15 வருஷம் எந்த பிரச்னையும் இல்லாம ஓடுது! இந்த கம்பெனி கார்களை மக்கள் கண்ண மூடிட்டு வாங்கீட்டு இருக்காங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 34,236 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில், 29,302 கார்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

எஞ்சிய 4,934 கார்கள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். முன்னதாக கடந்த 2024ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 30,879 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 34,236 ஆக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் 11 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாத அளவில் மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டு காலண்டர் வருடத்தின் (ஜனவரி-ஆகஸ்ட்) அளவில் கணக்கிட்டாலும், டொயோட்டா நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைதான் பதிவு செய்திருக்கிறது.

அதாவது கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி-ஆகஸ்ட் காலகட்டத்தில், டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 2,12,785 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை, நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி-ஆகஸ்ட் காலகட்டத்தில் 2,41,696 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால், டொயோட்டா நிறுவனம் விற்பனையில் 14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.
டொயோட்டா நிறுவனத்தின் தொழிற்சாலை கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு அருகே உள்ள பிடதி என்ற பகுதியில் செயல்பட்டு வருகிறது. அங்கு டொயோட்டா நிறுவனத்திற்கு மொத்தம் 2 யூனிட்கள் இருக்கின்றன. இதில், முதலாவது யூனிட் கடந்த 1999ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது.
இந்த யூனிட்டில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ், டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா, டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் லெஜெண்டர் உள்ளிட்ட கார்கள் எல்லாம் உற்பத்தி செய்யப்பட்டு கொண்டுள்ளன. அதே நேரத்தில் 2வது யூனிட் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது.
அங்கு டொயோட்டா கேம்ரி ஹைப்ரிட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் டொயோட்டா ஹிலக்ஸ் உள்ளிட்ட கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் டொயோட்டா வெல்ஃபையர் மற்றும் டொயோட்டா எல்சி 300 போன்ற கார்கள் எல்லாம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அவை இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மறுபக்கம் டொயோட்டா க்ளான்சா, டொயோட்டா ரூமியான் மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைசர் போன்றவை எல்லாம், ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடல்கள் ஆகும். அதாவது மாருதி சுஸுகி நிறுவனத்தின் பலேனோ, எர்டிகா மற்றும் ஃப்ரான்க்ஸ் ஆகிய 3 கார்கள்தான் முறையே க்ளான்சா, ரூமியான் மற்றும் அர்பன் க்ரூஸர் டைசர் ஆகிய பெயர்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் மூலம், டொயோட்டா இதை சாத்தியப்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்யும் கார்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவையாக உள்ளன. அவை நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடியவை ஆகும். டொயோட்டா நிறுவனத்தின் கார்கள், 8 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான கிலோ மீட்டர்கள் கடந்தது குறித்த செய்திகளை நீங்கள் அதிகம் வாசித்திருக்கலாம்.
அத்துடன் 10, 15 வருடங்களுக்கு மேல் எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் ஓடி கொண்டிருக்கும் டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் குறித்த செய்திகளும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இது போன்ற காரணங்களால்தான் டொயோட்டா நிறுவனத்தின் கார்களை மக்கள் அதிக அளவில் வாங்குகின்றனர். அது டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் எதிரொலிக்கிறது.


Click it and Unblock the Notifications








