இன்னோவா காரை இன்னும் ஸ்பெஷலாக்கிட்டாங்க.. எக்ஸ்க்ளூசீவ் எடிசன் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கு..
இந்தியர்களின் ஃபேவரிட் எம்பிவி (MPV) ரக கார் மாடலாக டொயோட்டா இன்னோவா (Toyota Innova) உள்ளது. இந்த கார் மாடல் இந்திய சந்தையில் இன்னோவா கிரிஸ்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova HyCross) என இரண்டு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் இன்னோவா ஹைகிராஸ் மாடலிலேயே டொயோட்டா நிறுவனம் தற்போது புதிய சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் (Innova Hycross Exclusive Edition) பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்த சிறப்பு பதிப்பை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைச் செய்ய டொயோட்டா நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது. ஆனால், எத்தனை யூனிட்டுகள் விற்பனைக்காக தயார் செய்யப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை. இதேபோல், இன்னும் எத்தனை நாட்களுக்கு அது விற்பனைக்குக் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை.

இன்னோவா ஹைகிராஸ் மாடலின் உயர்நிலை வேரியண்டான இசட்எக்ஸ் (ஓ) ZX (O)-லேயே சிறப்பு பதிப்பை டொயோட்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 32.58 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் ஓர் சிறப்பு பதிப்பு என்பதால் அதை சிறப்பு அணிகலன் மற்றும் வண்ணங்களால் டொயோட்டா அலங்கரித்திருக்கின்றது. இதனால், வழக்கமான இன்னோவா ஹைகிராஸ் மாடலைக் காட்டிலும் கூடுதல் கவர்ச்சியான தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. இதற்கு மிக முக்கியமான காரணமாக அதன் டூயல் டோன் வண்ண அலங்கரிப்பு உள்ளது.
சூப்பர் ஒயிட் மற்றும் பியர் ஒயிட் ஆகிய இரண்டு விதமான வண்ணங்களாலேயே இதன் வெளிப்புறத்தை டொயோட்டா நிறுவனம் அலங்கரித்திருக்கின்றது. இதுமட்டுமல்ல, ஆங்காங்கே கருப்பு நிறத்தைக் கொண்டும் இந்த காரை டொயோட்டா அலங்காரம் செய்திருக்கின்றது. அந்த நிறத்தை காரின் ரூஃப், கிரில், பின் பக்க கார்னிஷ் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றில் பார்க்க முடிகின்றது.
இவற்றுடன் சேர்த்தே சில சிறப்பு அலங்கார அணிகலன்களையம் இந்த ஸ்பெஷல் எடிசனில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக காரின் பின் பக்கத்தில் எக்ஸ்க்ளூசீவ் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜை டொயோட்டா வழங்கி உள்ளது. இதேபோல், காரின் உட்பக்கத்தையும் கூடுதல் பிரீமியம் லுக் கொண்டதாக டொயோட்டா மாற்றியிருக்கின்றது.
அந்தவகையில், இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், டோர்களில் உள்ள துணி, இருக்கை மேலே போர்த்தப்பட்டு இருக்கும் துணி மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவற்றை இரண்டு வண்ணங்களைத் தாங்கியதாக மாற்றியிருக்கின்றது. இவற்றுடன், ஏர் ப்யூரிஃபையர், லெக் ரூம் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் போன்ற அம்சங்களையும் இந்த காரில் சேர்த்திருக்கின்றனர்.
இதுபோன்ற அலங்கார விஷயத்தில் மட்டுமே டொயோட்டா நிறுவனம் இந்த காரில் மாற்றங்களைச் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக எஞ்சினில் எந்தவொரு மாற்றத்தையும் அது செய்யவில்லை. வழக்கமான இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலில் வழங்கப்படும் அதே ஹைபிரிட் தொழில்நுட்பம் 2.0 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது லிட்டர் ஒன்றிற்கே 23.24 கிமீ வரையில் மைலேஜை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் எக்ஸ்க்ளூசீவ் எடிசன் அதிக விலையைக் கொண்டதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்களின் கவனத்திற்கு, இந்த காரை ரூ. 19.94 லட்சத்திற்கும் வாங்கிக் கொள்ள முடியும். இதுவே இன்னோவா ஹைகிராஸின் ஆரம்ப விலை. இதில் சற்றே சிறப்பம்சங்கள் குறைவாக இருக்கும். குறிப்பாக, ஹைபிரிட் தொழில்நுட்பம் இதில் இடம் பெற்றிருக்காது.


Click it and Unblock the Notifications








