரிசையில் புதிய டாடா சியரா காரின் புதிய டீசர் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. டாடா மோட்டார்ஸ் கார்ஸ் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த டீசர் வீடியோவில், புதிய டாடா சியரா காரின் உட்புறத்தை நம்மால் பார்க்க முடிகிறது. அத்துடன் 3 திரைகள் உடன் புத்தம் புதிய டேஷ்போர்டு வழங்கப்பட்டிருப்பதையும், இந்த டீசர் வீடியோவில் நாம் காணலாம்.
இதில் ஒரு திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸட்டர் ஆக செயல்படும். மற்றொரு திரை சென்ட்ரல் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆக செயல்படும். மற்றொரு திரை முன் பக்க பயணியின் பகுதியில் கூடுதலாக வழங்கப்பட்டிருக்கும். பொதுவாக பெரும்பாலான கார்களில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவை மட்டுமே வழங்கப்பட்டிருக்கும்.

ஆனால் புதிய டாடா சியரா காரில், முன் பக்க பயணியின் பகுதியில் கூடுதலாக ஒரு திரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems), ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் மற்றும் பனரோமிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் (Features), புதிய டாடா சியரா கொண்டுள்ளது.
இந்த டீசர் வீடியோ மூலமாக, புதிய டாடா சியரா காரில், 4 ஸ்போக் ஸ்டியரிங் வீல் வழங்கப்படவுள்ளதையும் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. செயல்திறனை பொறுத்தவரையில், புதிய டாடா சியரா காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியரா ஐசி இன்ஜின் வெர்ஷனின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 10 அல்லது 11 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், அதிகாரப்பூர்வமான விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் போன்ற கார்களுக்கு எல்லாம், புதிய டாடா சியரா விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஐசி இன்ஜின் வெர்ஷனை தொடர்ந்து, டாடா சியரா காரின் எலெக்ட்ரிக் வெர்ஷனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.


Click it and Unblock the Notifications








