ரூ.50 லட்சத்தில் இப்படிப்பட்ட காரை கொண்டுவந்தால் யாருக்கு தான் வாங்க தோணாது? ஷோரூமில் அதிகமாக சினிமா ஸ்டார்ஸ்!
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) ஆகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் புதிய செயல்திறன்மிக்க, அதற்கேற்ப விலைமிக்க காராக கோல்ஃப் ஜிடிஐ களமிறக்கப்பட்டு உள்ளது. இந்த கார் சமீபத்தில்தான் விலைகள் அறிவிக்கப்பட்டு, அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அறிமுகம் செய்த போதே கோல்ஃப் ஜிடிஐ காருக்கான முன்பதிவுகளை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் துவங்கியது. முதற்கட்டமாக வெறும் 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களுக்கு மட்டுமே முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளதால், பணக்காரர்கள் இந்நேரம் காரை புக் செய்ய ஆரம்பித்து இருப்பார்கள் என அப்போதே தெரிவித்து இருந்தோம்.
அது உண்மைதான் என்பதுபோல, ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காருக்கான டெலிவிரி துவங்கப்பட்டதும் வரிசையாக இந்த காரின் டெலிவிரிகளை பார்த்து வருகிறோம். சமீபத்தில்தான், ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன் (Vivek Jayaraman) புத்தம் புதிய கோல்ஃப் ஜிடிஐ காரை டெலிவிரி பெற்றதை நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம்.

இவ்வாறு, டிவி நிறுவனங்களை சேர்ந்தவர்களும், சினிமா துறையை சேர்ந்தவர்களும் தான் இந்த காரை அதிகமாக வாங்கி வருகின்றனர். கேரளாவில் ஒரு ஃபோக்ஸ்வேகன் ஷோரூமில் மட்டும் ஒரே நாளில் 25 கோல்ஃப் ஜிடிஐ கார்கள் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகர்கள் அதிக பேர் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை டெலிவிரி பெற்றுள்ளனர்.
நடிகர் மம்முட்டி (Mammoooty) ஏற்கனவே பழைய ஜென்ரேஷன் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை வைத்திருப்பினும், புதியதாக ஒன்றை வாங்கியுள்ளார். நடிகர் ஜெயசூர்யா (Jayasurya) மூன்ஸ்டோன் கிரே பிளாக் (Moonstone Grey Black) நிறத்தில் பிராண்ட்-நியூ கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கியுள்ளார். இதேபோல், முன்னணி மலையாள நடிகர்கள் ஃபகத் ஃபாசில் மற்றும் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோரும் இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை வாங்கியுள்ளனர்.

நடிகரும், கேரளாவின் ஒரே பாஜக எம்பியுமான சுரேஷ் கோபியின் மகன் மாதவ் சுரேஷ் கிரே நிறத்தில் புதியதாக கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கியுள்ளார். இந்தியாவில் மொத்தமாகவே, 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே முதற்கட்டமாக விற்பனை செய்ய ஃபோக்ஸ்வேகன் முடிவெடுத்து இருக்கும் நிலையில், அவற்றுள் 25 கார்கள் கேரளாவில் குறிப்பிட்ட ஷோரூம் ஒன்றின் மூலமாக டெலிவிரி செய்யப்பட்டு இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.
இந்த அளவிற்கு வரவேற்பை பெற்றுவரும் கோல்ஃப் ஜிடிஐ கார் ஆனது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் 4 கதவுகளை கொண்ட ஹாட் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். ரூ.52.99 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு காரின் விலை அதிகமாக இருப்பதற்கு முக்கியமான காரணம், கோல்ஃப் ஜிடிஐ கார்களை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் உற்பத்தி செய்வது இல்லை.

முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்யப்படுகிறது. கோல்ஃப் ஜிடிஐ காரில் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 265 பிஎஸ் மற்றும் 370 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என்ஜினின் இயக்க ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்குகிறது. இதன் உதவியுடன், 0-இல் இருந்து 100km/h வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய கோல்ஃப் ஜிடிஐ காரின் டாப்-ஸ்பீடு மணிக்கு 250கிமீ ஆகும். இந்த காரினுள் 12.9 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் 7-ஸ்பீக்கர் இம்மெர்சிவ் ஆடியோ சிஸ்டம் வழங்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி மலையாள நடிகர்கள் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ காரை வாங்கியுள்ளதாக தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளதே தவிர்த்து, அவர்கள் இனி காரை வெளியில் கொண்டுவந்தால்தான் அவர்களது காரின் தோற்றம் தெரியவரும். அதிக விலை கொண்ட இந்த காரை வாங்கியிருப்பவர்கள் அனைவரும் விவிஐபி-கள் என்பதால், மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் என்பதற்காக கூடுதல் ஆக்ஸஸரீகளை பொருத்திக் கொண்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications









