இன்னோவா கார் என்றாலே கடன் வாங்கியாச்சும் வாங்கிவிடும் மக்கள்! டொயோட்டா அடிப்பது எல்லாம் சிக்ஸ் தான்
டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம். சுஸுகி (Suzuki) உடன் இணைந்து செயல்பட்டுவரும் டொயோட்டா, இந்தியாவிலும் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் டொயோட்டா கார்களின் விற்பனை ஆனது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 ஜனவரி மாதத்தில் எத்தனை டொயோட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
டொயோட்டாவில் இருந்து தற்சமயம் இந்தியாவில் 10 விதமான கார் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார் மட்டும் கடந்த மாதத்தில் ஒரு யூனிட் கூட விற்பனை செய்யப்படவில்லை. மற்ற 9 கார்களும் கடந்த ஜனவரி மாதத்தில் மொத்தம் 26 ஆயிரத்து 178 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதுவே கடந்த 2024ஆம் ஆண்டில் இதே ஜனவரி மாதத்தில் 23 ஆயிரத்து 197 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, டொயோட்டா கார்கள் விற்பனை ஆனது 13%, அதாவது கடந்த ஆண்டு ஜனவரியை காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரியில் 2,981 கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வழக்கம்போல் கடந்த ஜனவரியிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார், இன்னோவா (Innova) ஆகும். இன்னோவா கிரிஸ்ட்டா, இன்னோவா ஹைகிராஸ் என 2 விதமான இன்னோவா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், இன்னோவா ஹைகிராஸ் ஆனது ஹைப்ரீட் (Hybrid) ரக கார் ஆகும்.

இவை இரண்டும் மொத்தமாக கடந்த ஜனவரி மாதத்தில் 9 ஆயிரத்து 780 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2024 ஜனவரியில் 9,400 இன்னோவா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த மாதத்தில் 380 இன்னோவா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இன்னோவாவிற்கு அடுத்து 2வது இடத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் 4,941 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதாவது, முதலிடத்தில் உள்ள இன்னோவாவிற்கும், ஹைரைடருக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது. 2024 ஜனவரி மாதத்தில் 5,543 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 3வது மற்றும் 4வது இடங்களில் கிளான்ஸா மற்றும் ஃபார்ச்சூனர் கார்கள் உள்ளன.

இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 3,455 மற்றும் 3,149 ஆகும். 5வது இடத்தில் 2,740 யூனிட்கள் விற்பனை உடன் லேட்டஸ்ட் டொயோட்டா காரான டைசர் உள்ளது. இவை இல்லாமல், 1,944 ரூமியன் கார்கள், 239 ஹிலுக்ஸ் பிக்-அப் டிரக் வாகனங்கள், 197 காம்ரி கார்கள் மற்றும் 3 வெல்ஃபையர் கார்களையும் கடந்த மாதத்தில் டொயோட்டா விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இன்னோவா கார்களுக்கே தொடர்ந்து வரவேற்பு கிடைக்கும் என்பது மீண்டும் ஒருமுறை உறுதியாகி உள்ளது. அதேநேரம், டொயோட்டாவின் சமீபத்திய அறிமுகங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உண்மையில் சொல்லப்போனால், புதிய அறிமுகங்கள் தான் 2024 ஜனவரியை காட்டிலும் டொயோட்டாவின் விற்பனை எண்ணிக்கையை அதிகரித்துள்ளன.


Click it and Unblock the Notifications









