மின்சார 3சக்கர கார்கோ வாகன உற்பத்தியில் களமிறங்கும் தமிழ்நாட்டு நிறுவனம்.. டூ-வீலரை தயாரிப்பதுல அவங்க ஃபேமஸ்!!
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பேட்டரியில் இயங்கும் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவற்றிற்கு மட்டுமல்ல மின்சாரத்தில் இயங்கும் பிற பிரிவைச் சார்ந்த வாகனங்களுக்கும் வரவேற்பு மெல்ல மெல்ல அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால்தான் வாகன உற்பத்தியாளர்கள் கடந்த காலங்களைக் காட்டிலும் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த மாதிரியான சூழலிலேயே தமிழகத்தைச் சேர்ந்த ஓர் நிறுவனம் எலெக்ட்ரிக் மூன்று சக்கர கார்கோ ரக வாகன உற்பத்தியில் தன்னுடைய காலடி தடத்தை பதிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரபல இரண்டு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் (TVS Motor)-தான் அந்த நிறுவனம் ஆகும்.

ஏற்கனவே இந்த நிறுவனம் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. இந்தமாதிரியான சூழலிலேயே அது மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர கார்கோ ரக வாகன (Electric Three Wheeler Cargo Vehicle) உற்பத்தியிலும் களமிறங்க இருப்பதாக தெரிவித்திருக்கின்றது.
நிறுவனத்தின் மின்சார வாகன பிரிவின்கீழ் இப்போதைய நிலவரப்படி இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் மற்றும் ஓர் பயணிகள் எலெக்ட்ரிக் ஆட்டோரிக்சா ஆகியவை மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஒரு கார்கோ மின்சார வாகனம்கூட விற்பனையில் இல்லை. இந்த குறையையும் போக்கும் முயற்சியிலேயே டிவிஎஸ் நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது.
இந்த ஆண்டின் இறுதிக்குள் டிவிஎஸ் நிறுவனம் அதன் மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர கார்கோ வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி இந்தியாவின் மூன்று சக்கர வாகன பிரிவில் டிவிஎஸ் நிறுவனம் 10 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலில் அது எலெக்ட்ரிக் கார்கோ வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் எனில் மேலும் கூடுதல் சதவீத பங்கை அது பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மின்சாரத்தில் இயங்கும் மூன்று சக்கர கார்கோ வாகனங்களும் தமிழகத்திலேயே தயாரிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால், விரைவில் தமிழகத்தின் ஓசூர் ஆலையில் இருந்து டிவிஎஸ்-இன் எலெக்ட்ரிக் கார்கோ மூன்று சக்கர வாகனங்களும் உற்பத்தி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மின்சார கார்கோ எலெக்ட்ரிக் ஆட்டோ கிங் இவி மேக்ஸ் (TVS KIng EV Max)-ஐ தழுவியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த மின்சார ஆட்டோரிக்சா அதிகபட்சமாக ஓர் முழு சார்ஜில் 179 கிமீ ரேஞ்சை வழங்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். மேலும், இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் மற்றும் 30 நிமிடங்கள் ஆகும். இதே திறன்களுடன் டிவிஎஸ் முதல் எலெக்ட்ரிக் கார்கோ ஆட்டோவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, டிவிஎஸ் நிறுவனம் தயாரிப்பு இ-வாகனங்களுக்கு இந்தியர்கள் சூப்பரான டிமாண்டை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே தமிழக நிறுவனம் இ-கார்கோ வாகனங்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








