எந்த காரை விடுவது, எதை வாங்குறதுனே தெரியல!! புக் பண்ண பணத்தை சேர்த்து வைக்க ரெடி ஆகிட்டீங்களா?
உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எஸ்யூவி (SUV) கார்களுக்கு பெரிய அளவிலான தேவை உருவாகி வருகிறது. ஒரு காலத்தில் தாழ்வான செடான் (Sedan) ரக கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், அது மொத்தமாக தற்போது நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களுக்கு மாறிவிட்டது.
இந்தியாவில் பல்வேறு விதமான எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் மக்கள் அதிகம் வாங்குவது, 4.3 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் ஆகும். இந்தியாவில் அடுத்ததாக சில புதிய காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் (Maruti Suzuki Fronx Hybrid): மாருதி சுஸுகி நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் கார். மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனையாகும் பலேனோ (Baleno) காரின் எஸ்யூவி வெர்சனாக ஃபிரான்க்ஸ் கடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
அதன்பின் 2023 ஏப்ரலில் இருந்து ஃபிரான்க்ஸ் காரின் விற்பனையை மாருதி சுஸுகி துவங்கிய நிலையில், ஃபிரான்க்ஸ் கார் விரைவில் ஹைப்ரீட் வெர்சனில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. கிராண்ட் விட்டாரா (Grand Vitara) மற்றும் இன்விக்டோ (Invicto) கார்களை தொடர்ந்து ஹைப்ரீட் வெர்சனில் அறிமுகமாகும் 3வது மாருதி சுஸுகி காராக ஃபிரான்க்ஸ் விளங்க உள்ளது. ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் காரை சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யும் பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.
கடந்த 2024ஆம் ஆண்டில் ஸ்விஃப்ட் (Swift) காரில் அறிமுகம் செய்யப்பட்ட 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் புதிய ஃபிரான்க்ஸ் ஹைப்ரீட் காரிலும் பொருத்தப்படலாம். இந்த என்ஜின் உடன் புதிய ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கிறோம். இந்த ஹைப்ரீட் சிஸ்டத்தில் வழங்கப்படும் பேட்டரி அதுவாகவே ஜெனரேட்டர் (Generator) மூலமாக தானாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வகையில் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
2025 ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue): இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் 4 மீட்டர்களுக்கும் குறைவான நீளம் கொண்ட சப்-காம்பெக்ட் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக வென்யூ விளங்குகிறது. இத்தகைய காரின் அடுத்த தலைமுறை மாடலை இந்த 2025ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஹூண்டாய் கிரெட்டா (Creta) காரை போன்று ஹூண்டாயின் இண்டர்நேஷ்னல் டிசைன் மொழியான 'சென்சஸ் ஸ்போர்டினஸ்' (Sensuous Sportiness)-இன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டதாக புதிய வென்யூ கார் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். அதாவது, வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் வென்யூ காரின் தோற்றத்திற்கு இணையானதாக இந்தியாவிற்கான புதிய வென்யூ இருக்கும்.
இதன்படி, புதிய வென்யூ காரின் முன்பக்கத்தில் கோள வடிவிலான எல்இடி ஹெட்லைட்கள், பாராமெட்ரிக் கிரில், புதிய டிசைனில் அலாய் சக்கரங்கள் மற்றும் பின்பக்கத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட எல்இடி டெயில்லைட்களை எதிர்பார்க்கலாம். மற்றப்படி, புதிய வென்யூ காரிலும் தற்போது வழங்கப்படும் அதே 3 என்ஜின் ஆப்ஷன்கள் தான் கொடுக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
டாடா பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift): கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக பஞ்ச் விளங்குகிறது. கடந்த ஆண்டில் இதே மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் இந்தியாவின் நம்பர் ஒன் சேல்ஸ் காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்து ஆச்சிரியப்படுத்தியது.

2024இல் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பினும், பஞ்ச் காருக்கு புதியதாக ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்க டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. 2025 பஞ்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் எல்இடி டி.ஆர்.எல்-கள் உடன் புதிய ஹெட்லைட்கள், புதிய கிரில், திருத்தம் செய்யப்பட்ட பம்பர்கள் என முன் மற்றும் பின்பகுதியில் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
இவற்றுடன், புதிய பஞ்ச் காரில் புதிய டிசைனிலான அலாய் சக்கரங்கள் வழங்கப்பட உள்ளன. அதேபோல், காருக்குள் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் முற்றிலும் புதிய கேபின் வழங்கப்படும். மற்றப்படி, புதிய பஞ்ச் காரிலும் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் இருக்காது. தற்சமயம், 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் என்கிற ஒரேயொரு என்ஜின் ஆப்ஷனில் பஞ்ச் கார் விற்பனை செய்யப்படுகிறது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி (Mahindra XUV 3XO EV): இந்தியாவில் கார்கள் விற்பனையில் சமீப காலத்தில் மஹிந்திரா பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும், மஹிந்திராவின் பார்வை எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பக்கம் வெகுவாக விழ ஆரம்பித்துள்ளது. இதனால், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ காரின் எலக்ட்ரிக் வெர்சனை அறிமுகம் செய்ய மஹிந்திரா தயாராகி வருகிறது.

ஏற்கனவே, எக்ஸ்யூவி400 (XUV400) என்கிற எலக்ட்ரிக் கார் மஹிந்திராவில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதால், எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படாது என்றே நினைத்தோம். ஆனால், வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்த்தால் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவி எலக்ட்ரிக் காரின் அறிமுகத்திற்கு வாய்ப்புள்ளது. அதுவும், அடுத்த 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே விற்பனையில் இருக்கும் எக்ஸ்யூவி400 எலக்ட்ரிக் காரை காட்டிலும் அளவில் சிறியதாகவும், விலை குறைவானதாகவும் புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ இவி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சொல்லப்போனால், அடுத்த சில வருடங்களுக்கு மஹிந்திரா விற்பனை செய்யும் குறைந்த விலையிலான எலக்ட்ரிக் காராக இது இருக்கும் என கூறப்படுகிறது. புதிய எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எலக்ட்ரிக் காரில் 34.5kWh மற்றும் 39.4kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எஸ்யூவி கார்களின் சிறப்பம்சமே அவற்றிற்கு உள்ளே அதிகப்படியான இடவசதி கிடைக்கும் என்பதாகும். இந்த கிரேஸுக்காகவே மக்கள் பலரும் போட்டி போட்டுக் கொண்டு எஸ்யூவி கார்களை வாங்கி வருவதால், இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் தங்களுக்கான மார்க்கெட்டை பெறும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications









