31 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை இந்த ரேட்ல விக்கறாங்களா! இதுக்கு மேலயும் மாருதி காரை வாங்கணுமா?
இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்களை, டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது. அப்படி டொயோட்டா நிறுவனத்தால் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் ஒரு மாருதி சுஸுகி கார்தான் டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza).
இது மாருதி சுஸுகி பலேனோ காரின் (Maruti Suzuki Baleno) ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். தற்போதைய நிலையில் டொயோட்டா நிறுவனத்திற்கு ஒவ்வொரு மாதமும் அதிக விற்பனை எண்ணிக்கையை ஈட்டி தந்து கொண்டுள்ள கார்களில் க்ளான்சாவும் ஒன்றாக உள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதமும், டொயோட்டா க்ளான்சா கார் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து அசத்தியுள்ளது.

காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட்படி (Sales Report) பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 3,299 டொயோட்டா க்ளான்சா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த எண்ணிக்கை, 3,246 ஆக இருந்தது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 53 டொயோட்டா க்ளான்சா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் டொயோட்டா க்ளான்சா கார் விற்பனையில் 2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், டொயோட்டா க்ளான்சா காரின் ஆரம்ப விலை, வெறும் 6.39 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டொயோட்டா க்ளான்சா காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.15 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை அனைத்துமே டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-showroom Price) ஆகும்.
அதேசமயம் டொயோட்டா க்ளான்சா காரின் சிஎன்ஜி வேரியண்ட்கள் ஒரு கிலோவிற்கு 30.61 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) தரும் எனவும், டொயோட்டா இந்தியா நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் அதிக மைலேஜ் வழங்க கூடிய ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் ரக காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு டொயோட்டா க்ளான்சா மிகவும் ஏற்றதாக இருக்கும்.
டொயோட்டா க்ளான்சா காரில் பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், வெய்கில் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் ஹில் ஹோல்டு கண்ட்ரோல் போன்ற பாதுகாப்பு வசதிகள் (Safety Features) எல்லாம் வழங்கப்படுகின்றன. அத்துடன் 22.86 செமீ டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 360 டிகிரி வியூ கேமரா போன்ற வசதிகளும் கொடுக்கப்படுகின்றன. எனவே இது நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி பலேனோ, ஹூண்டாய் ஐ20 மற்றும் டாடா அல்ட்ராஸ் போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களுக்கு மாற்றாக ஒரு காரை நீங்கள் தேடி கொண்டிருந்தால், உங்களுக்கு டொயோட்டா க்ளான்சா மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








