ஒவ்வொரு நாளும் 1,000 கார்களுக்கு மேல் விற்பனை செய்வது ஒன்றும் எளிதல்ல! டொயோட்டா கார்கள் சேல்ஸ் ரிப்போர்ட்
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் 2025 நவம்பரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியாக மொத்தம் 33,752 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 30,085 டொயோட்டா கார்களும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 3,667 டொயோட்டா கார்களும் அடங்கும். இது 2024 நவம்பருடன் ஒப்பிடுகையில் 28% வளர்ச்சி ஆகும்.
ஏனெனில், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 26,323 கார்களை மட்டுமே ஒட்டுமொத்தமாக இந்தியாவில் செயல்படும் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது, இந்த 26,323 எண்ணிக்கையில் உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட டொயோட்டா கார்களின் எண்ணிக்கைகள் அடங்குகின்றன. டொயோட்டாவுக்கு சொந்தமாக இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தின் பிடாடியில் இரு ஆலைகள், ஆண்டுக்கு 3.42 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.

இந்த தொழிற்சாலைகளில் டொயோட்டா இன்னோவா ஹைராஸ் (Innova Hycross), இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta), ஃபார்ச்சூனர் (Fortuner), லெஜண்டர் (Legender), கேம்ரி ஹைபிரிட் (Camry Hybrid), அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser Hyryder), ஹிலக்ஸ் (Hilux) வாகனங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டிற்கும் இவை பயன்படுத்தப்படுகின்றன; அதன்படி, இங்கு உற்பத்தி செய்யப்படும் விலையுயர்ந்த டொயோட்டா கார்களான வெல்ஃபயர் (Vellfire), லேண்ட் க்ரூஸர் 300 (Land Cruiser 300) கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கடந்த நவம்பர் மாத விற்பனை குறித்துத் டொயோட்டா நிறுவனத்தின் துணைத் தலைவர் வரீந்தர் வத்வா கூறுகையில், "ஜிஎஸ்டி (GST) சீர்திருத்தங்கள் மற்றும் பண்டிகை காலத்தால், 19% வளர்ச்சியுடன் உள்ளோம். அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஏரோ, ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன், வளர்ச்சிப் பாதையை வலுப்படுத்தி, அங்கீகாரம் பெற்று விற்பனையில் உதவியுள்ளன," என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகைக் காலத் தேவை, புதிய கார்களை வாங்குவது குறித்த ஆர்வம் ஆகியவை டொயோட்டா நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்குக் காரணங்கள் ஆகும். சரக்கு & சேவை வரியில் அரசு கொள்கை மற்றும் சாதகமான சில்லறை வர்த்தகச் சூழலும் இதற்கு உதவின. அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஏரோ (Urban Cruiser Hyryder Aero), ஃபார்ச்சூனர் லீடர் எடிஷன் (Fortuner Leader Edition) போன்ற சமீபத்திய டொயோட்டா கார்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

நவம்பர் 23 அன்று பெங்களூருவில் டொயோட்டா கிர்லோஸ்கர் தனது முதல் அனுபவ அருங்காட்சியகத்தைத் திறந்தது. ஜப்பானிய அழகியல், இந்தியத் தத்துவத்தை ஒருங்கிணைக்கும் மையமாக இது செயல்பட துவங்கி உள்ளது. அத்துடன், கடந்த நவம்பர் மாதத்தில், பல கலாச்சார நிகழ்வுகளை டொயோட்டா நடத்தியது.
ஜப்பானின் பிரபல டிரம் டாவோ (Drum Tao) குழு, டொயோட்டாவுடன் இணைந்து, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பெரும் கூட்டத்தை ஈர்த்து வருகிறது. சென்னை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஷில்லாங் மற்றும் ஜெய்ப்பூரி்ல் ஏற்கனவே டிரம் டாவோ குழுவின் நிகழ்ச்சிகள் முடிந்துவிட்ட நிலையில், கோஹிமா, கவுஹாத்தி, இந்தூர், வாரணாசி, மும்பை, புனே நகரங்களில் இனி நடைபெறும். டிசம்பர் 21 அன்று பெங்களூருவில் சுற்றுப்பயணம் நிறைவடையும்.


Click it and Unblock the Notifications









