இவையே இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் டாப் 5 காம்பேக்ட் எஸ்யூவி கார்கள்.. ஐந்துமே பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்!
இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Transmission) வசதிக் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக, பெட்ரோல் எஞ்சின் (Petrol Motor) உடன் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு நாட்டில் இரட்டிப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என கூறலாம். இந்த பதிவில் பெட்ரோல் எஞ்சின், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் விற்பனைக்குக் கிடைக்கும் அதிகம் மைலேஜ் தரும் டாப் ஐந்து கார் மாடல்களைப் பற்றிய தகவலையே பார்க்க இருக்கின்றோம்.
இந்த ஐந்துமே காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் (Compact SUV Car) மாடல்கள் ஆகும். இவற்றின் விலை விபரம், மைலேஜ் விபரம் மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza): இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் காம்பேக்ட் எஸ்யூவி ரக ஆட்டோமேட்டிக் பெட்ரோல் கார் மாடல்களில் இந்த கார் மாடல் முன்னணியில் உள்ளது. இது ஒரு லிட்டர் ஒன்றிற்கே 19.80 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.
பிரெஸ்ஸா, இந்தியாவில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எல்எக்ஸ்ஐ (LXi), விஎக்ஸ்ஐ (VXi), இசட்எக்ஸ்ஐ (ZXi) மற்றும் இசட்எக்ஸ்ஐ பிளஸ் (ZXi+) ஆகியவையே அவை ஆகும். 1.5 லிட்டர், கே15சி ரக மோட்டாரே இந்த கார் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 103 பிஎச்பி மற்றும் 137 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இதன் ஆரம்ப விலை ரூ. 11.15 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
கியா சொனெட் (Kia Sonet): இந்த கார் மாடலின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 19.20 கிமீ வரையில் மைலேஜ் தருகின்றது. இதனால்தான் மாருதி பிரெஸ்ஸாவிற்கு அடுத்த இடத்தை இந்த பட்டியலில் சொனெட் பிடித்திருக்கின்றது. இந்த காரை பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமல்ல டீசல் ஆப்ஷனிலும் வாங்கிக் கொள்ள முடியும்.
குறிப்பாக, 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இதேபோல், 5 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஐஎம்டி மற்றும் 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த கார் ரூ. 12.70 லட்சம் தொடங்கி ரூ. 15 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO): இந்த கார் மாடலின் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 17.96 கிமீ முதல் 18.2 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது. கியா சொனெட் கார் இந்தியாவில் ரூ. 9.50 லட்சம் தொடங்கி ரூ. 13.94 லட்சம் வரையிலான விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த காரை இந்தியாவில் மொத்தமாக மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): இதன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு அதிகபட்சமாக 18.31 கிமீ வரையில் மைலேஜை வழங்கும். இந்த கார் மாடலும் இந்தியாவில் பன்முக எஞ்சின் தேர்வுகள் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவையே அவை ஆகும். இதன் ஆரம்ப விலை ரூ. 11.95லட்சம் ஆகும்.
டாடா நெக்ஸான் (Tata Nexon): நம்முடைய இந்த அதிகம் மைலேஜ் தரும் கார்களின் பட்டியலில் கடைசியாக இடம் பிடித்திருக்கும் இந்த கார் மைலேஜ் தருவதில் மட்டுமல்ல பாதுகாப்பை தருவதிலும் மிக சிறந்த கார் மாடலாகக் காட்சியளிக்கின்றது. இதன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 17.18 கிமீ வரையில் மைலேஜ் தரும்.
இதன் ஆரம்ப விலையே ரூ. 9.60 லட்சம் ஆகும். பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. டாடா மோட்டார்ஸின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடலாக இதுவே உள்ளது. இந்த கார் பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் என பலதரப்பட்ட அவதாரங்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெட்ரோல் ஆட்டோமேட்டிக் கார்களில் அதிகம் மைலேஜை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற கார் மாடல்களையே இந்த பதிவில் வழங்கி இருக்கின்றோம். குறிப்பாக, எஸ்யூவி கார்களை அதிகம் நேசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஜாக்பாட்டாக இந்த கார் மாடல்கள் இருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இந்த கார்களில் ஒன்றை வாங்கினால் அதிகம் மைலேஜை பெறுவதோடு, பணத்தையும் மிச்சப்படுத்திக்க முடியும்.


Click it and Unblock the Notifications








