இந்த நிறுவனத்தின் கார்களை மக்கள் கண்ண மூடிட்டு நம்பறாங்க... ஒரே மாசத்துல இத்தன காரை வித்து தள்ளீட்டாங்களா...
டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 28,869 கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது.
ஆனால் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 27,474 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனம் விற்பனையில் 5 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் விற்பனை செய்த மொத்த கார்களில், 26,453 கார்கள் இந்தியாவின் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.

எஞ்சிய 2,416 கார்கள், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை. ஆக மொத்தம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டொயோட்டா நிறுவனம் 28,869 கார்களை விற்பனை செய்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டுமல்லாது, நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியிலும் (ஜனவரி-ஜூன்), டொயோட்டா நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியைதான் பதிவு செய்துள்ளது.
அதாவது கடந்த 2024ம் ஆண்டின் முதல் பாதியில் டொயோட்டா நிறுவனம் ஒட்டுமொத்தமாக 1,50,250 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதியில் இந்த எண்ணிக்கை 1,74,885 ஆக உயர்ந்துள்ளது. இது 16 சதவீத வளர்ச்சி ஆகும்.

டொயோட்டா நிறுவனம் தற்போதைய நிலையில் கர்நாடக மாநிலம் பிடதியில் மொத்தம் 2 உற்பத்தி ஆலைகளை செயல்பாட்டில் வைத்துள்ளது. இதில், முதலாவது ஆலை கடந்த 1997ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. அதே நேரத்தில் 2வது ஆலை கடந்த 2010ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு கொண்டுள்ளது.
இந்த 2 ஆலைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் ஒரு ஆண்டுக்கு 3,42,000 கார்கள் ஆகும். டொயோட்டா நிறுவனத்தின் மற்ற செய்திகளை பொறுத்தவரையில், அதன் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross) கார், பாரத் என்சிஏபி (Bharat NCAP) மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் (5 Star Safety Rating) பெற்று அசத்தியுள்ளது.
இதன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் எம்பிவி (MPV) ரக காராக டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் உருவெடுத்துள்ளது. இது இந்திய சந்தையில் வரும் காலங்களில் டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் காரின் விற்பனை எண்ணிக்கையை உயர்த்த உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டொயோட்டா நிறுவனத்தின் கார்கள் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளன. இதன் காரணமாகவே டொயோட்டா நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது என நாங்கள் கருதுகிறோம். மேலும் சுஸுகி (Suzuki) நிறுவனத்துடனான கூட்டணியும், டொயோட்டா நிறுவனத்திற்கு உதவி செய்து வருகிறது.
இந்த கூட்டணியின் மூலம் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்களை டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டில் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. அவையும் டொயோட்டா நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையை உயர்த்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றன.


Click it and Unblock the Notifications








