இந்தியர்கள் எலெக்ட்ரிக் கார்களை அதிகம் வாங்குறது இல்லனு யாருங்க சொன்னா? இந்த 3 பிராண்டுக்கு தான் நல்ல வரவேற்பு
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை, 2025 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், வலுவான வளர்ச்சிப் போக்கைக் கண்டிருக்கிறது. அரசாங்கத்தின் ஆதரவான கொள்கைகள், மேம்பட்ட சார்ஜிங் கட்டமைப்பு, பேட்டரி விலைக் குறைவு மற்றும் அதிக தூரம் செல்லும் புதிய எலெக்ட்ரிக் கார்களின் அறிமுகம் ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் சந்தையில் முன்னணியில் நிற்கிறது. அதைத் தொடர்ந்து எம்ஜி மோட்டார், மஹிந்திரா, ஹூண்டாய் மற்றும் பிஒய்டி ஆகிய நிறுவனங்கள் உள்ளன. கியா நிறுவனமும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேசமயம், எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடிஸ் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

டாடா மோட்டார்ஸ் அதன் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் கார்களுடன் 38.56% சந்தைப் பங்கைப் பெற்று, வலுவான தலைமையை நிலைநிறுத்தியுள்ளது. ஏப்ரலில் 4,436 யூனிட்டுகளாக இருந்த டாடா மோட்டார்ஸின் மாத விற்பனை, அக்டோபரில் 7,239 யூனிட்டுகளாக உயர்ந்து, சீரான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. பஞ்ச் இவி, நெக்ஸான் இவி, கர்வ் இவி, டியாகோ இவி, டிகோர் இவி மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஹாரியர் இவி போன்ற டாடா எலெக்ட்ரிக் கார்கள் இந்த வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி உள்ளன.
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் 28.39% சந்தைப் பங்கைப் பிடித்து, இரண்டாவது இடத்தில் உள்ளது. காமட் இவி, வின்ட்சர் இவி முதல் பிரீமியம் தரத்திலான இசட்.எஸ் இவி, எம்9 இவி, சைபர்ஸ்டர் வரையிலான அதன் பல்வேறு மாடல்கள் இதற்கு உதவின. இந்த ஆண்டு 1 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை இலக்கை எம்ஜி நிறுவனம் கடந்துள்ளது. இதற்கு வின்ட்சர் இவி எலெக்ட்ரிக் காரின் அதிக தேவை முக்கிய காரணம் ஆகும்.

கடந்த ஜூலையில் 5,089 யூனிட்டுகளாக உச்சம் தொட்ட விண்ட்சர் இவி காரின் விற்பனை, அக்டோபரில் 4,549 யூனிட்டுகளாக சற்று குறைந்திருந்தாலும், கடந்த ஏழு மாத காலத்தில் மொத்தமாக 29,530 விண்ட்சர் இவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திரா நிறுவனம் ஏப்ரலில் 2,979 யூனிட்டுகளில் இருந்து அக்டோபரில் 3,911 யூனிட்டுகளாகச் சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மொத்தம் 22,141 யூனிட்டுகள் விற்பனையாகி, 21.29% சந்தைப் பங்கைப் பெற்றுள்ள மஹிந்திரா, எக்ஸ்யூவி400 மற்றும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களான எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ 6 மூலம் சந்தையில் ஆர்வத்தைத் தக்கவைத்து வருகிறது. இந்த வரிசையில் மஹிந்திராவுக்கு அடுத்துள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஏப்ரலில் 677 யூனிட்டுகளுடன் தொடங்கிய இந்த நிறுவனத்தின் விற்பனை, அக்டோபரில் 444 யூனிட்டுகளாகக் குறைந்தது.

எலெக்ட்ரிக் கார்கள் சந்தையில் ஹூண்டாயின் பங்கு தற்போது 3.64% ஆகும். 2025 ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எலெக்ட்ரிக் கார் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெறவில்லை. பிஒய்டி (BYD) நிறுவனம் அதன் நான்கு எலெக்ட்ரிக் கார் மாடல்களான அட்டோ 3, இ6/ இமாக்ஸ்-7, சீல், சீலயன் 7 மூலம் அக்டோபரில் 570 எலெக்ட்ரிக் கார்களையும், கடந்த ஏழு மாதங்களில் மொத்தமாக 3,342 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையையும் பதிவு செய்துள்ளது.
பிஒய்டி 3.21% சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது. கியா இந்தியா நிறுவனம், இவி6 மற்றும் கேரன்ஸ் கிளாவிஸ் இவி என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே கொண்டிருந்தாலும், ஏப்ரலில் 31 யூனிட்டுகளில் இருந்து அக்டோபரில் 656 யூனிட்டுகளாகப் பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 1,763 கியா எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

| OEM | Apr'25 | May'25 | Jun'25 | Jul'25 | Aug'25 | Sep'25 | Oct'25 | Total | Market Share (%) |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| Tata Motors | 4436 | 4351 | 4708 | 6047 | 7111 | 6216 | 7239 | 40108 | 38.56 |
| JSW MG Motor | 3462 | 3765 | 3972 | 5089 | 4781 | 3912 | 4549 | 29530 | 28.39 |
| Mahindra | 2979 | 2632 | 3029 | 2835 | 3512 | 3243 | 3911 | 22141 | 21.29 |
| Hyundai | 677 | 606 | 512 | 613 | 588 | 349 | 444 | 3789 | 3.64 |
| BYD | 346 | 494 | 476 | 459 | 450 | 547 | 570 | 3342 | 3.21 |
| BMW | 126 | 174 | 214 | 234 | 368 | 310 | 310 | 1736 | 1.67 |
| Kia | 31 | 26 | 41 | 57 | 446 | 506 | 656 | 1763 | 1.69 |
| Mercedes-Benz | 80 | 88 | 94 | 86 | 77 | 97 | 90 | 612 | 0.59 |
| PCA Automobiles | 48 | 123 | 80 | 42 | 21 | 36 | 350 | 0.34 | |
| Volvo | 35 | 33 | 22 | 41 | 16 | 23 | 20 | 190 | 0.18 |
| VinFast | 131 | 131 | 0.13 | ||||||
| Stellantis | 52 | 52 | 0.05 | ||||||
| Tesla | 64 | 40 | 104 | 0.1 | |||||
| Others | 13 | 12 | 30 | 25 | 23 | 26 | 43 | 172 | 0.17 |
| Total : - | 12233 | 12304 | 13178 | 15528 | 17393 | 15329 | 18055 | 104020 | 100.00 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போதைக்கு இவைதான் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகும். இவை இல்லாமல், சொகுசு எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களும் உள்ளன. அவற்றை கணக்கில் எடுத்தால் இந்த லிஸ்ட் இன்னும் நீண்டுக்கொண்டே போகும். இந்தியாவில் கடந்த 7 மாதங்களில் மொத்தம் 1 லட்சத்து 4,020 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications









