தமிழ்நாட்டில் தொழிற்சாலை, கேரளாவில் முதல் ஷோரூம்! தென்னிந்தியா வழியாக நுழையும் வெளிநாட்டு கார் கம்பெனி!!
வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனம். எந்த அளவிற்கு பெரியது என்றால், நம் இந்தியாவின் மாருதி சுஸுகி (Maruti Suzuki) போன்று இலட்சக்கணக்கில் வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக வின்ஃபாஸ்ட் விளங்குகிறது. மாருதி சுஸுகியில் இருந்து இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதில்லை, அதற்கென தனியாக சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) என்கிற நிறுவனம் உள்ளது. ஆனால், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருசக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன என்றால், இந்த வியட்நாம் கம்பெனி எந்த அளவிற்கு பிரம்மாண்டமானது என்பதை யோசித்து பாருங்கள்.
இத்தகைய நிறுவனம்தான் அடுத்ததாக உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையான இந்தியாவில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்க உள்ளது. இதுகுறித்த செய்திகள் கடந்த சில வருடங்களாகவே வெளிவந்து கொண்டிருந்த நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற இந்தியாவின் மிக பெரும் ஆட்டோமொபைல் கண்காட்சியான ஆட்டோ எக்ஸ்போவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

தெரிவித்தது மட்டுமின்றி, முதலாவதாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர உள்ள கார் & பைக்குகளையும் ஆட்டோ எக்ஸ்போவில் வின்ஃபாஸ்ட் களமிறக்கியது. அதேநேரம் மறுப்பக்கம், தமிழ்நாட்டில் தொழிற்சாலை அமைக்கும் பணிகளிலும் வின்ஃபாஸ்ட் ஈடுப்பட்டு வந்தது. இதற்கிடையில், பெரியதாக எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இந்தியாவில் அதன் முதல் ஷோரூமை நிறுவி வருகிறது.
பொதுவாகவே, வெளிநாட்டு கார் அல்லது பைக் கம்பெனிகள் இந்தியாவிற்கு வந்தால், முதலாவதாக தலைநகர் டெல்லி அல்லது மும்பையில் டீலர்ஷிப் ஷோரூமை திறப்பது வழக்கம். பிரபல அமெரிக்க எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனமான டெஸ்லா (Tesla) மும்பையில் தனது முதல் இந்திய ஷோரூமை திறக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதுவே, ஒரு சில நிறுவனங்கள் சமீப காலமாக பெங்களூருவில் முதல் ஷோரூமை திறக்க விரும்புக்கின்றன.

ஆனால், உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுள் ஒன்றான வின்ஃபாஸ்ட், இந்தியாவில் முதல் ஷோரூமை அனைவரும் ஆச்சிரியப்படும் விதமாக கேரளாவில் திறக்க உள்ளது. இந்த ஷோரூம் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்றுவரும் நிலையில், முதல் தொகுப்பு வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார்கள் கேரளாவை வந்தடைய துவங்கி உள்ளன.
கேரளாவின் கொச்சியில் ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பரபரப்பான களமசேரி பகுதியில் திறக்கப்பட உள்ள முதல் வின்ஃபாஸ்ட் ஷோரூமை இவிஎம் க்ரூப் (EVM Group) கவனித்துக் கொள்ள உள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் மட்டுமின்றி, பி.எம்.டபிள்யூ (BMW), ஸ்கோடா (Skoda) போன்ற பல முன்னணி கார் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ டீலர் பார்ட்னராக கேரளாவில் இவிஎம் க்ரூப் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இவிஎம் க்ரூப்பிற்கு சொந்தமாக திருவனந்தபுரத்தில் உள்ள காலி இடத்தில் தற்போதைக்கு வின்ஃபாஸ்ட் விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலக்ட்ரிக் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில், பெரிய கனரக லாரியில் ஒன்றின் மீது ஒன்றாக கொண்டுவரப்பட்ட விஎஃப்6 மற்றும் விஎஃப்7 எலக்ட்ரிக் கார்களை காணலாம்.
இதன்பின், இங்கிருந்து கொச்சியில் அமைய உள்ள ஷோரூமிற்கு இந்த வின்ஃபாஸ்ட் விஎஃப்6 (VF6) மற்றும் விஎஃப்7 (VF7) எலக்ட்ரிக் கார்கள் அனுப்பி வைக்கப்படும். லாரியில் வந்து இறங்கும் வின்ஃபாஸ்ட் கார்களில் கீறல்களில் இருந்து பாதுகாக்கக்கூடிய படலம் இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும், வெளிநாடுகளில் இருப்பதை போல் கார்களில் இடதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தாக்குப்பிடிப்பதற்கு இந்தியாவிலேயே தொழிற்சாலை அமைப்பதுதான் சிறந்த முடிவாகும். வின்ஃபாஸ்ட் தற்போதைக்கு வியட்நாமில் இருந்து பாகங்களை கொண்டுவந்து தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் வைத்து முழு காராக அசெம்பிள் செய்து விற்பனை செய்ய உள்ளது. இதனால்தான், முதல் ஷோரூமை அருகிலேயே கொச்சியில் திறக்க உள்ளது. ஆனால், தற்போது கேரளாவுக்கு வந்துள்ள வின்ஃபாஸ்ட் கார்களுக்குள் இடதுப் பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் உள்ளதால், அவை வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டவை என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









