2025இல் ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த எலெக்ட்ரிக் கார்கள்! பெட்ரோல், டீசல் காரை ஓரம் கட்டுங்க!!
நிறைவடையும் தருவாயில் உள்ள 2025ஆம் ஆண்டில், இந்திய எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை ஆனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பல புதிய மாடல் அறிமுகங்களுடன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் எஸ்யூவி (SUV) கார்கள் மூலம் கணிசமான டிமாண்ட் உருவாகி உள்ளது. இதற்கு காரணமாக, இந்த 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலெக்ட்ரிக் கார்களுள் சிறந்தவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மஹிந்திரா பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ (Mahindra BE 6 & XEV 9e): 2025இல் கார்கள் விற்பனையில் மாருதி சுஸுகிக்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள மஹிந்திரா தனது புதிய 'இன்ங்லோ' (INGLO) தளத்தில் இந்த மாடர்ன் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை 2024இன் இறுதியில் வெளியிட்டது. இருப்பினும், விலைகள் அறிவிக்கப்பட்டு, புக்கிங் துவங்கப்பட்டு, கார்கள் டெலிவிரி செய்வதற்குள் 2025 வந்துவிட்டது.
ஹூண்டாய் கிரெட்டா இவி (Hyundai Creta EV): 2025 ஜனவரியில் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ (Bharat Mobility Global Expo) கண்காட்சியில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கொரியன்-ஸ்டைல் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார்களுள் ஒன்றான கிரெட்டாவின் எலெக்ட்ரிக் பதிப்பான இது, முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 473 கி.மீ தூரம் வரை இயங்கும் திறன் கொண்டதாக உள்ளது. இதன் விலைகள் தற்சமயம் ரூ.17.99 லட்சம் முதல் ரூ.23.50 லட்சம் வரை உள்ளன.

டாடா ஹாரியர் இவி (Tata Harrier EV): டாடா மோட்டார்ஸ் தனது இந்த சற்று விலைமிக்க எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை 2025 தொடக்கத்தில் வெளியிட்டது. இது இந்தியாவில் ஆல்-வீல்-டிரைவ் (AWD) இரட்டை-மோட்டார் அமைப்பை ஆப்ஷனாக வழங்கும் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இதன் ரேஞ்ச் (Range) 500 கிமீ-க்கும் அதிகமாகும்.

பிஒய்டி சீலயன் 7 (BYD Sealion 7): சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காரான இது, 2025 தொடக்கத்தில் அறிமுகமாகி, மார்ச் முதல் டெலிவிரி செய்யப்பட்டு வருகிறது. இதன் 82.56 kWh பேட்டரி ஆனது முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 567 கிமீ தொலைவு வரை காரை இயக்கி செல்லும் திறன் கொண்டதாக உள்ளது.

வின்ஃபாஸ்ட் வி.எஃப்6 மற்றும் வி.எஃப்7 (VinFast VF6 & VF7): வியட்நாமிய கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்த இரு எலெக்ட்ரிக் கார்களுடன் 2025இன் துவக்கத்தில் இந்திய சந்தையில் நுழைந்தது. அதிகபட்சமாக 468 கிமீ ரேஞ்சை வழங்கும் விஎஃப்6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.49 லட்சத்தில் இருந்தும், 532 கிமீ ரேஞ்சை வழங்கும் விஎஃப்7 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.20.89 லட்சத்தில் இருந்தும் தற்சமயம் துவங்குகின்றன.

பி.எம்.டபிள்யூ ஐஎக்ஸ்1 லாங்-வீல்பேஸ் (BMW iX1 LWB (Long Wheelbase)): 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு காரான இது, தனது பிரிவில் நீளமான வீல்பேஸ் உடன் வந்த முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இது கூடுதல் பின் இருக்கை வசதிகள் மற்றும் பிரீமியம் தரத்திலான இடவசதிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.49 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025இல் இவை மட்டுமின்றி, எம்ஜி சைபர்ஸ்டர், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-கிளாஸ் எலெக்ட்ரிக், மேபக் இக்யூஎஸ் நைட் சீரிஸ் போன்ற விலையுயர்ந்த எலெக்ட்ரிக் கார்களும் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றை காட்டிலும், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுவரும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். எலெக்ட்ரிக் கார்களுக்கு தொடர்ந்து மார்க்கெட் பெரிதாகி வருவதால், 2026இல் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









