இந்த ஊர்க்காரங்கள இனி கையிலயே பிடிக்க முடியாது! டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் வர போறதால ஜாலியா இருக்காங்க!
இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக சாலைகளிலும் கூட தற்போது நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை காண முடிகிறது. எலெக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால்தான் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதுவே டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் (Double-Decker Electric Buses) என்றால், மற்றொரு பயனும் உள்ளது. மிக அதிக அளவிலான பயணிகளை ஏற்றி செல்ல முடியும் என்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்பதுதான் அது.
அதாவது ஒவ்வொரு தனி நபரும் தங்கள் சொந்த கார் அல்லது பைக் போன்ற வாகனங்களில் பயணம் செய்தால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை அதிகரிக்கும். எனவேதான் பஸ் மற்றும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து முறையை பயன்படுத்தும்படி பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்துகிறது.

அதிகப்படியான தனி நபர் வாகனங்களால் இந்திய சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்கவும், டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் உதவி செய்யும். எனவே இந்தியாவின் பெரிய நகரங்களில், டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான முயற்சிகள் தற்போது மிக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதில், இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பை (Mumbai) குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் முறையாக டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்ட நகரம் என்றால், அது மும்பைதான். இந்த வரிசையில் இந்தியாவின் இன்னும் பல்வேறு நகரங்களிலும், டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான முயற்சிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு கொண்டுள்ளன.

இதில், உத்தர பிரதேச மாநிலம் கௌதம புத்தா நகர் மிகவும் முக்கியமானது. கௌதம புத்தா நகர் மாவட்டத்தின் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்களுக்கு இடையே சோதனை அடிப்படையில் இரண்டு டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் விரைவில் இயக்கப்படவுள்ளன. இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றால், பல்வேறு வழித்தடங்களில் டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்களை எதிர்பார்க்கலாம்.
இதுமட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலம் முழுவதும் முதற்கட்டமாக 20 டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கு அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட டிப்போக்களுக்கு டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் விரைவில் வரவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதால், காற்று மாசுபாடு பிரச்னையுடன் சேர்த்து, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் குறையும். அத்துடன் வழக்கமான டீசல் பஸ்கள் உடன் ஒப்பிடும்போது, பேட்டரி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் பஸ்கள் அதிக லாபம் வழங்க கூடியவையாக இருக்கின்றன.
எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவதற்கான செலவு மற்றும் பராமரிப்பு செலவு குறைவு என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம். எனவே டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்களை இயக்குவது என்பது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் கட்டணத்தை சரியாக நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








