700கிமீ-க்கு சார்ஜ் பற்றி யோசிக்கவே தேவையில்லை... வால்வோ எலக்ட்ரிக் பஸ் எங்க பார்த்தாலும் ஓட போகுது!
வால்வோ (Volvo) நிறுவனம் பி.இசட்.ஆர் (BZR) என்கிற பெயரில் எலெக்ட்ரிக் பேருந்துக்கான (Electric Buses) சேசிஸை உருவாக்கி எலக்ட்ரிக் பேருந்துத் துறையில் புதிய புரட்சியை நிகழ்த்த தயாராகி வருகிறது. 720 kWh வரையில் அளவில் பெரியதான பேட்டரி தொகுப்புகளை பொருத்தி, 700கிமீ தூரம் வரை இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பேருந்துகளை இந்த சேசிஸின் மூலம் உருவாக்கலாம்.
இதன் மூலம், குறைவான சார்ஜிங் நிறுத்தங்களுடன் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள முடியும். புதிய வால்வோ பிஇசட்ஆர் எலெக்ட்ரிக் சேசிஸ் தளம் ஆனது இரண்டு அல்லது மூன்று அச்சு அமைப்புகள் மற்றும் நான்கு முதல் எட்டு மாடுலர் எனர்ஜி ஸ்டோரேஜ் (Modular Energy Storage) உடன் எலக்ட்ரிக் பேருந்துகளை உருவாக்கக்கூடியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாடுலர் வடிவமைப்பு ஆனது சேசிஸை பல்வேறு விதமான தேவைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ள உதவும். இதன் மூலம், குறுகிய தூரப் பயணங்களுக்கோ அல்லது அதிகபட்ச பயணங்களுக்கோ ஏற்றவாறு எலக்ட்ரிக் பேருந்துகளை உருவாக்கிக் கொள்ளலாம். 720kWh வரையிலான பேட்டரி திறன் மற்றும் மேம்பட்ட செயல்திறன் ஆனது அதிகமான ரேஞ்ச் மற்றும் குறைவான பயண நேரத்தை உறுதி செய்கிறது.
"எங்களின் புதிய எலக்ட்ரிக் சேசிஸ் நீண்ட நேரத்திற்கு இயங்குவதற்கான திறன்களை அதிகமாக வழங்குகிறது. இது புதிய வழித்தடங்களை சாத்தியமாக்குகிறது மற்றும் டிரைவர்களுக்கு அதிக பல்துறைத் திறனை வழங்குகிறது" என்று வால்வோ பேருந்துகள் நிறுவனத்தின் தலைவர் அன்னா வெஸ்டர்பெர்க் கூறியுள்ளார்.
புதிய வால்வோ BZR எலெக்ட்ரிக் கோச் சேசிஸ், பசுமையான சுற்றுசூழல் மண்டலங்கள் உட்பட பல வழித்தடங்களில் எலக்ட்ரிக் பேருந்து சேவைகளை வழங்க நிறுவனங்களுக்கு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது. ஆதலால், நீண்ட தூரப் பயணங்களுக்கான எலக்ட்ரிக் பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பயணங்களுக்கான எலக்ட்ரிக் பேருந்துகளை உருவாக்குவதற்கு இந்த புதிய சேஸிஸ் ஏற்றதாக இருக்கும்.
இந்த எலக்ட்ரிக் சேசிஸ் ஆனது சந்தை மற்றும் வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ப உடல் பகுதியை பொருத்திக் கொள்வதற்கு வழிவகை செய்வதாக வால்வோ தெரிவித்துள்ளது. வால்வோ BZR எலெக்ட்ரிக் கோச் சேசிஸ் அறிமுகத்துடன், வால்வோ பேருந்துகள் நிறுவனம் இப்போது அனைத்துப் பிரிவுகளுக்கும் (நகரம், நகரங்களுக்கு இடையே, நீண்ட தூரம் மற்றும் சுற்றுலா) எலக்ட்ரிக் போக்குவரத்து தீர்வுகளை வழங்குகிறது.
இவை அனைத்தும், வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப பேருந்துகளை உருவாக்கக் கூடியவைகளாக உள்ளன. "அதிகமான வழித்தடங்களில், அதிகமான மக்களுக்கு நிலையான பயணத்தை அணுகக்கூடிய வகையில் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்," என்று அன்னா வெஸ்டர்பெர்க் தெரிவித்துள்ளார்.

"வால்வோ BZR எலெக்ட்ரிக் கோச் சேசிஸ், கார்பன் உமிழ்வுகளைக் குறைப்பதையும் தாண்டி மின்மயமாக்கல் எவ்வாறு செயல்பட முடியும் என்பதைக் காட்டுகிறது. பொறுப்புடன் பெறப்பட்ட பொருட்கள் மற்றும் நீண்ட காலம் உழைக்கும் வகையில் கட்டப்பட்ட தயாரிப்புகள் மூலம் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறோம்.
அன்றாடப் பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்கள் என இரண்டிற்கும் செயல்திறன் மற்றும் மிக உயர்ந்த பாதுகாப்புத் தரங்களை கொண்ட தயாரிப்புகளை வழங்குகிறோம்" என்றும் அவர் மேலும் கூறினார். வால்வோ குழுமத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், வால்வோ பேருந்துகள் நிறுவனத்தால் நன்கு சோதித்து நிரூபிக்கப்பட்ட பவர்டிரெய்ன்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.
பேருந்து முனையங்களிலும் வழித்தடங்களிலும் சார்ஜிங் செய்வதற்கான வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய, புதிய வால்வோ BZR எலெக்ட்ரிக் கோச் சேசிஸ் ஆனது 250 kW CCS சார்ஜிங் மற்றும் 450 kW OppCharge என இரு ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்த சேசிஸின் நீளம் 9.5 முதல் 14.9மீ வரை (உடலைப் பொறுத்து) உள்ளது.
இந்த சேசிஸில் உருவாக்கப்படும் எலக்ட்ரிக் பேருந்துகளை 4x2 அல்லது 6x2 டிரைவ் சிஸ்டத்துடன் பயன்படுத்தலாம். இந்த சேஸிஸில் அதிகப்பட்சமாக 27,200 கிலோ வரை எடை கொண்ட எலக்ட்ரிக் பேருந்தை உருவாக்கலாம். அதேபோல், இந்த பேருந்துகள் 200 kW முதல் 400 kW வரை இயக்க ஆற்றலில் இயங்கக் கூடியவைகளாக இருக்கும். எனர்ஜி ஸ்டோரேஜ் அமைப்பின் திறன் 360-720kWh ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோவின் தயாரிப்புகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பானவை என்கிற பெயரை மக்கள் மத்தியில் பெற்றுள்ளன. அந்த வகையில், இந்த புதிய சேசிஸும் பயணிகள் மற்றும் சாலைப் பயனர்கள் என இரு தரப்பினரையும் பாதுகாக்கும் வகையில் வால்வோ பேருந்துகளின் சமீபத்திய செயலிகளின் பாதுகாப்பு அமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








