தொழிற்சாலை அமைக்க இடம் கொடுத்த தமிழ்நாட்டில் ஒரேயொரு ஷோரூம்! வியட்நாம் கார் கம்பெனியின் மாஸ்டர் பிளான்!
உலகின் முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான வின்ஃபாஸ்ட் (VinFast)-இன் துணை நிறுவனமான வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா நிறுவனம், இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 புதிய விற்பனை நிலையங்களை நிறுவி, தனது சில்லறை விற்பனை நெட்வொர்க்கை விரிவுபடுத்தியுள்ளது. இந்திய நுகர்வோருக்கு சிறந்த எலெக்ட்ரிக் வாகன அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன், 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 35 விற்பனை நிலையங்களை அமைக்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது.
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வின்ஃபாஸ்ட் விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 என்கிற பிரீமியம் தரத்திலான எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை வாடிக்கையாளர்கள் இப்போது இந்த 24 ஷோரூம்கள் வாயிலாக நேரடியாகப் பார்த்து, வாங்கலாம். புதியதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம்கள் நாட்டின் முக்கியமான நகரங்களில் அமைந்துள்ளன.

இவை வாடிக்கையாளர்களுக்கு நிகரற்ற பிராண்ட் அனுபவத்தை வழங்குகின்றன. ஒவ்வொரு விற்பனை நிலையமும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் உலகளாவிய சில்லறை விற்பனை தரநிலைகளைப் பின்பற்றுகிறது. நவீன வடிவமைப்பு மற்றும் கார்களை காட்சிப்படுத்துவதற்கான பகுதியுடன், வெளிப்படையான வாடிக்கையாளர் தொடர்பை வின்ஃபாஸ்ட் ஷோரூம்கள் உறுதி செய்கின்றன.
சென்னை, டெல்லி, குருகிராம், நொய்டா, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், ஹைதராபாத், சூரத், புனே, விஜயவாடா, விசாகப்பட்டினம், நாக்பூர், ஆக்ரா, லூதியானா, ஜெய்ப்பூர், கொச்சி, புவனேஸ்வர், பரோடா, ராஜ்கோட் போன்ற நகரங்களில் இந்த 24 ஷோரூம்கள் செயல்படுகின்றன. இது இந்தியா முழுவதும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அதிகரித்து வரும் நெட்வொர்க்கை வலுப்படுத்துகிறது.

இந்தியாவில் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 ப்ரீமியம் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதோடு, வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஒரு விரிவான சூழல் அமைப்பையும் உருவாக்கி வருகிறது. இது சில்லறை விற்பனை, சார்ஜிங் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், வாகனங்களுக்கு உரிய அதே நம்பிக்கை, வசதி மற்றும் கவனிப்பு வாடிக்கையாளர்களுக்கும் கிடைப்பதை வின்ஃபாஸ்ட் நிறுவனம் உறுதி செய்கிறது.
இதுகுறித்து பேசிய வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தபன் கோஷ், "நிலையான இயக்கம் (sustainable mobility) குறித்த இந்தியாவின் ஆர்வம், எங்கள் தரத்தை மேலும் உயர்த்தத் தூண்டுகிறது. விரைவான ஷோரூம் திறப்புகள், இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட்டின் நீண்டகால அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. நாடு முழுவதும் வின்ஃபாஸ்ட் தயாரிப்புகளையும் சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கச் செய்ய, எங்கள் டீலர் பார்ட்னர்களுடன் நெருக்கமாகப் பணிபுரிகிறோம்" என்று குறிப்பிட்டார்.

இந்தியாவில் நாடு தழுவிய சார்ஜிங் மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவைகளுக்கான நம்பகமான கட்டமைப்பை உருவாக்க, ரோடுகிரிட், மை டிவிஎஸ், காஸ்ட்ரல் இந்தியா மற்றும் குளோபல் உத்தரவாதம் ஆகிய நிறுவனங்கள் உடன் வின்ஃபாஸ்ட் கூட்டணி ஏற்படுத்தி கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு உள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் அதிநவீன தொழிற்சாலை, இந்தியாவின் வளர்ச்சி உத்தியின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.
400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, முதல் கட்டமாக விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலெக்ட்ரிக் கார்களை ஆண்டுக்கு 50,000 யூனிட்கள் என்ற ஆரம்ப திறனில் அசெம்பிள் செய்யும் திறன் கொண்டதாக உள்ளது. அதாவது, வெளிநாட்டில் இருந்து பாகங்களாக கொண்டுவந்து தொழிற்சாலையில் வைத்து முழு காராக அசெம்பிள் செய்யும் திறன். இந்த 50,000 என்கிற எண்ணிக்கையை வரும் காலங்களில் 1,50,000 யூனிட்கள் வரையில் அதிகரித்து கொள்ள முடியும் என்கிறது வின்ஃபாஸ்ட் நிறுவனம்.

முழுமையாகச் செயல்படும்போது, வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை 3,000- 3,500 நேரடி வேலை வாய்ப்புகளையும், விநியோகச் சங்கிலியில் பல ஆயிரம் கூடுதல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இது தெற்காசியாவில் ஒரு முன்னணி இவி உற்பத்தி மையமாக தமிழகத்தின் வளர்ச்சியை வலுப்படுத்தும் என கணிக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 டிசம்பருக்குள் 35 விற்பனை நிலையங்களை இந்தியாவில் செயல்படுத்த வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இதில் 24 எண்ணிக்கையை தற்போது இந்த வியட்நாம் நிறுவனம் எட்டியுள்ளது. இதன் மூலம் பரவலான பிராண்ட் அணுகல், நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய ஆதரவு மற்றும் தடையற்ற வாகன உரிமையாளர் அனுபவத்தை வழங்கும் வலுவான நாடு தழுவிய நெட்வொர்க்கை இது உருவாக்கும்.


Click it and Unblock the Notifications









