இரண்டு காரும் பார்க்க ஒரே மாதிரி இருக்கலாம்... புக் செய்யும் முன் இதை எல்லாம் தெரிஞ்சிக்கோங்க!!
வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனத்தில் இருந்து விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 (VF7) என்கிற இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில் இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் இன்று (ஜூலை 15) துவங்கப்பட்டுள்ளது. கார்களின் விலைகளை அறிவிப்பதற்கு முன்பே துவங்கப்பட்டுள்ள வின்ஃபாஸ்ட் கார்களுக்கான முன்பதிவுகள் குறித்து ஏற்கனவே பார்த்திருந்தோம்.
இந்த தொகுப்பில் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலக்ட்ரிக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகள் பற்றி பார்க்க போகிறோம். இந்த இரு எலக்ட்ரிக் கார்களும் ஒரே நிறுவனத்தில் உருவாக்கப்பட்டு, பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், இவை இரண்டிற்கும் இடையே நிறைய வேறுப்பாடுகள் உள்ளன.

அளவு: விஎஃப்6 ஆனது காம்பெக்ட்டான உடலமைப்பை கொண்ட எலக்ட்ரிக் காராக, தினந்தோறும் நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளிலும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. மறுப்பக்கம், விஎஃப்7 ஆனது சற்று அளவில் பெரியதான மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். இந்த எலக்ட்ரிக் காரின் நீளம் மட்டுமே 4.5 மீட்டருக்கும் அதிகமாகும்.
பேட்டரி & செயல்படுதிறன்: விஎஃப்6 எலக்ட்ரிக் காரில் 59.6kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்படுகிறது. இதன் உதவியுடன் இயங்கும் எலக்ட்ரிக் மோட்டாரின் இயக்க ஆற்றல் ஆனது காரின் முன் சக்கரங்களுக்கு செல்கிறது. அதுவே, விஎஃப்7 எலக்ட்ரிக் காரில் அளவில் பெரியதான 75.3kWh பேட்டரி பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி ஆனது விஎஃப்7 காரின் ஈக்கோ வேரியண்ட்டில் இயக்க ஆற்றலை முன் சக்கரங்களுக்கும், பிளஸ் வேரியண்ட்டில் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்குகிறது.

ரேஞ்ச்: விஎஃப்6 எலக்ட்ரிக் காரில் பொருத்தப்படும் 59.6kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலமாக, இந்த காரின் ஈக்கோ மோடில் அதிகப்பட்சமாக 399கிமீ தொலைவிற்கும், பிளஸ் வேரியண்ட்டில் 381கிமீ தொலைவிற்கும் பயணிக்கலாம் என WLTP சான்றளிக்கப்பட்டு உள்ளது. விஎஃப்7 எலக்ட்ரிக் காரில் இரு வேரியண்ட்களிலும் 450கிமீ வரையிலான மைலேஜை பெறலாம்.
பிக்-அப்: வின்ஃபாஸ்ட் விஎஃப்6 எலக்ட்ரிக் காரின் விலைமிக்க பிளஸ் வேரியண்ட்டில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 8.89 வினாடிகளில் எட்டிவிடலாம். அதுவே, விஎஃப்7 எலக்ட்ரிக் காரில் 0-இல் இருந்து 100km/h வேகத்தை ஈக்கோ வேரியண்ட்டில் 9.5 வினாடிகளிலும், பிளஸ் வேரியண்ட்டில் 5.8 வினாடிகளிலும் எட்டிவிடலாம்.

உட்புற கேபின் & தொழிற்நுட்பம்: இந்த இரு வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார்களிலும் லெவல்-2 அடாஸ் (ADAS) வசதிகள், ஹெட்-அப் டிஸ்பிளே (Head-up Display) உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அதேநேரம், விஎஃப்7 எலக்ட்ரிக் காரில் கூடுதலாக வேகன் லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, பனோராமிக் கண்ணாடி ரூஃப் மற்றும் சிக்னெச்சர் எல்இடி விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதன் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலக்ட்ரிக் கார்களை வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், விஎஃப்6 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.25 லட்சத்தில் இருந்தும், விஎஃப்7 காரின் விலைகள் ரூ.35 லட்சத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த இரு எலக்ட்ரிக் கார்களில் எது உங்களது தேவைக்கு ஏற்றதாக உள்ளதோ அதை புக் செய்யலாம்.


Click it and Unblock the Notifications









