பிரம்மாண்டமான தோற்றம் மட்டுமல்ல, விலையும் 10 லட்ச ரூபாய்க்குள்! எம்பிவி கார்களை கேள்விப்பட்டு இருக்கீங்களா?
2025 அக்டோபர் மாதத்தில், இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் அதிகம் விற்பனையான மல்டி-பர்பஸ் வாகன (MPV) கார் மாடல்களில், மாருதி சுஸுகி எர்டிகா முதலிடத்தைப் பிடித்துள்ளது. மஹிந்திரா பொலேரோ (நியோ மாடலுடன் சேர்த்து) மற்றும் மாருதி சுஸுகி ஈக்கோ ஆகியவையும் கணிசமான விற்பனையை கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளன.
மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga): இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி கார் இது ஆகும். அந்த அளவிற்கு, கடந்த பல வருடங்களாகவே இந்தியாவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் அளவில் பெரியதான காரை குறைந்த விலையில் எதிர்பார்ப்போருக்கான காராக எர்டிகா விளங்குகிறது.

கடந்த 2025 அக்டோபரில் புதிய மேம்படுத்தப்பட்ட எர்டிகா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் 20,087 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் உட்புறத்தில் அதிக இடவசதி, ஏழு இருக்கைகள் மற்றும் சிறந்த மைலேஜ் (குறிப்பாக CNG வேரியண்ட்டில்) உள்ளிட்டவை வாடிக்கையாளர்களிடையே மிகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. எர்டிகா பெட்ரோல் காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.80 லட்சம் ஆகும்.
மஹிந்திரா பொலேரோ/ பொலேரோ நியோ (Mahindra Bolero/ Bolero Neo): பெயரில் ஒரே மாதிரியாக இருந்தாலும், தோற்றத்தில் இவை இரண்டும் வேறுப்படுகின்றன. ஏனெனில், பொலேரோ நியோ ஆனது முன்பு விற்பனையில் இருந்த டியூவி300 காரின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்டது. இது தோற்றத்தில் நீள் செவ்வக வடிவில் இருக்க, 20 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் பொலேரோ ஆனது வழக்கமான பெட்டகம் வடிவில் உள்ளது.

உறுதியான தோற்றத்திற்கு பெயர் போன மஹிந்திரா பொலேரோ மற்றும் பொலேரோ நியோ கார்களின் மொத்த விற்பனை 2025 அக்டோபரில் 14,343 யூனிட்களை எட்டியுள்ளது. இது முந்தைய மாதத்தை விட குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஆகும். கடினமான இந்திய சாலைகளுக்கு ஏற்ற வலிமைமிக்க காராக அறியப்படும் இந்த பொலேரோ கார்களின் ஆரம்ப விலை சுமார் ரூ.7.99 லட்சம் ஆகும்.
மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco): மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேன் மாடல், ஈக்கோ ஆகும். பொருட்களை கொண்டு செல்வதற்கான கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமன்றி, பயணிகளை அழைத்து செல்லும் வேனாகவும் ஈக்கோ விற்பனை செய்யப்படுகிறது. 5 மற்றும் 6 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கும் ஈக்கோ பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

மிகவும் பயனுள்ள இந்த வேன் 2025 அக்டோபர் மாதத்தில் 13,537 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது பயணிகள் மற்றும் சரக்கு பயன்பாட்டிற்கு ஏற்ற சிக்கனமான மற்றும் பல்துறை வாகனம் ஆகும். இதன் போட்டித்தன்மை வாய்ந்த ஆரம்ப விலை சுமார் ரூ.5.21 லட்சம் ஆக தற்சமயம் உள்ளது.

ரெனால்ட் டிரைபர் (Renault Triber): இது ஒரு தனித்துவமான, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட எம்பிவி ரக கார் ஆகும். இது ஏழு இருக்கை வசதியை வழங்குகிறது. மேலும் 4-நட்சத்திர குளோபல் NCAP பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. வெறும் ரூ.5.76 லட்சம் ஆரம்ப விலையில் இது ஒரு சிறந்த மதிப்புமிக்க தேர்வாக உள்ளது. 2025 அக்டோபரில் 3,170 டிரைபர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்லாவற்றிற்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்றவாறு எம்பிவி ரக காரை வாங்கும் எண்ணம் நம்மில் பலருக்கு உள்ளது. அத்தகைய ரக கார்கள் ரூ.10 லட்சத்திற்குள் கிடைப்பதினாலேயே இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்ட எம்பிவி கார்கள் சிறப்பாக விற்பனையாகி உள்ளன. இருப்பினும், குறைந்த விலையில் கிடைக்கும் ரெனால்ட் டிரைபர் எம்பிவி காரின் விற்பனை எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருகிறது.


Click it and Unblock the Notifications









