சைக்கிள் கம்பெனிகூட இவ்ளோ கம்மியா விலை உயர்த்தாது.. பிரபல கார் மாடலின் விலையில் ரூ. 500 உயர்த்திய டொயோட்டா!
கார் உற்பத்தியாளர்கள் புதிய வாகனங்களின் விலையை உயர்த்துவது தொடர் கதையாகி வருகின்றது. இந்த ஆண்டு தொடங்கியது முதலே ஒவ்வொரு கார் உற்பத்தியாளர்களும் இதே வேலையாக விலையை உயர்வை பற்றி அறிவித்து வருகின்றனர். அந்தவகையில், உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான டொயோட்டா (Toyota)-வும் அதன் பிரபல கார் மாடல்களின் விலையை உயர்த்தி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனத்தின் அர்பன் க்ரூஸர் டெய்சர் (Urban Cruiser Taisor) மற்றும் ரூமியன் (Rumion) இந்த இரண்டு கார் மாடல்களின் விலையே உயர்த்தப்பட்டு இருக்கின்றன.
இரண்டும் நிறுவனத்தின் கணிசமான அளவு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடல்கள் ஆகும். இவற்றின் விலையை டொயோட்டா உயர்த்தி இருப்பது கார் காதலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த பதிவில் இரண்டு கார் மாடல்களின் எந்தெந்த வேரியண்டிற்கு எவ்வளவு ரூபாய் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் டெய்சர்: இந்த கார் இந்தியாவில் இ (E), எஸ் (S), எஸ் பிளஸ் (S+), ஜி (G) மற்றும் வி (V) ஆகிய வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த அனைத்து வேரியண்டுகளின் விலையும் தற்போது உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
பெரும்பாலான வேரியண்டுகளின் விலையில் ரூ. 500-ஐ மட்டுமே நிறுவனம் ஏற்றி இருக்கின்றது. அதேவேளையில், பெட்ரோல் மோட்டாருடன் ஏஎம்டி கியர்பாக்ஸைக் கொண்டு விற்பனைக்குக் கிடைக்கும் 'எஸ்' மற்றும் 'எஸ் பிளஸ்' இந்த இரண்டு வேரியண்டுகளின் விலையில் மட்டும் அதிகபட்சமாக ரூ. 5,500 உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த காரில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டு ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. விலை உயர்வால் முன்னதாக ரூ. 7.73 லட்சத்திற்குக் கிடைத்துக் கொண்டிருந்த டெய்சர் தற்போது ரூ. 7.74 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.
இந்த கார் மடாலின் உச்சபட்ச விலை ரூ. 12.88 லட்சம் ஆகும். இந்த கார் மாடலில் இ வேரியண்டில் மட்டுமே சிஎன்ஜி ஆப்ஷன் விற்பனைக்கு வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 8.72 லட்சம் ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது.

டொயோட்டா ரூமியன்: இந்த கார் இந்தியாவில் முன்னதாக ரூ. 10.44 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. ஆனால், இப்போது இதன் ஆரம்ப விலை ரூ. 10.54 லட்சமாக உயர்ந்திருக்கின்றது. இது முன்பைக் காட்டிலும் ரூ. 10 ஆயிரம் அதிகம் ஆகும்.
மேலும், இதுவே ரூமியன் கார் மாடலின் ஆரம்ப விலை ஆகும். அதேவேளையில், இது எக்ஸ்-ஷோரூம் விலை என்பது கவனிக்கத்தகுந்தது. ஆரம்ப நிலை வேரியண்டின் விலையை மட்டுமல்ல ஒட்டுமொத்த வேரியண்டுகளின் விலையையும் டொயோட்டா மாற்றி அமைத்திருக்கின்றது. முக்கியமாக அனைத்து வேரியண்டுகளின் விலையிலும் ரூ. 10 ஆயிரம் உயர்த்தி இருக்கின்றது.
எஸ் (S), ஜி (G) மற்றும் வி (V) ஆகிய மூன்று விதமான வேரியண்டுகளிலேயே டொயோட்டா ரூமியன் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இவை மூன்றும் தற்போது உயர்த்தப்பட்ட புதிய விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த கார் மாடலின் அதிகபட்ச விலை ரூ. 13.83 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் டெய்சர் கார் மாடலுக்கு ரூ. 500 மட்டுமே விலை உயர்வு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. சைக்கிள் நிறுவனம்கூட இவ்வளவு குறைவான ரூபாயை உயர்த்தாதே என்பது பலரின் வியப்பாக உள்ளது. விற்பனையை கூட்டும் பொருட்டே இவ்வளவு குறைவான விலை உயர்வை நிறுவனம் செய்திருக்கும் என நாங்கள் யூகிக்கின்றோம்.


Click it and Unblock the Notifications









