உலகையே மிரள விட்ட 36 கிமீ மைலேஜ் கார் இந்தியாவுக்கு வருது! விலை இவ்ளோதானா! மொத்த நாடே வெயிட்டிங்!
இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மிகவும் விலை குறைவான அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். எனவே அப்படிப்பட்ட கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், டொயோட்டா (Toyota) நிறுவனமும் ஒன்று.
டொயோட்டா நிறுவனம் அதிக மைலேஜ் வழங்க கூடிய பல்வேறு ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களை, ஓரளவிற்கு குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக டொயோட்டா அக்வா ஹைப்ரிட் (Toyota Aqua Hybrid) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஜப்பான் (Japan) போன்ற சர்வதேச சந்தைகளில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்த ஹைப்ரிட் கார் ஆகும். உலகின் மிகவும் விலை குறைவான ஸ்ட்ராங் ஹைப்ரிட் கார்களில் ஒன்று என்ற பெருமையை டொயோட்டா அக்வா தற்போது தன்வசம் வைத்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் (Delhi) டொயோட்டா அக்வா ஹைப்ரிட் காரின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சூழலில், அதே டெல்லி சாலைகளில் தற்போது மீண்டும் ஒரு முறை டொயோட்டா அக்வா ஹைப்ரிட் கார் தென்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) Throttle Pilot யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் டொயோட்டா அக்வா ஹைப்ரிட் கார் சோதனை செய்யப்பட்டு வருவதற்கு பின்னால் 2 முக்கியமான காரணங்கள் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். ஒன்று இந்த கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். அல்லது அதன் ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டும் ஒரு சில டொயோட்டா கார்களில் வழங்கப்படலாம்.
டொயோட்டா கார்களில் வழங்கப்பட்டால், மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் கார்களிலும் இந்த ஸ்ட்ராங் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த 2 நிறுவனங்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே கூட்டணி இருந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டொயோட்டா அக்வா ஹைப்ரிட் காரில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் உடன் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 35.80 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இது சிறப்பான மைலேஜ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. ஒரு வேளை டொயோட்டா அக்வா கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதன் ஆரம்ப விலை 11-12.50 லட்ச ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா அக்வா ஹைப்ரிட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம். ஏனெனில் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஸ்ட்ராங் ஹைப்ரிட் ஆப்ஷன் என்பது இந்திய வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒரு விஷயமாக இருக்கலாம். ஆனால் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருமா? என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள டொயோட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை நாம் காத்திருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








