ஆட்டோ எக்ஸ்போல பலரின் மனதை கவர்ந்த இ-கார்.. சீக்கிரமே மேட்-இன் தமிழ்நாடு இ-காரா விற்பனைக்கு வர போகுதா! எப்போ?
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் வின்ஃபாஸ்ட் (VinFast)-ம் ஒன்றாகும். இது ஓர் வியாட்நாமைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் இந்தியாவில் வெகு விரைவிலேயே கால்தடம் பதிக்க உள்ளது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய பிரமாண்ட கார் உற்பத்தி ஆலையை அது தென் தமிழகத்தில் அமைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஆலையில் வைத்து எலெக்ட்ரிக் கார்களையும், ஸ்கூட்டர்களையும் அது தயாரிக்க இருக்கின்றது. இங்கு தயாரிக்கப்படும் மேட்-இன் தமிழ்நாடு வாகனங்கள் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிற்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் முதல் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் கார் பற்றிய விபரங்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி வின்ஃபாஸ்ட் விஎஃப்6 எஸ்யூவி (VinFast VF6 SUV) காரே நாட்டில் முதலில் விற்பனைக்கு வரும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

இந்த காரின் அறிமுகம் இன்னும் ஒரு சில தினங்களிலேயே அரங்கேற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், துள்ளியமான நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை. இருப்பினும், காரின் அறிமுக நாளுக்கு வெகு தூரம் இல்லை என்கிற சூசகமான பதில் மட்டுமே வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
ஆகையால், ஆகஸ்டு 15 ஆம் தேதி அல்லது அதற்குள்ளாக வின்ஃபாஸ்ட்-இன் முதல் மின்சார கார் நாட்டில் விற்பனைக்கு வந்துவிடும் என தெரிகின்றது. இந்தியாவில் முதலில் விற்பனைக்கு வர இருப்பதாக நம்பப்படும் வின்ஃபாஸ்ட் விஎஃப்6 ஓர் அதிக பிரீமியம் அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

அதில், லெவல் 2 அடாஸ் (Level 2 ADAS) போன்ற தொழில்நுட்பங்களைக்கூட எதிர்பார்க்கலாம். இதுமட்டுமல்ல 12.9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பட்டன் கன்ட்ரோல்களைக் கொண்ட டேஷ்போர்டு உள்ளிட்டவையும் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. உலக சந்தையில் இந்த அம்சங்களுடனேயே வின்ஃபாஸ்ட் விஎஃப்6 கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே இந்த அம்சங்கள் எல்லாம் இந்தியாவிற்கான விஎஃப்6-லும் எதிர்பார்க்கப்படுகின்றன. மிக முக்கியமாக 59.6 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கும் அதில் எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 399 கிமீ வரை ரேஞ்ச் தரும். இதைவிட சிறிய பேட்டரி பேக்கில் இந்தியர்களைக் கவர கொண்டு வந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

சிறிய பேட்டரி பேக் கொண்டிருந்தால் மட்டுமே அதை குறைவான விலையில் விற்பனைக்கு வழங்க முடியும். எலெக்ட்ரிக் மோட்டார் விஷயத்திலும் இரண்டு விதமான தேர்வுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. ஒன்று 174 எச்பி திறனிலும், மற்றொன்று 201 எச்பி திறனிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய ஆற்றலை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலும், அதிக பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய வாகனமாக இது விற்பனைக்கு வர இருப்பதாலும் இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி காணப்படுகின்றது.
குறிப்பாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025இன் போது இந்த காரை காட்சியப்படுத்தியதில் இருந்து பலரின் மனம் கவர்ந்த காராகவே இது மாறிவிட்டது. இதுவே வெகுவிரைவில் நாட்டில் விற்பனைக்கு வர இருப்பதாக இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார கார்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழலிலேயே வின்ஃபாஸ்ட் விஎஃப்6 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் அறிமுகம் விரைவில் அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது டாடா மோட்டார்ஸ், எம்ஜி போன்ற மின்சார கார் பிரிவில் முன்னணி பிராண்டுகளாக மாறியிருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









