7 பேர் போக கூடிய இந்த டொயோட்டா கார் இவ்ளோ மைலேஜ் தருதா! சேல்ஸ் எங்கயோ இருந்து எங்கயோ போயிருச்சு!
இந்தியாவில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பல்வேறு கார்களை டொயோட்டா (Toyota) நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். இதில், டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) மிகவும் முக்கியமானது. இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். எனவே மாருதி சுஸுகி எர்டிகா காரை போலவே, டொயோட்டா ரூமியான் காரின் விற்பனை எண்ணிக்கையும் சிறப்பாக இருந்து வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள டொயோட்டா ரூமியான் காரின் கடந்த மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) இதற்கு ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் 1,793 ரூமியான் கார்களை விற்பனை செய்து அசத்தி இருக்கிறது.

ஏனெனில் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 688 ரூமியான் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் டொயோட்டா ரூமியான் கார் விற்பனையில் 161 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 10.54 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 13.83 லட்ச ரூபாய் ஆகவும் உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இது மாருதி சுஸுகி எர்டிகாவை விட சற்று விலை உயர்ந்த கார்தான்.

ஏனெனில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை 8.84 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் டாப் வேரியண்ட்டின் விலையோ 13.13 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலைதான். மாருதி சுஸுகி எர்டிகாவை விட விலை சற்று அதிகம் என்றாலும் கூட, டொயோட்டா ரூமியான் காரை நிறைய வாடிக்கையாளர்கள் தேர்வு செய்வதை சேல்ஸ் ரிப்போர்ட் உறுதி செய்கிறது.
நாம் இங்கே பேசி கொண்டுள்ள டொயோட்டா ரூமியான் கார், 7 சீட்டர் எம்பிவி ரகத்தை சேர்ந்தது ஆகும். இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. ஆனால் பெட்ரோல் இன்ஜினை விட சிஎன்ஜி இன்ஜின் அதிக மைலேஜ் (Mileage) தரக்கூடியதாக உள்ளது.
அதாவது டொயோட்டா ரூமியான் எம்பிவி ரக காரின் பெட்ரோல்/மேனுவல் வேரியண்ட்களின் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் பெட்ரோல்/ஆட்டோமேட்டிக் வேரியண்ட்கள் ஒரு லிட்டருக்கு 20.30 கிலோ மீட்டர்கள் மைலேஜ் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
மறுபக்கம் டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டொயோட்டா ரூமியான் காரை வாடிக்கையாளர்கள் அதிகமாக தேர்வு செய்வதற்கு இந்த சிறப்பான மைலேஜூம் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களுக்கு டொயோட்டா ரூமியான் ஏற்றது என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது. இது 7 சீட்டர் கார் என்பதுதான் இதற்கு காரணம். டொயோட்டா ரூமியான் கார் தொலை தூர பயணங்களின்போதும், நல்ல சௌகரியத்தை வழங்குவதாக வாடிக்கையாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








