ரூ.6 லட்சத்தில் கிடைக்கக்கூடிய டாடா கார் இதுதான்... உள்ளே இவ்வளவு பெரிய திரை கிடைக்கும்னு எதிர்பார்க்கல
டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்களுள் டிகோர் (Tigor) என்கிற செடான் ரக காரும் ஒன்றாகும். இந்த நிலையில், டிகோர் செடான் காரில் புதியதாக விலைமிக்க டாப் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய டிகோர் காரை பற்றியும், அதற்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள விலையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில செடான் ரக கார்களுள் டாடா டிகோர் ஒன்றாகும். ஏனெனில், கடந்த சில மாதங்களாகவே மக்களின் இரசனை ஆனது செடான் ரக கார்களில் இருந்து எஸ்யூவி ரக கார்களுக்கு மாறி வருகிறது. இதனாலேயே செடான் ரக கார்களை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

என்றாலும், தற்போதைக்கு ஓரளவிற்கு அதிகம் விற்பனையாகக்கூடிய செடான் ரக கார்களுள் ஒன்றாக டிகோரை சொல்லலாம். கடந்த 2025 ஜனவரி மாதத்தில் மொத்தம் 1,484 டிகோர் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது வழக்கமாக ஒரு மாதத்தில் விற்பனை செய்யப்படும் டிகோர் கார்களின் எண்ணிக்கையே ஆகும்.
ஆனால், டிகோர் கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்ந்து இவ்வாறு ஒரே அளவில் இருப்பதால், டிகோர் கார்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதில் புதிய டாப் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது. அதேநேரம், டிகோரில் வழங்கப்பட்டுவரும் விலை குறைவான எக்ஸ்.இ வேரியண்ட்டின் விற்பனை நிறுத்திக் கொள்ளப்பட உள்ளது.
இதனால், டாடா டிகோர் காரின் ஆரம்ப விலை அதிகரித்துள்ளது. இனி, டிகோர் காரின் ஆரம்ப-நிலை வேரியண்ட் எக்ஸ்.எம் (XM) ஆகும். இருப்பினும், எக்ஸ்.எம் வேரியண்ட்டிற்கும், எக்ஸ்.இ வேரியண்ட்டிற்கும் இடையே பெரியதாக வித்தியாசமில்லை. இரண்டின் விலைகளும் கிட்டத்தட்ட ரூ.6 லட்சம் என்கிற அளவில் தான் உள்ளன.
டாடா டிகோரில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் வேரியண்ட், எக்ஸ்.இசட் பிளஸ் லக்ஸ் (XZ Plus Lux) ஆகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. டிகோர் காரின் இந்த புதிய எக்ஸ்.இசட் பிளஸ் லக்ஸ் வேரியண்ட்டில் 15 இன்ச்சில் ட்யூயல்-டோன் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதுவே இந்த காரை சிஎன்ஜி (CNG) ஆப்ஷனில் வாங்கினால் 14 இன்ச் சக்கரங்களே கிடைக்கும்.
இந்த புதிய டிகோர் காரின் வெளிப்பக்கத்தில் ஃபாக் விளக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்கள், மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள் மற்றும் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காருக்கு உள்ளே 10.25 இன்ச்சில் ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், என்ஜினை ஸ்டார்ட்/ ஸ்டாப் செய்ய பொத்தான், முழுவதும் ஆட்டோமேட்டிக் ஆக செயல்படக்கூடிய வெப்பநிலை கண்ட்ரோல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் அதன் டிகோர் கார்களின் விற்பனையை அதிகரிக்க என்ன என்னமோ செய்து பார்க்கிறது. இந்த முயற்சியாவது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 'ரூ.6 லட்சத்தில் டிகோர் கார்' என்கிற விஷயத்தை மட்டும் டாடா நிறுவனம் கைவிடுவதாக இல்லை.


Click it and Unblock the Notifications








