இந்தியாவில் டெஸ்லாவுக்கு விழுந்த சம்மட்டி அடி! கம்மியான புக்கிங்கால் தலையில் துண்ட போட போறாங்க போல!
இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் டெஸ்லா நிறுவனம் தனது ஷோரூமை திறந்த நிலையில் தற்போது தனது மாடல் ஒய் காருக்கான புக்கிங்கை மட்டுமே பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேர் மாறாக மிக மோசமான எண்ணிக்கையில் குறைவான புக்கிங் மட்டுமே வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா, இந்நிறுவனம் உலகின் முண்ணனி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டது. இதில் வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்தது. இதனால் டெஸ்லா இந்தியாவிற்கு வருமா வராதா உள்ளிட்ட பல்வேறு குழப்பங்கள் நீடித்தன.

இந்த குழப்பங்களை எல்லாம் மீறி கடந்த ஜூலை மாதம் மும்பையில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் ஷோரூமை திறந்தது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் டில்லியில் தனது அடுத்த ஷோரூமை திறந்தது. முதல் ஷோரூம் திறக்கப்படும் போதே இந்தியா முழுவதிலுமிருந்து இந்த காரை புக் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் இந்த காரை புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் இந்த 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 2500 கார்களை விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு வைத்திருந்தது. இது மட்டுமல்ல இந்நிறுவனம் இந்தியாவில் புக்கிங் துவங்கியஉடன் இந்த 2500 கார்களும் விற்று தீர்ந்துவிடும் என எதிர்பார்த்தது. ஆனால் தற்போது ப்ளூம்பெர்க் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி இந்நிறுவனம் இதுவரை வெறும் 600 புக்கிங்களை மட்டுமே பெற்றுள்ளது.

இது இந்நிறுவனத்தின் எதிர்பார்ப்பின் மீது விழுந்த பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. இதில் எத்தனை புக்கிங்கள் முழு பணமும் செலுத்தி காரை வாங்க கன்வெர்ட் ஆகும் என்பது தெரியவில்லை. இந்நிலையில் புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவரியை துவங்க இந்த செப்டம்பர் மாதம் டெஸ்லா நிறுவனம் சீனாவிலிருந்து தனது கார்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யவுள்ளது. இந்த மாதம் மட்டும் 450-500 கார்கள் இறக்குமதியாகும் என தெரிகிறது.
டெஸ்லா நிறுவனம் இவ்வளவு குறைவாக புக்கிங்கை பெற்றதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. இந்நிறுவனம் மாடல் ஒய் என்ற ஒரே காரை மட்டுமே தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மக்களுக்கு தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்கள் இல்லை என்பது ஒரு காரணம். மற்றொரு முக்கியமான காரணம் இந்த காரின் விலை தான். இந்த கார் இந்தியாவில் ரூ59.89 லட்சம் முதல் ரூ67.89 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது சராசரி காரின் விலையை விட பல மடங்கு அதிகம் ஆகும்.

இந்நிலையில் டெஸ்லா நிறுவனம் தற்போது சீனாவிலிருந்து கார்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதால் அதிக வரி விதிப்பு விதிக்கப்படுகிறது.ஆனால் இந்தியா ஐரோப்பா இலவச வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வரவுள்ளது. இது அமலுக்கு வந்தால் டெஸ்லா நிறுவனம் ஜெர்மனி ஆலையில் தயாரிக்கப்பட்ட கார்களை இந்தியாவில் குறைந்த வரியில் இறக்குமதி செய்ய முடியும். இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் கார்களை விற்பனை செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
இதனால் குறைவான விலையில் மாடல் ஒய் காரை அறிமுகப்படுத்தினால் நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருக்கும். ஆனால் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே குறைந்த விலையில் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். இதனால் லிமிட்டெட் கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்யும் திட்டத்தை கையில் எடுக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்தால் நிச்சயம் போட்டி விலையில் கார்களை களம் இறக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் மிகப்பெரிய கனவுடன் களம் இறங்கியது. உலகின் 3வது மிகப்பெரிய ஆட்டேமொபைல் சந்தையை கொண்ட நாடு என்பதால் இந்நிறுவனம் சிறப்பான விலையை பெறும் என எதிர்பார்த்தது. ஆனால் இந்த காரின் புக்கிங் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. காரின் விலை மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. டெஸ்லா இந்தியாவில் ஆலை அமைத்து குறைந்த விலையில் வாகனங்களை தயாரிக்காத வரை விற்பனை அதிகரிப்பது கடினம் தான்.


Click it and Unblock the Notifications









