காரின் விற்பனையை அதிகரிக்க டொயோட்டாவுக்கு வேற வழி தெரியல! மிகவும் யோசித்து எடுக்கப்பட்ட முடிவு!
டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார், காம்ரி (Camry) ஆகும். உலகளவில் மிகுந்த வரவேற்பை பெற்ற டொயோட்டா காம்ரி காரின் அதிகப்படியான விலையின் காரணமாகவே இந்தியாவில் இந்த காருக்கு பெரியதாக வரவேற்பு கிடைக்காமல் உள்ளது. இந்த நிலையில், காம்ரியில் புதியதாக 'ஸ்பிரிண்ட் எடிசன்' (Sprint Edition) என்கிற பெயரில் புதிய ஸ்பெஷல் எடிசனை டொயோட்டா அறிமுகம் செய்துள்ளது.
புதிய காம்ரி ஸ்பிரிண்ட் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.48 லட்சத்து 50 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஸ்பெஷல் எடிசன் என கூறுவதை காட்டிலும், லிமிடெட் எடிசன் என்றுதான் கூற வேண்டும். ஏனெனில், புதிய காம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் கார் குறுகிய காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.

டொயோட்டா காம்ரி கார் ஏற்கனவே பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக இருக்கக்கூடியது ஆகும். அப்படியிருக்க, புதிய காம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் ஆனது அதனை காட்டிலும் ஸ்டைலிஷான தோற்றத்தில் கொண்டுவரப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி, காம்ரி காருக்கே உண்டான ஹைப்ரீட் (Hybrid) திறன் மற்றும் சவுகரியமான பயணத்திற்கான வசதிகள் யாவும் புதிய ஸ்பிரிண்ட் எடிசனிலும் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய காம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் எமோஷ்னல் சிவப்பு, பிளாட்டினம் வெள்ளை பேர்ல் என மொத்தம் 5 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும். இவை அனைத்திலும் காரின் பாதி பகுதிகள் மேட் கருப்பு நிறத்தில் கிடைக்கும். அதாவது, காரின் முன்பக்க பொனெட், மேற்கூரை மற்றும் பூட் லிட் (Boot lid) பகுதி உள்ளிட்டவை மேட் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.
அதேநேரம், காரின் அலாய் சக்கரங்களும் மேட் கருப்பு நிறத்தில் கிடைக்கும். இத்தகைய பெயிண்ட் உடன் முன்பக்க & பின்பக்க பாடி கிட்கள் மற்றும் பின்பக்க ஸ்பாய்லர் உள்ளிட்டவை அடங்கிய பிரத்யேகமான ஸ்போர்ட்ஸ் கிட்டையும் புதிய காம்ரி ஸ்பிரிண்ட் எடிசனில் பெறலாம். காருக்கு உள்ளே கேபினை சுற்றிலும் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
டொயோட்டாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம்களிலேயே பொருத்தி வழங்கப்படும் இந்த விளக்குகளில் காரின் கதவுகள் சரியாக மூடவில்லை என்றால் அதுகுறித்து எச்சரிக்கும் விளக்குகளும் அடங்குகின்றன. டொயோட்டாவின் லக்சரியான செடான் ரக காரான காம்ரியில் வெண்டிலேட்டட் வசதி கொண்ட முன் இருக்கைகள், மெமரி வசதி உடன் 10 வழிகளில் அட்ஜெஸ் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை வழங்கப்படுகின்றன.
இவற்றுடன், பெடில் ஷிஃப்டர்கள், வயர்லெஸ் சார்ஜர், ஹெட்ஸ்-அப் டிஸ்பிளே மற்றும் ஏற்கனவே கூறியதுபோல் கேபினை சுற்றிலும் விளக்குகளும் பொருத்தப்படுகின்றன. பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில், 9 ஏர்பேக்குகள், 360-டிகிரி கேமரா, டைனாமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல், லேன் டிரேசிங் அசிஸ்ட் மற்றும் டயர்களில் காற்றழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்கும் வசதி உள்ளிட்டவை காம்ரியில் வழங்கப்படுகின்றன.
காம்ரியின் புதிய ஸ்பிரிண்ட் எடிசன் வழக்கமான 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரீட் என்ஜின் மற்றும் இ-சிவிடி (e-CVT) கியர்பாக்ஸ் உடன் கிடைக்கும். அதிகப்பட்சமாக 230 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை வழங்கக்கூடிய இந்த ஹைப்ரீட் சிஸ்டத்தை பெற்றுள்ள காம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் காரை விருப்பப்படுபவர்கள் டொயோட்டாவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் வாயிலாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள டொயோட்டா டீலர்ஷிப் ஷோரூம் மூலமாகவோ புக் செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டா காம்ரியின் விற்பனையை அதிகரிக்கும் முயற்சியாகவே இத்தகைய ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தோற்றத்தில் புதிய காம்ரி ஸ்பிரிண்ட் எடிசன் அசத்தலாக உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் அறிமுகத்திற்கு பிறகாவது இந்தியாவில் காம்ரி காரின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications








