இந்த கார் இந்தியால விற்பனைக்கு வர போகுதா!.. மார்க்கெட்டே ரெண்டாக போகுது..
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் மாடல் இந்தியாவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆமாங்க, இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இந்திய மார்க்கெட்டில் இந்த காருக்கு நீண்ட காலமாகவே எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, கார் காதலர்கள் பலரின் எதிர்பார்ப்பாக கோல்ஃப் ஜிடிஐ உள்ளது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. முக்கியமாக, ஃபோக்ஸ்வேகன் கார் காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் இந்த தகவல் கவர்ந்துள்ளது. கோல்ஃப் ஜிடிஐ ஓர் அதிக ஆற்றலை வெளியற்றும் திறன் கொண்ட கார் மாடல் ஆகும். ஆகையால், அதிக திறனை வெளியேற்றும் காரை காதலிப்போரின் கவனத்தையும் இந்த கார் தன் பக்கம் வளைத்துப் போட்டிருக்கின்றது.

இதன் வருகையை உறுதியானது என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த காரின் வருகையை முன்னிட்டு ஏற்கனவே ஃபோக்ஸ்வேகன் கார் விற்பனையாளர்கள் ப்ரீ-புக்கிங் பணிகளைத் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆனால், குறிப்பிட்ட சில டீலர்களே மட்டுமே இந்த பணியைத் தொடங்கி இருக்கின்றனர்.
இது அதிகாரப்பூர்வமான புக்கிங் பணிகள் இல்லை என்பது கவனிக்கத்தகுந்தது. விரைவில், கோல்ஃப் ஜிடிஐ காருக்கான அதிகாரப்பூர்வமான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிடும் என தெரிகின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்த காரை முழுமையாக கட்டியமைக்கப்பட்ட கார் மாடலாக இறக்குமதி செய்தே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது.
இதுமட்டுமல்ல, முதலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இறக்குமதி செய்யவும் அது திட்டமிட்டு இருக்கின்றது. ஆகையால், கிடைக்கும் வரவேற்பைப் பொருத்த அடுத்தடுத்த லாட்டுகளாக இந்த கார் மாடல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி முதல் லாட்டாக 250 யூனிட்டுகள் கோல்ஃப் ஜிடிஐ கார் மாடல் களமிறக்கப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
உலகின் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்ட ஹேட்ச்பேக் ரக கார் மாடல்களில் கோல்ஃப் ஜிடிஐ-ம் ஒன்றாகும். இந்த காரில் 245 பிஎஸ் மற்றும் 370 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கக் கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும். அதேவேளையில், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.9 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. ஃபோக்ஸ்வேகனின் இந்த தயாரிப்பு இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் மினி கூப்பர் எஸ் போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
இதற்கு அதிக போட்டியை வழங்கும் நோக்கிலேயே ஏகப்பட்ட பிரீமியம் அம்சங்களை இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், கோல்ஃப் ஜிடிஐ கார் மாடலில் ஜிடிஐ எனும் பேட்ஜ் கொண்ட 3ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல், ஜிடிஐ வகை முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 12.9அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர் மற்றும் ஆம்பியன்ட் லைட் போன்ற பன்முக பிரீமியம் அம்சங்களை ஃபோக்ஸ்வேகன் வழங்கி இருக்கின்றது.
இதேபோல், வெளிப்புற தோற்றத்திலும் மிகவும் அட்டகாசமான தயாரிப்பாக கோல்ஃப் ஜிடிஐ காட்சியளிக்கின்றது. இதன் அழகிற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக மேட்ரிக்ஸ் எல்இடி ரக ஹெட்லைட், கற்கண்டு போன்ற லைட்டுகள், தேன் கூடு போன்ற அமைப்புடைய பம்பர், ஸ்போர்ட்ஸ் கார்களில் வழங்கப்படுவதைப் போன்ற டூயல் எக்சாஸ்ட் பைப் மற்றும் டிஃப்யூசர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே கோல்ஃப் ஜிடிஐ-க்கும் சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் லாட்டாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கும் 250 யூனிட்டுகளும் சில வாரங்களிலேயே விற்று தீரக் கூடும் என்றும் யூகிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








