டொயோட்டா இன்னோவா காரை ஆசையாய் வாங்கியதே இதுக்குதானா!! கழட்டி பிரிச்சு போட்டாச்சு!
இந்தியாவில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) ஏற்கனவே பிரபலமான ஒரு சொகுசு எம்பிவி (MPV) காராக விளங்குகிறது. இருப்பினும், இதை இன்னும் மேம்பட்டதாகவும், ஆடம்பரமானதாகவும் மாற்ற முடியும் என்று பலரும் நினைக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்கள் தங்கள் கார்களை தனிப்பட்ட ஓய்வறைகளாக மாற்றுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது, முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) காரை பற்றிய விபரங்கள் 'ஃபிலிம்ஷாப்' (Filmshoppe) என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த இன்னோவா ஹைகிராஸ், நவீனமயமாக்கப்பட்ட ஓய்வறை இருக்கைகளுடனும், பல்வேறு கூடுதல் வசதிகளுடனும் மாற்றப்பட்டுள்ளது. மருத்துவர் ஒருவரது இந்த இன்னோவா ஹைகிராஸ் கார் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

அதன்படி, வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு இணங்க இந்த எம்பிவி (MPV) காரை முழுமையாக மாற்றுமாறு தனது பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த இன்னோவா ஹைகிராஸ் காரின் முன்பக்கத்தில், மெர்சிடிஸ்-மேபேக் (Mercedes-Maybach) கார்கள் பாணியிலான கிரில் பொருத்தப்பட்டு, காரின் தோற்றத்திற்கு ஒரு தனித்துவமான ஆடம்பரத்தைக் கூட்டுகிறது.
பின்பக்கத்தில், இன்னோவா காரின் வழக்கமான டெயில்லைட்டுகளுக்கு பதிலாக ஜப்பானில் விற்பனையில் உள்ள டொயோட்டா ஆல்ஃபர்ட் (Alphard) கார் பாணியிலான LED டெயில்லைட்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன், மேற்கூரையில் ஒரு கேரியரும் இந்த வாகனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இன்னோவா ஹைகிராஸில் தொழிற்சாலையில் பொருத்தப்பட்ட அலாய் சக்கரங்களுக்கு பதிலாக, புதிய அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, காரின் வெளிப்புறத் தோற்றத்தை மேம்படுத்துகின்றன.

இந்த எம்பிவி (MPV) காரின் உட்புறத்தில் கொண்டுவரப்பட்ட முக்கியமான மாற்றம் என்று பார்த்தால், அது நன்கு நீளமான, அதிகம் சாய்க்கக்கூடிய 2வது வரிசை இருக்கைகள் ஆகும். இந்த இருக்கைகள் பார்ப்பதற்கு தனி விமானங்களில் இருக்கும் இருக்கைகள் போன்று உள்ளன. இவை, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "டாப் கியர்" (Top Gear) பிராண்டின் இருக்கைகள் ஆகும்.

கப்பல் மூலமாக கொண்டுவரப்பட்ட இந்த இருக்கைகள் சேதமில்லாமல் இருப்பதை உறுதி செய்த பிறகு, காரில் பொருத்தப்பட்டு உள்ளன. 2வது வரிசையில் இருந்த இரண்டு கேப்டன் இருக்கைகளுக்குப் பதிலாக, இந்த புதிய இருக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இது பயணிகளுக்கு பயணத்தின் போது அதிக சவுகரியத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது.

இந்த புதிய பிரத்யேகமான இரு இருக்கைகளிலும் டச் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த பேனல்கள், கேப்டன் இருக்கைக்கு உண்டான மசாஜ், வென்டிலேஷன், ஹீட்டிங் மற்றும் பிற செயல்பாடுகளை வழங்குகின்றன. இவை மட்டுமின்றி, முன் இருக்கைகளின் பின்புறத்தில் மடிக்கக்கூடிய மேசைகளும் புதியதாக பொருத்தப்பட்டுள்ளன. மேலும், முன் இருக்கைகளின் ஹெட்ரெஸ்ட்களுக்குப் பின்னால் நடு வரிசை இருக்கை பயணிகளுக்காக இரண்டு இன்ஃபோடெயின்மென்ட் திரைகளும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இது இன்னோவா ஹைகிராஸ் காரின் எண்ட்ரி-லெவல் வேரியண்ட் என்பதால், இதில் பனோரமிக் சன்ரூஃப் (Panoramic Sunroof) இல்லை. எனவே, கூரையை வெட்டி, புதிய பனோரமிக் சன்ரூஃப் பொருத்தப்பட்டதாக ஷாப் உரிமையாளர் தெரிவித்துள்ளார். சன்ரூஃப் நிறுவியதோடு மட்டுமல்லாமல், ரோல்ஸ் ராய்ஸ் (Rolls-Royce) கார்களில் இருப்பது போன்ற ஸ்டார்லைட் ரூஃப் லைனரையும் புதியதாக சேர்த்துள்ளனர்.

இத்துடன் நிற்காமல், பளபளப்பான மேற்கூரையில் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (XEV 9E) எலெக்ட்ரிக் காரின் கேபின் விளக்குகளையும் புதிதாக வழங்கியுள்ளனர். இத்துடன், கதவு பேட்கள், ஸ்டீயரிங் சக்கரம் மற்றும் டாஷ்போர்டில் பொருத்தமான பாதாம் நிற லெதரெட் அப்ஹோல்ஸ்டரி (Leatherette upholstery) பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜன்னல்கள், கியர் மற்றும் பிற பகுதிகள் போன்ற சிறிய உட்புற ட்ரிம் பாகங்கள் அனைத்தும் ஹைட்ரோ-டிப் செய்யப்பட்டு, காரின் அழகியலை மேம்படுத்துகின்றன. கடைசியாக, இந்த எம்பிவி காருக்கு முழுமையான வெளிப்புறப் பெயிண்ட் திருத்தங்கள் செய்யப்பட்டு, பின்னர் செராமிக் கோட்டிங் பூசப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் டொயோட்டா இன்னோவா கார்களுக்கு கடந்த 15- 20 வருடங்களாகவே தொடர்ந்து வரவேற்பு கிடைத்து வருகிறது. இருப்பினும், மற்ற இன்னோவா கார் உரிமையாளர்களிடம் இருந்து தனித்து தெரிவதற்காக சிலர் இவ்வாறு தங்களது இன்னோவா காரை, தங்களது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். இவ்வாறான மாடிஃபிகேஷன்கள் (Modifications) காரின் செயல்திறனில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதால், இதற்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை. ஆனால், காரின் இன்ஸ்சூரன்ஸ் (Insurance) பாதிக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications









