கிரெடிட் கார்டோ, டெபிட் கார்டோ ஏதோ ஒன்றை தயாரா வச்சுக்கோங்க.. மே 5ல் எதிர்பார்த்த காரின் புக்கிங் தொடங்குது!!
இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) கார் மாடல் உள்ளது. இந்த காரை இன்னும் ஒரு சில நாட்களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இப்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்களின்படி நடப்பு மே மாத இறுதிக்குள் இந்த கார் கட்டாயம் விற்பனைக்கு வந்துவிடும் என நம்பப்படுகின்றது. இந்த நிலையிலேயே கோல்ஃப் ஜிடிஐ காருக்கு சீக்கிரமே புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது அக்காரின் வருகை கூடுதலாக உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வருகின்ற மே 5 ஆம் தேதி அன்றே கோல்ஃப் ஜிடிஐ காருக்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்க இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவின் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன்கொண்ட ஹேட்ச்பேக் காராக மாறும்.

முழுமையாக கட்டியமைக்கப்பட்ட வாகனமாகவே கோல்ஃப் ஜிடிஐ காரை வெளிநாட்டில் இருந்து ஃபோக்ஸ்வேகன் இறக்குமதி செய்து விற்க இருக்கின்றது. ஆகையால் கொஞ்சம் காஸ்ட்லியான விலைக் கொண்ட காராகவே இது இருக்கும். ரூ. 30 லட்சத்திற்கும் அதிகமான விலையை அதுக் கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது.
அதேபோல், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்த காரை விற்பனைச் செய்யவும் ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்த காருக்கான புக்கிங்கை நாளை மறுநாள் (திங்கள்) முதல் தொடங்க இருக்கின்றது, ஃபோக்ஸ்வேகன். இந்த காரில் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட 2.5 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் மோட்டாரையே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது.

இது அதிகபட்சமாக 261 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனே இதனுடன் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 250 கிமீ ஆகும்.
அதேவேளையில், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்ட இந்த காருக்கு வெறும் 5.9 செகண்டுகளே போதுமானதாக உள்ளது. அதிக ஆற்றலை உருவாக்குவதில் சிறப்பம்சங்களை அதிகளவில் தாங்கி இருப்பதிலும் இந்த கார் மாடல் சிறந்ததாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
மிக முக்கியமாக இந்த காரில் 12.9 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாட் ஜிபிடி வசதி மற்றும் வாய்ஸ் கமெண்ட் ஆகிய வசதியுடன் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகின்றது. இதுமட்டுமல்ல, ஜிடிஐ கார்களுக்கே உரித்தான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 10.25 அங்குல அளவிலான டிரைவருக்கான திரை போன்ற அம்சங்களும் அதில் இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது.
கூடுதலாக, வயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைப்பு வசதி, ஹெட்ஸ் அப் திரை, மல்டி ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட் வசதிக் கொண்ட இருக்கைகள் மற்றும் பலதரப்பட்ட வண்ணங்களில் ஒளிரக் கூடிய ஆம்பியன்ட் லைட் போன்ற அம்சங்களையும் கோல்ஃப் ஜிடிஐ காரில் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுதவிர, அடாஸ் (ADAS) போன்ற நவீன கால அம்சங்களையும் இந்த காரில் ஃபோக்ஸ்வேகன் வாரி வழங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, பயணிகளின் உயிரைப் பாதுகாக்கும் விதமாக பன்முக ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட அம்சங்களையும் வழங்கி இருக்கின்றதாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்த தகவல்களின்படி வைத்து பார்க்கையில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ திறனை வெளியேற்றுவதில் மட்டுமல்ல, பிரீமியம் அம்சங்களைத் தாங்கியிருப்பது மற்றும் பயணிகளுக்கு பாதுகாப்பை வழங்குவது என அனைத்திலும் மிக சிறந்ததாக இருக்கும் என தெரிகின்றது. ஆனால், இதை மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைச் செய்ய ஃபோக்ஸ்வேகன் திட்டமிட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








