வாடகை ரூ35 லட்சம் தரும் கார் நிறுவனம்! வருஷத்துக்கு இல்ல மாசத்துக்கு! பெரிய இடமிருந்தா ரெடி பண்ணி வச்சுக்கோங்க
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla), இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் சொந்தமாக உற்பத்தி ஆலை அமைத்து செயல்பட இருக்கின்றது. இங்கே தயாரிக்கப்படும் வாகனங்கள் இந்தியாவிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், நிறுவனத்தின் கார் தயாரிப்பு ஆலை எங்கே அமைய போகின்றது என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே டெஸ்லா மின்சார கார் உற்பத்தி ஆலை அமைய இருப்பதாக இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த மாதிரியான சூழலிலேயே மற்றுமொரு ஆச்சரியமளிக்கும் தகவலாக நிறுவனத்தின் ஷோரூம் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிறுவனம் ஷோரூம்கள் சிலவற்றை வாடகைக்கு எடுக்க இருப்பதாகவும் அதற்காக பெரும் தொகையை வாடகையாக வழங்குவதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக, மும்பையின் பந்த்ரா குர்லா காம்பிளெக்ஸ்-இல் ஓர் பெரிய ஷோரூமை அது வாடகைக்கு எடுத்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
3 ஆயிரம் சதுர அடி பரப்பளவுக் கொண்ட அந்த ஷோரூமுக்கு வாடகையாக அது ரூ. 35 லட்சம் வழங்க இருப்பதாக கூறப்படுகின்றது. இது வருடாந்திர வாடகை அல்ல மாத வாடகையாம். இதேபோல், தலைநகர் டெல்லியிலும் ஓர் ஷோரூமை வாடகைக்கு எடுத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

4 ஆயிரம் பரப்பளவுக் கொண்ட இந்த ஷோரூமுக்கு ரூ. 25 லட்சம் மாத வாடகையை டெஸ்லா நிறுவனம் பேசியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த டெல்லி ஷோரூம் ஏரோசிட்டி-யிலேயே அமைய இருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனத்தின் ஷோரூம்கள் முதலில் மும்பை மற்றும் டெல்லியில் அமைய இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
இதுமட்டுமல்ல நாட்டின் இன்னும் பல பகுதிகளில் நிறுவனம் ஷோரூமை அமைக்க இருக்கின்றது. அந்தவகையில், அடுத்து வரும் நாட்களில் சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் ஷோரூமை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டெஸ்லா நிறுவனம் இன்னும் உற்பத்தி ஆலையையே அமைக்கல, அதற்குள்ளாக ஷோரூம்களை அமைக்க தொடங்கிட்டாங்களா? என நீங்கள் கேட்கலாம்.
இதற்கான பதில், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி ஆலை அமைத்து அதன் வாயிலாக கார்களை உற்பத்தி செய்யும் வரை காத்திருக்கப் போவதில்லை. ஆம், அது வெளிநாடுகளில் உள்ள உற்பத்தி ஆலைகளில் இருந்து மின்சார கார்களை இறக்குமதி செய்து நாட்டில் வாகனங்களை விற்பனைச் செய்ய இருக்கின்றது.
இதற்ககாவே அது தீவரமாக ஷோரூம்களை அமைக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார், அப்போது டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலன் மஸ்க்கை அவர் சந்திக்க நேரிட்டது. இந்த சந்திப்பின்போது சில வாக்குறுதிகளை மோடி, எலன் மஸ்க்கிற்கு வழங்கியதாகக் கூறப்படுகின்றது.
இதற்கு பின்னரே டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதிக்கும் பணியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது. இதன் வெளிப்பாடாகவே ஆட்களை பணிக்கு சேர்ப்பது, உற்பத்தி ஆலையை அமைப்பு மற்றும் தற்போது ஷோரூம்களை அமைப்பது உள்ளிட்ட பணிகளில் அது களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனத்தின் இந்திய வருகை டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா மற்றும் பிஒய்டி உள்ளிட்ட நிறுவனங்களின் மின்சார கார்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த நிறுவனம் என்ன மாதிரியான விலையில் அதன் தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பது தெரியவில்லை. இருப்பினும், டெஸ்லா இ-கார்களுக்கு எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








