இந்தியாவிலேயே முதல் ஆளாக டெஸ்லா காரை வாங்கியது இதுக்குதானா? மாநில அமைச்சர் முதல் கஸ்டமர் ஆனார்!
டெஸ்லா (Tesla) பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் நுழைந்ததற்கு பிறகு பெரியதாக எந்தவொரு செய்தியும் வெளிவரவில்லை. இதற்கு சில காரணங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, டெஸ்லா நிறுவனம் எதிர்பார்த்த அளவு அதன் எலக்ட்ரிக் காரை குறைந்த விலையில் கொண்டுவரவில்லை. இன்னும் சொல்லப்போனால், உலகிலேயே டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் கார் அதிக விலையில் அறிமுகம் செய்யப்பட்டது நம் இந்தியாவில் ஆகும்.
இதனாலேயே பணக்காரர்களை தவிர்த்து பலர் டெஸ்லா மாடல் ஒய் காரை பெரியதாக கண்டுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை இந்தியாவில் முதல் வாடிக்கையாளர் தற்போது அதிகாரப்பூர்வமாக டெலிவிரி (Delivery) பெற்றுள்ளார். யார் அவர்? இந்தியாவில் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் (Electric Car) எவ்வளவு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது? என்பது பற்றிய விபரங்களை விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டெஸ்லா நிறுவனம் இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைவதா வேண்டாமா என பல வருடங்களாக யோசித்து பின் ஒருவழியாக கடந்த ஜூலை மாதத்தில் ஷோரூமை திறந்தது. மும்பையில் முதல் ஷோரூம், டெல்லியில் 2வது ஷோரூம் என அடுத்தடுத்து டீலர்ஷிப் ஷோரூம்களும், சூப்பர் சார்ஜிங் (Supercharging) நிலையங்களும் இந்தியாவில் திறக்கப்பட்டாலும் டெஸ்லா எதிர்பார்த்த மகிழ்ச்சி உடன் இந்திய மார்க்கெட்டிற்குள் நுழையவில்லை.
ஏனெனில், மத்திய அரசாங்கத்திடம் இருந்து டெஸ்லா எதிர்பார்த்த சிறப்பு சலுகைகள் கிடைக்கவில்லை. இருப்பினும், இந்தியாவில் முடிந்தவரையில் தனது எலக்ட்ரிக் கார்களை மக்களிடம் கொண்டுப்போய் சேர்க்கும் முயற்சியில் இருக்கும் டெஸ்லா, இந்தியாவில் முதலாவதாக அறிமுகப்படுத்திய மாடல் ஒய் எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகளை துவங்கி உள்ளது.

இதன்படி, இந்தியாவில் முதல் ஆளாக டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்றுள்ளவர் யார் என்று தெரிந்தால் இன்னும் ஆச்சிரியப்படுவீர்கள். அவர் வேறு யாருமில்லை, மஹாராஷ்டிரா (Maharashtra) மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்னாய்க் (Pratap Sarnaik) ஆகும்.
மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் (BKC) பகுதியில் டெஸ்லா திறந்த முதல் ஷோரூமில் மஹாராஷ்டிரா அமைச்சர் டெஸ்லா மாடல் ஒய் காரை நேரில் சென்று டெலிவிரி பெற்றுள்ளார். அமைச்சர் பிரதாப் சர்னாய்க் வாங்கியிருப்பது வெள்ளை நிறத்திலான மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் ஆகும். இது இல்லாமல் இன்னும் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் மாடல் ஒய் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

பிராண்ட்-நியூ டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை டெலிவிரி பெற்ற பின் பேசிய அமைச்சர் பிரதாப் சர்னாய்க், "இந்தியாவில் முதல் டெஸ்லாவை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த காரை நான் எந்தவொரு சலுகையிலும் பெறவில்லை. முழு தொகையை செலுத்தி இதை நான் வாங்கியுள்ளேன். நான் எனது பேரக்குழந்தையை பள்ளியில் விடுவதற்காக இந்த டெஸ்லா காரை பயன்படுத்த திட்டமிட்டுள்ளேன்" என மகிழ்ச்சி உடன் கூறினார்.
மேலும், இவ்வாறு தான் பயன்படுத்துவதன் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்களை பற்றி மக்கள் தெரிந்து கொள்ளவும், அவற்றை பயன்படுத்த துவங்கவும் உத்வேகம் அளிக்க முடியும் என்றும் பிரதாப் சர்னாய்க் தெரிவித்துள்ளார். இருப்பினும், டெஸ்லா மாடல் ஒய் காரின் எந்த வேரியண்ட்டை இவர் வாங்கியுள்ளார் என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனெனில், ரெகுலர் (ரூ.59.89 லட்சம்) மற்றும் லாங் ரேஞ்ச் (ரூ.67.89 லட்சம்) என இரு விதமான வேரியண்ட்களில் இந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகளவில் பிரபலமான டெஸ்லா எலக்ட்ரிக் காரை இந்தியாவிலேயே முதல் ஆளாக பெறுவது என்பது எவரொருவருக்கும் ஸ்பெஷலான தருணமே. இந்தியாவில் ஏற்கனவே சிலர் வெளிநாட்டில் வாங்கி அங்கிருந்து இந்தியா கொண்டுவந்து பயன்படுத்துகின்றனர் என்றாலும், இந்தியாவிலேயே அதிகாரப்பூர்வமாக டெஸ்லா விற்பனை செய்யும் எலக்ட்ரிக் காரை வாங்கிய முதல் கஸ்டமர் மஹாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்னாய்க் ஆவார்.


Click it and Unblock the Notifications









