தமிழ்நாட்டில் மீண்டும் கோடிகளை கொட்டும் வின்ஃபாஸ்ட்! எத்தனை பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க போகுதோ!
வியட்நாம் நாட்டின் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), தமிழ்நாட்டில் தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாயில் தற்சமயம் இதன் மதிப்பு ரூ.4,491 கோடி ஆகும். இந்த விரிவாக்கத்தின் மூலம் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் பேருந்துகள் (Electric Buses) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) தயாரிக்கப்படும்.
இது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள வியட்நாம் நிறுவனத்தின் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான தமிழ்நாடு முதலீட்டின் இரண்டாம் கட்டமாகும். தமிழ்நாடு தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில் இயங்கிவரும் தனது தற்போதைய ஆலைக்கு அருகில் கூடுதலாக 200 ஹெக்டேர் நிலம் ஒதுக்கக் கோரி, வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழக அரசுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதியதாக தற்போது மேற்கொண்டுள்ளது.

எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் இ-ஸ்கூட்டர்களுக்கான புதிய உற்பத்தி ஆலைப் பிரிவுகள் மற்றும் பட்டறைகளை உருவாக்க இந்த முதலீடு பெரிதும் உதவும். மேலும், இந்த முதலீட்டில் உற்பத்தி, அசெம்ப்ளி, சோதனைகள் மற்றும் பிற தொடர்புடைய செயல்பாடுகள் அனைத்தும் அடங்கும். தற்போது, தூத்துக்குடி ஆலையானது 160 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது.
இதன் ஆரம்பகால ஆண்டு உற்பத்தித் திறன் 50,000 எலெக்ட்ரிக் வாகனங்களாகும். இது விரைவில் 1.5 லட்சம் யூனிட்டுகளாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கம் தற்போதுள்ள எலெக்ட்ரிக் கார் உற்பத்தியுடன், எலெக்ட்ரிக் பேருந்துகளையும் ஸ்கூட்டர்களையும் சேர்க்கும். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் ஆசியாவிற்கான தலைமை நிர்வாக அதிகாரி ஃபாம் சான் சௌ இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "தமிழ்நாடு ஆலையின் இந்த விரிவுபடுத்தப்பட்ட திட்டம், இந்தியாவில் எங்கள் தயாரிப்பு வரிசையை விரிவுப்படுத்தும். எலெக்ட்ரிக் கார்களில் இருந்து எலெக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரை வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இது உதவும். இந்த முயற்சி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும், உள்ளூர்மயமாக்கலை மேம்படுத்தும், உள்நாட்டு தொழிலாளர்களின் திறன்களை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டை தனது உலகளாவிய விரிவாக்கப் பயணத்தில் ஒரு மூலோபாய மையமாக வின்ஃபாஸ்ட் கருதுகிறது" என அவர் தெரிவித்தார். தமிழ்நாடு மாநில தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பேசுகையில், "வின்ஃபாஸ்ட் உடன் இணைந்து செயல்பட தமிழக அரசு உறுதிபூண்டுள்ளது. சமூகத்திற்கும் பிராந்திய பொருளாதாரத்திற்கும் நிரந்தரமான நன்மைகளை உறுதி செய்யும் வகையில், திட்ட அமலாக்கத்தின் போது சாதகமான சூழலை வழங்குவோம்" என்றார்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, தமிழக அரசு தேவையான அனுமதிகளைப் பெறவும், மின்சாரம், தண்ணீர், சாலை அணுகல், வடிகால், கழிவு மேலாண்மை போன்ற அத்தியாவசிய உள்கட்டமைப்பு இணைப்புகளையும் ஏற்படுத்த உதவும். மேலும், பொருந்தக்கூடிய சலுகைகள் மற்றும் விலக்குகளையும் அரசு வழங்கும். இந்திய சந்தையில் நுழைந்ததில் இருந்து, வின்ஃபாஸ்ட் தனது விரிவான எலெக்ட்ரிக் வாகன சுற்றுச்சூழல் அமைப்பை தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது.
உற்பத்தி, விநியோகம், சார்ஜிங் உள்கட்டமைப்பு, விற்பனைக்குப் பிந்தைய சேவைகள் மற்றும் பேட்டரி மறுசுழற்சி ஆகியவை இதில் அடங்கும். தமிழ்நாடு ஆலை இந்த அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விநியோக நெட்வொர்க் வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கிய நகரங்களில் ஏற்கனவே 24 டீலர்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் 35 டீலர்களை எட்டுவதை வின்ஃபாஸ்ட் நோக்கமாகக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாஸ்டாக்கில் வி.எஃப்.எஸ் (VFS) குறியீட்டுடன் பட்டியலிடப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட், எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலெக்ட்ரிக் பேருந்துகளை உற்பத்தி செய்யும் 'வின்க்ரூப்' (Vingroup)-இன் துணை நிறுவனமாகும். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் விரிவாக்கம் இந்தியாவின் பசுமைப் பயண இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. இதனால், தமிழ்நாட்டில் இந்த நிறுவனத்தின் இந்த புதிய விரிவாக்கத் திட்டம், நாட்டின் பசுமைப் போக்குவரத்து இலக்குகளுக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








