மாருதி ஷோரூம்களை மக்கள் ஈ போல் மொய்ப்பதற்கு இதுதான் காரணம்! 10 லட்ச ரூபாய்க்குள் இத்தனை கார்களா!!
கடந்த 2025 அக்டோபர் மாதத்தில், வழக்கம்போல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 318 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது, 2024 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையை விட 10.48% அதிகமாகும்.
மாருதி சுஸுகியில் அதிகம் விற்பனையான கார்களில், 10 லட்சம் ரூபாய்க்குள் கிடைக்கும் கார்களில் டிசையர், எர்டிகா, வேகன் ஆர், மற்றும் ஃபிரான்க்ஸ் ஆகியவை முன்னணியில் உள்ளன. இந்த கார் மாடல்கள் அவற்றின் எரிபொருள் திறன், குறைந்த பராமரிப்பு செலவு மற்றும் அன்றாட பயன்பாட்டுக்கு ஏற்ற தன்மையால் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

மாருதி சுஸுகி டிசையர் (Dzire): இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரே செடான் காரான இது, கடந்த அக்டோபரில் 20,791 யூனிட்கள் விற்கப்பட்டு, மாருதி சுஸுகி நிறுவனத்தின் கடந்த மாத விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மாருதியின் காம்பாக்ட் செடான் காரான இதன் விலை தற்சமயம் சுமார் ரூ.6.26 லட்சம் முதல் ரூ.9.31 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.

மாருதி சுஸுகி எர்டிகா (Ertiga): இந்தியாவின் பிரபலமான எம்பிவி (மல்டி-பர்ப்பஸ் வெஹிக்கிள்) காரான இது கடந்த மாதத்தில் 20,087 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இதன் உயர் ரக வேரியண்ட்கள் ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்கு மேல் இருந்தாலும், இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்கள் ரூ.8.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் கிடைக்கின்றன.

மாருதி சுஸுகி வேகன் ஆர் (Wagon R): மாருதி சுஸுகியின் இந்த உயரமான ஹேட்ச்பேக் கார் கடந்த அக்டோபரில் 18,970 யூனிட்கள் விற்கப்பட்டு, பொதுமக்களின் விருப்பமான காராகத் தொடர்கிறது. வேகன் ஆரின் விலை ரூ.4.99 லட்சம் முதல் ரூ.6.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை தற்சமயம் உள்ளது.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx): மார்க்கெட்டில் பிரபலமான மாருதி சுஸுகி பலேனோவை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராஸ்ஓவர் கார் கடந்த மாதத்தில் 17,003 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் பல வேரியண்ட்கள் 10 லட்சம் ரூபாய் வரம்புக்குள் வருகின்றன. கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த காரின் ஆரம்ப விலை ரூ.6.85 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

மாருதி சுஸுகி பலேனோ (Baleno): இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் சிறந்து விளங்கும் இந்த காரை கடந்த அக்டோபர் மாதத்தில் 16,873 யூனிட்கள் மாருதி சுஸுகி விற்றுள்ளது. தற்சமயம், இதன் விலைகள் ரூ.5.99 லட்சம் முதல் ரூ.9.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருப்பதால், பலேனோவின் அனைத்து வேரியண்ட்களும் ரூ.10 லட்சம் பட்ஜெட்டுக்குள் அடங்குகின்றன.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Swift): மாருதி சுஸுகியின் இந்த பிரபலமான ஹேட்ச்பேக் கார் கடந்த மாதத்தில் 15,542 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியான தோற்றம் மற்றும் எரிபொருள் திறனுக்காக அறியப்படும் ஸ்விஃப்ட் கார், ரூ.5.79 லட்சம் முதல் ரூ.8.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு மாதத்திலும் 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலமே அதன் விலை குறைவான, நல்ல மைலேஜ் தரக்கூடிய கார்கள் ஆகும். அந்த அளவிற்கு இந்த தொகுப்பில் பார்த்தவை மட்டுமல்லாமல், ரூ.10 லட்சத்திற்குள்ளான விலையில் இன்னும் சில மாருதி சுஸுகி கார்களும் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications









