10 லட்ச ரூபாய்க்குள் எல்லாரும் வாங்கும் எஸ்யூவி கார்கள்! கடைசி இடத்தில் மஹிந்திரா கார்!
ஆகஸ்ட் 2025 (August 2025) விற்பனை புள்ளி விவரங்களின்படி, ரூ.10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாப் எஸ்யூவி (SUV) கார்கள் பட்டியலில் டாடா நெக்ஸான் (Tata Nexon), மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் (Fronx), டாடா பன்ச் (Punch), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) ஆகியன முன்னணியில் உள்ளன.
இந்த விற்பனை விவரங்கள், டீலர்ஷிப்களுக்கு உற்பத்தியாளர்கள் அனுப்பிய வாகனங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். பெரும்பாலான பிரபலமான எஸ்யூவி கார்களின் ஆரம்ப நிலை வேரியண்ட்கள் ரூ.10 லட்சத்திற்குள்ளான பட்ஜெட்டில் கிடைக்கின்றன. அவற்றையும், அவற்றின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான்: டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சப்-காம்பெக்ட் (Sub-Compact) எஸ்யூவி காரான நெக்ஸானின் ஆரம்ப விலை ரூ.8.00 லட்சம் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் இதன் அனைத்து வேரியண்ட்களின் மொத்த விற்பனை 14,004 யூனிட்களாகும். ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு அடுத்து கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையான 2வது எஸ்யூவி கார், நெக்ஸான் ஆகும்.

மாருதி சுசுகி பிரெஸ்ஸா: நெக்ஸானுக்கு போட்டியாக மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்யும் பிரெஸ்ஸாவின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) தற்சமயம் ரூ.8.69 லட்சமாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாத மொத்த விற்பனை 13,620 யூனிட்கள் ஆகும். ஒட்டுமொத்தமாக எஸ்யூவி கார்கள் விற்பனையில் நெக்ஸானுக்கு அடுத்து 3வது இடத்தை பிரெஸ்ஸா பிடித்துள்ளது.

மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ்: இதை எஸ்யூவி கார் என சொல்ல முடியாது. ஏனெனில், ஃபிரான்க்ஸ் வித்தியாசமான கிராஸ்ஓவர் வடிவத்தை கொண்டது. இதன் ஆரம்ப விலை ரூ.7.58 லட்சம் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 12,422 ஃபிரான்க்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

டாடா பன்ச்: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் அளவில் சிறிய காரான பன்ச்சின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.00 லட்சம் ஆகும். ஆகஸ்ட் மாதத்தில் மொத்த 10,704 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட பன்ச் காரின் விற்பனை 2024 ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் சுமார் 32% குறைந்துள்ளது.

ஹூண்டாய் வென்யூ: ஹூண்டாய் நிறுவனத்தின் சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார் இதுவாகும். வென்யூ காரின் ஆரம்ப விலை ரூ.7.94 லட்சமாக உள்ளது. வென்யூவின் ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கை 8,109 ஆகும். இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தை பிடித்து இருப்பினும், ஒட்டுமொத்த எஸ்யூவி கார்கள் விற்பனையில் 8வது இடத்தில் வென்யூ உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ: வென்யூவுக்கு அடுத்து 9வது இடத்தில் இருக்கும் இந்த மஹிந்திரா கார் இந்த வரிசையில் 6வது இடத்தில் உள்ளது. இன்னும் சொல்லப்போனால், வென்யூவும், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரும் ஒரே மாதிரியான விற்பனை எண்ணிக்கையை (8,109) தான் கடந்த மாதத்தில் பதிவு செய்துள்ளன. எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூ.10 லட்சத்திற்குள் இத்தனை எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சிலவற்றின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்பதால் அவற்றை இந்த லிஸ்ட்டில் பார்க்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கைகளின்படி பார்க்கும்போது, கடந்த ஆண்டில் ஆதிக்கம் செலுத்திவந்த டாடா பஞ்ச் காரின் விற்பனை குறைந்துக் கொண்டே வருவதை அறிய முடிகிறது. அதேபோல், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் அனைத்து வேரியண்ட்களின் விற்பனையும் குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









