ஃபோக்ஸ்வேகனுக்கு கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் விற்பனை! இந்த ஒரு காரை வாங்க தான் எல்லாரும் ஆர்வம்!
ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), 2025 அக்டோபர் மாதத்தில் விர்டுஸ் (Virus) என்கிற தனது செடான் ரக காரை 2 ஆயிரத்து 453 யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ஏனெனில், இதன் மூலம் இந்தியாவின் நம்பர்-1 பிரீமியம் செடான் கார் என்ற பெருமையை ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் பெற்றுள்ளது.
ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற விற்பனையில் போட்டியாக உள்ள கார்களைப் பின்னுக்குத் தள்ளி, செடான் சந்தையில் 40% பங்கை விர்டுஸ் பெற்றுள்ளது. விர்டுஸ் காரின் ஸ்போர்ட்டியான தோற்றம், சிறந்த செயல்திறன், பாதுகாப்பு மற்றும் ஜெர்மன் பொறியியல் ஆகியவற்றிற்காக காலப்போக்கில் ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளது.

தற்போதைக்கு இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனையாகும் கார்கள் என்றால், அவை விர்டுஸ் மற்றும் டைகுன் (Taigun) என்கிற எஸ்யூவி கார் ஆகும். டைகுன் உடன் சேர்ந்து, உள்நாட்டு விற்பனையில் 1 லட்சத்து 60 ஆயிரம் யூனிட்களை விர்டுஸ் கடந்துள்ளது. உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில், ஃபோக்ஸ்வேகன் இந்த கார்களுக்கான கிட்டத்தட்ட 90% பாகங்கள் மற்றும் உதிரிபாகங்களை உள்ளூரிலேயே உற்பத்தி செய்து, முழுமையாக இந்திய மயமாக்கியுள்ளது.
இது பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து, இந்திய வாடிக்கையாளர்களுக்கு கார் விலையை மேலும் மலிவானதாக்குகிறது. விர்டுஸ் காருடன் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 4 வருட சேவைத் தொகுப்புகளையும் வழங்குகிறது. இது இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை சேர்க்கிறது. ஃபோக்ஸ்வேகனின் இந்தியா 2.0 யுக்தியின் ஒரு பகுதியாக விர்டுஸ் செடான் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியா 2.0 யுக்தியில் ஏற்கனவே ஸ்கோடா குஷாக், ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த வரிசையில் 4வது காராக விர்டுஸ் இணைந்தது. இந்த கார் குடும்பப் பயனர்கள் மற்றும் கார் ஆர்வலர்கள் என இரு தரப்பினரையும் கவர்ந்துள்ளது.
இதன் உயர்தர வடிவமைப்பு ஒரு பிரீமியம் தரத்திலான ஆடம்பர கார் உணர்வை வழங்குகிறது. மேலும் காரின் விசாலமான உட்புறம் சிறந்த வசதியை உறுதி செய்கிறது. சந்தையில் விர்டுஸ் செடான் கார் இரண்டு என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதில் ஒன்றான 1.0 லிட்டர், 3-சிலிண்டர் TSI என்ஜின் 115 பிஎஸ் சக்தியையும் 178 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜினை விர்டுஸ் காரில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6-ஸ்பீடு டார்க்-கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் பெறலாம். மற்றொரு என்ஜின் ஆப்ஷனான 1.5 லிட்டர், 4-சிலிண்டர் TSI என்ஜின் 150 பிஎஸ் சக்தியையும், 250 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு DSG டூயல்-கிளட்ச் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
இந்த இரண்டு என்ஜின்கள் உடனும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் காரில் 24 மணி நேரத்தில் அதிகபட்ச தூரத்தை கடந்து அகில இந்திய சாதனை படைத்துள்ளனர். 1.0 லிட்டர் என்ஜினில் 4357.21 கி.மீ தூரத்தையும், 1.5 லிட்டர் என்ஜினில் 4654.48 கி.மீ தூரத்தையும் 24 மணி நேரத்தில் கடந்தனர். 1.0 லிட்டர் என்ஜின் உடன் விர்டுஸ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை 11.56 லட்சம் ரூபாயில் தொடங்கி 17.10 லட்சம் ரூபாய் வரையிலும், 1.5 லிட்டர் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை 17.60 லட்சம் ரூபாயில் தொடங்கி 19.41 லட்சம் ரூபாய் வரையிலும் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விர்டுஸ் காருக்கு எதிர்பார்த்ததை காட்டிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கார், விர்டுஸ் ஆகும். இதனால், கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான பிரீமியம் தரத்திலான செடான் காராக விர்டுஸ் முதலிடத்தை பிடித்து இருப்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.


Click it and Unblock the Notifications









