இந்த மாசம் புது கார் வாங்கலாம்னு இருக்கீங்களா! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நிறைய புது கார் அறிமுகமாக போகுது!!
இந்தியர்களைக் கவரும் விதமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில இந்த 2025 ஏப்ரல் மாதத்தில் புதிய கார்களை விற்பனைக்கு களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஏப்ரல் மாதத்திற்கான அறிமுகப் பட்டியலில் புதுப்பிக்கப்பட்ட மற்றும் புதுமுக கார்கள் என இரண்டு வகை வாகனங்களும் உள்ளன. ஆமாங்க, கடந்த மாதங்களைப் போலவே இந்த ஏப்ரல் மாதத்திலும் நாட்டின் நான்கு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக பல புதிய கார்கள் அறிமுகமாக காத்திருக்கின்றன.
இந்த கார்களில் முக்கியமான மற்றும் இந்தியர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்த டாப் 5 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுமாக இருக்கும் மிக முக்கியமான 5 கார் மாடல்கள் பற்றிய முக்கிய தகவல்களையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி இ-விட்டாரா (Maruti e Vitara): சொல்லவே வேண்டாம் இந்தியர்கள் பலர் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த கார் மாடலுக்காக காத்துக் கெடக்கின்றனர். மாருதி இ விட்டாரா ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். மேலும், இதுவே மாருதி சுஸுகியின் இந்தியாவிற்கான முதல் எலெக்ட்ரிக் கார் மாடலும் ஆகும். இதனாலேயே இந்த காருக்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமும் இருக்கின்றது. மாருதி நிறுவனம் இந்த காரின் உற்பத்தி பணிகளை ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில் இந்த காரை ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் அது ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

மிக முக்கியமாக இதன் வெளியீட்டு நிகழ்வுகூட கடந்த ஜனவரியிலேயே அரங்கேறிவிட்டது. ஆகையால், இந்த கார் கட்டாயம் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுவிடும் என நம்பப்படுகின்றது. ஆனால், அது எந்த நாள் என்பதுதான் இதுவரை யாரும் அறியாத ஒன்றாக உள்ளது. இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி மிகப் பெரிய ரகசியம் காத்து வருகின்றது.
மாருதி சுஸுகி இ-விட்டாராவில் இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 48.8 kWh மற்றும் 61.1 kWh ஆகியவையே அவை ஆகும். இதன் அதிகபட்ச ரேஞ்ச் திறன் 500 கிலோ மீட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ரேஞ்ச் தருவதைப் போலவே பிரீமியம் அம்சங்களையும் இந்த கார் இந்தியாவின் மிக சிறந்த எலெக்ட்ரிக் காராக இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. ஆகையால், இது விற்பனையில் மிகப் பெரிய சாதனைகளை வரும் நாட்களில் படைக்கும் என இப்போதே பலரால் கணிக்கப்பட்டு உள்ளது.
கியா கேரன்ஸ் (Kia Carens): இந்தியர்களின் மனம் கவர்ந்த எம்பிவி ரக கார் மாடல்களில் கேரன்ஸ்-ம் ஒன்றாகும். இந்த காரின் பக்கமே கூடுதலாக வாடிக்கையாளர்களை வளைத்து போடும் நோக்கில் கியா நிறுவனம் அதனை புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வர உள்ளது. ஏற்கனவே, புதுப்பிக்கப்பட்ட கேரன்ஸ் கார் மாடலின் சோதனை ஓட்ட பணிகள் தொடங்கிவிட்டன.

ஆகையால், விரைவிலேயே அது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது இந்த மாதமாகக் கூட இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக, வெளியீடு இந்த மாதத்திலும், விற்பனைக்கான வருகை வரும் ஏப்ரல் மாதத்திலும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புதுப்பித்தலின்கீழ் இந்த கார் மாடலில் அழகிய எல்இடி டிஆர்எல், பம்பர், அப்டேட் செய்யப்பட்ட அலாய் வீல்கள், எல்இடி லைட்டுகள் என பல எதிர்பார்க்கப்படுகின்றன.
ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய துள்ளியமான விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இப்போதைய நிலவரப்படி இந்த கார் மாடல் இரண்டு விதமான பெட்ரோல் மற்றும் ஒற்றை டீசல் எஞ்சின் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதே ஆப்ஷன் புதுப்பிக்கப்பட்ட கேரன்ஸ் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஃபோக்ஸ்வேகன் டிகுவான் ஆர்-லைன் (Volkswagen Tiguan R-Line): ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டிகுவான் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்பு பிரீமியம் கார் காதலர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கூடுதல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு இந்த கார் மாடலில் கூடுதல் ஸ்போர்ட்ஸ் லுக்கைக் கொண்ட வெர்ஷனான டிகுவான் ஆர்-லைன் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது ஃபோக்ஸ்வேகன்.
இந்த வாகனம் முழுமையாக கட்டியமைக்கப்பட்ட ஒன்றாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. எனவே இதன் விலை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் அறிமுகம் வருகின்ற 14 ஆம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது.
தோற்றத்தில் மட்டுமல்ல ஆற்றலை வெளிப்படுத்துவதிலும் வழக்கமான டிகுவான் கார் மாடலைக் காட்டிலும் இது பெஸ்ட்டானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே இந்த டிகுவான் ஆர்-லைன் காரில் எதிர்பார்க்கப்படுகின்றது. அது அதிகபட்சமாக 190 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.
2025 ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq): இந்த கார் மாடலின் அறிமுகம் இந்த மாதம் 16 ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 40 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு விதமான தேர்வுகள் மற்றும் பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, 13 அங்குல டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 அங்குல டிஜிட்டல் டிரைவருக்கான திரை என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆகையால், கோடியாக்-இன் பழைய வெர்ஷனைப் போலவே 2025 கோடியாக்-ம் அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2025 பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் (BMW 2 Series): இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனே இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கின்றது. இதனை உலக அளவில் பிஎம்டபிள்யூ நிறுவனம் விற்பனக்குக் கொண்டு வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இதன் உலக வெளியீடு கடந்த ஆண்டு அக்டோபரிலேயே அரங்கேறிவிட்டது.
ஆனால், இந்தியாவில் இந்த ஏப்ரல் மாதத்திலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது. முன்பு இருந்ததைக் காட்டிலும் சற்றே அதிக கவர்ச்சியான லுக்கை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. அதுமட்டுமல்ல பிரீமியம் மற்றும் ஆடம்பர அம்சங்களையும் சற்றே தாராள மனதுடன் புதிய தலைமுறை 2 சீரிஸ் கொண்டிருக்கின்றது.
அந்தவகையில், மெருகேற்றப்பட்ட கிரில், 18 அங்குல அலாய் வீல், எல்இடி பின் பக்க லைட் மற்றும் கூடுதல் நீளமான-உயரமான உருவம் ஆகியவற்றை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. எனவே இட வசதியிலும் கூடுதல் சௌகரியமானதாக புதிய 2 சீரிஸ் கார் மாடல் இருக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த ஏப்ரல் மாதத்தில் காரை வாங்கும் பிளானில் இருக்கின்றீர்கள் என்றால் உங்களுக்காக விலை அதிகமான மற்றும் விலை குறைவான என அனைத்து வகை வாகனங்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஆகையால், கார் காதலர்களுக்கு இந்த ஏப்ரல் மாதமும் விருந்தளிக்கும் மாதமாக இருக்கக் கூடும் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications









