டாடா நானோ போல் அடிமாட்டு விலையில் களமிறங்கும் குட்டி கார்! எவ்ளோ டிராஃபிக் இருந்தாலும் அசால்டா பூந்து போயிரும்
இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய ஹாட் டாபிக்-ஆக தூத்துக்குடி (Thoothukudi) மாறியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் அங்கு எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்திருப்பதுதான் இதற்கு காரணம். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தூத்துக்குடி தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
அத்துடன் இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள விஎஃப்6 (VF 6) மற்றும் விஎஃப்7 (VF 7) எலெக்ட்ரிக் கார்களுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்த 2 எலெக்ட்ரிக் கார்களைதான் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக ஏராளமான எலெக்ட்ரிக் கார்களை வரிசையாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய வின்ஃபாஸ்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றுக்கு இந்தியாவில் காப்புரிமை கோரி வின்ஃபாஸ்ட் நிறுவனம் சமீபத்தில் விண்ணப்பம் செய்தது.
இதை தொடர்ந்து மற்றொரு சிறிய எலெக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் காப்புரிமை கோரி, வின்ஃபாஸ்ட் நிறுவனம் விண்ணப்பம் செய்துள்ளதாக, ரஸ்லேன் தளம் தற்போது வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில், இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) எலெக்ட்ரிக் காருக்கு, போட்டியாக இருக்கும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது தாயகமான வியட்நாமில், மினியோ க்ரீன் இவி (Minio Green EV) என்ற சிறிய எலெக்ட்ரிக் காரை விற்பனை செய்து வருகிறது. இந்த சிறிய எலெக்ட்ரிக் காரைதான் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான காப்புரிமை விண்ணப்பத்தைதான் வின்ஃபாஸ்ட் தற்போது பதிவு செய்துள்ளது.
வின்ஃபாஸ்ட் மினியோ க்ரீன் இவி எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், 14.7 kWh பேட்டரி (Battery) வழங்கப்படலாம். இதன் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 170 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதே நேரத்தில் இதன் டாப் ஸ்பீடு (Top Speed) மணிக்கு 80 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம்.
அத்துடன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகவும் செயல்படும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, தட்டையான அடிப்பாகம் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல், ஏர்பேக்குகள், ஏபிஎஸ், டிராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை (Features) எல்லாம் இந்த சிறிய எலெக்ட்ரிக் கார் கொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாக, வின்ஃபாஸ்ட் மினியோ க்ரீன் இவி இருக்கும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை வெறும் 7.50 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். கிட்டத்தட்ட இதே விலையில்தான், வின்ஃபாஸ்ட் மினியோ க்ரீன் இவி எலெக்ட்ரிக் காரும், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று என்ற பெருமையை இது பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சென்னை (Chennai) மற்றும் பெங்களூர் (Bangalore) போன்ற இந்தியாவின் பெரு நகரங்கள் எல்லாம் தற்போது போக்குவரத்து நெரிசல் பிரச்னையில் சிக்கி திணறி வருகின்றன. அங்கெல்லாம் ஓட்டுவதற்கு எளிதான, அதாவது அளவில் சிறிய எலெக்ட்ரிக் கார்களின் தேவை அதிகமாக உள்ளது.
எனவே வின்ஃபாஸ்ட் மினியோ க்ரீன் இவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கலாம். மிகவும் விலை குறைவான, அதே நேரத்தில் அளவில் சிறியதாக இருக்க கூடிய மினி எலெக்ட்ரிக் காரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








