நாலு பக்கம் இருக்குறது மொத்தமும் பாதுகாப்பு கவசம்! எமனுக்கே சவால்விடும் டொயோட்டா காரின் ரிசல்ட் வந்தாச்சு!
டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் பிரபலமான காராக இன்னோவா (Innova) விளங்குகிறது. கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் இன்னோவா கார்கள் இன்னோவா கிரிஸ்ட்டா, இன்னோவா ஹைகிராஸ் என வெவ்வேறான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், இன்னோவா ஹைகிராஸ் ஆனது டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கடந்த சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்த லேட்டஸ்ட் இன்னோவா கார் ஆகும். இந்த காரின் பெயரில் உள்ள 'ஹைகிராஸ்' (Hycross) என்பது காரில் பொருத்தப்படும் ஹைப்ரீட் பவர்டிரெயின் ஆப்ஷனை குறிக்கிறது. அதாவது, இன்னோவா ஹைகிராஸில் பெட்ரோல் என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது.
டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பற்றி இப்போது ஏன் பார்க்கிறோம் என உங்களில் சிலருக்கு கேள்வி எழலாம். மக்கள் அதிகம் பேர் வாங்கும் இந்த டொயோட்டா ஹைப்ரீட் கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Bharat NCAP Crash Test) உட்படுத்தப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன.

அளவில் பெரியதான தோற்றம் கொண்ட எம்பிவி காரான டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் 7-சீட்டர் மற்றும் 8-சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், இந்த இரு இருக்கை ஆப்ஷன்களிலும் இன்னோவா ஹைகிராஸ் கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டுள்ளது. இன்னோவா ஹைகிராஸின் விலைமிக்க டாப் வேரியண்ட்களான வி.எக்ஸ் (VX) மற்றும் இசட்.எக்ஸ் (ZX) இந்த சோதனையில் உட்படுத்தப்பட்டன.
இதில், இந்த காருக்கு 5க்கு முழு 5 நட்சத்திர மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. பெரியவர்கள் பாதுகாப்பு மற்றும் சிறியவர்கள் பாதுகாப்பு என இரண்டிலும் சிறப்பான மதிப்பெண்களை இன்னோவா ஹைகிராஸ் பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.47 மதிப்பெண்கள் இந்த டொயோட்டா எம்பிவி காருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, வெறும் 1.53 மதிப்பெண்கள் மட்டுமே குறைவாக பெற்று, பெரியவர்களுக்கான பாதுகாப்புமிக்க காராக இது விளங்குகிறது. காரை முன்பக்கமாக மோதவிட்டு பார்த்ததில், டிரைவர் மற்றும் பயணிகளின் மார்பு பகுதிக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும் இன்னோவா ஹைகிராஸ் கார், உடலின் மற்ற பகுதிகளுக்கு சிறப்பான பாதுகாப்பை வழங்குவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.
அதேபோல், சிறியவர்கள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களை பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் இன்னோவா ஹைகிராஸ் பெற்றுள்ளது. பாரத் என்சிஏபி மட்டுமின்றி, பெரும்பாலான என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் பெரும்பாலான கார்கள் சிறியவர்கள் பாதுகாப்பில் 45க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றது கிடையாது. ஆதலால், 49க்கு 45 மதிப்பெண்கள் என்பது சிறந்த மதிப்பெண்கள் ஆகும்.
இந்த மோதல் சோதனைகளில், இன்னோவா ஹைகிராஸ் காரின் உடலமைப்பு நன்கு வலிமையானதாக உள்ளதாகவும், அதிநவீன பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படுவதாகவும் பாரத் என்சிஏபி குழுவினர் சான்றளித்து உள்ளனர். இன்னோவா ஹைகிராஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள், 3-பாயிண்ட் சீட்பெல்ட்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவை பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட முதல் ஹைப்ரீட் கார், இன்னோவா ஹைகிராஸ் ஆகும். இந்த சோதனையில் இன்னோவா ஹைகிராஸ் காரின் ஹைப்ரீட் வெர்சன் மட்டுமே உட்படுத்தப்பட்டு இருப்பினும், இந்த சோதனையில் பெற்ற மதிப்பெண்கள் இன்னோவா ஹைகிராஸின் பெட்ரோல் என்ஜின் வெர்சனுக்கும் பொருந்தும். எலக்ட்ரிக் மோட்டார் இல்லாமல், வெறும் பெட்ரோல் என்ஜின் மட்டும் கூட இன்னோவா ஹைகிராஸ் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








