1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கும் அளவுக்கு வொர்த்து தானா? காரில் இல்லாத வசதிகளே கிடையாதுனு சொல்லலாம்!
வால்வோ கார் இந்தியா (Volvo Car India) நிறுவனம் அதன் எக்ஸ்சி90 (XC90) காரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் (Facelift) அப்டேட் வெர்சனை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்து உள்ளது. இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் வால்வோ கார்களுள் ஒன்றாக விளங்கும் எக்ஸ்சி90 -இன் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். புதிய வால்வோ எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 கோடியே 2 லட்சத்து 89 ஆயிரத்து 900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரை பற்றிய மற்ற விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக விலையுயர்ந்த கார்களும் எஸ்யூவி உடலமைப்பில் அதிக பேரால் வாங்கப்பட்டு வருகின்றன. இதற்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த லக்சரி எஸ்யூவி கார்களுள் வால்வோ எக்ஸ்சி90 ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. வெளிநாடுகளில் சில விருதுகளை கூட இந்த வால்வோ கார் பெற்றுள்ளது.

இத்தகைய காரை தான் தற்போது வால்வோ நிறுவனம் இந்தியாவில் ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்டேட் செய்துள்ளது. டெல்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டின் தூதரகத்தில் நடைபெற்ற புதிய எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுகம் நிகழ்ச்சியில் நமது டிரைவ்ஸ்பார்க் குழு நேரில் கலந்துக் கொண்டது. இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிற்கான ஸ்வீடன் நாட்டு தூதர் ஜன் தெஸ்லெஃப் மற்றும் வால்வோ கார் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜோதி மல்ஹோத்ரா கலந்துக் கொண்டனர்.
புதிய எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காரின் தோற்றம் மெருக்கேற்றப்பட்டு இருப்பதுடன், அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுவாகவே, வால்வோ கார்கள் பாதுகாப்பு மிக்கவை ஆக உலகம் முழுக்க பார்க்கப்படுகின்றன. அந்த வகையில், புதிய எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காரும் பாதுகாப்பு மிக்கதாகவே உருவாக்கப்பட்டு உள்ளது.

இதற்காக முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் மற்றும் கேமரா ஆனது கார் பாதையில் இருந்து விலகி சாலையில் வேறு பாதைக்கு செல்ல நேர்ந்தால், அதனை கண்காணித்து மீண்டும் பழைய பாதைக்கே ஆட்டோமேட்டிக்காக கொண்டுவரும் என தெரிவித்துள்ள வால்வோ நிறுவனம், இந்த ரேடார் & கேமரா ஆனது பாதசாரிகள், சைக்கிள் ஓட்டிகள் மற்றும் பெரிய விலங்குகளை கூட அடையாளம் காணும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளன.
2025ஆம் ஆண்டிற்கான அப்டேட்டாக வால்வோ எக்ஸ்சி90 காரின் சஸ்பென்ஷன் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. காரின் சஸ்பென்ஷன் செட்-அப்பில் வழங்கப்பட்டுள்ள டேம்பர்கள் சாலையின் தரத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. 20-இன்ச்சில் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள புதிய எக்ஸ்சி90 கார் 'மல்பெர்ரி சிவப்பு' நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த காருக்கு உள்ளே டேஸ்போர்டில் 11.2 இன்ச்சில் புதிய மைய டச்ஸ்க்ரீன் திரை வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காரில் 2 லிட்டர் பெட்ரோல் மைல்ட்-ஹைப்ரீட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 250 எச்பி மற்றும் 360 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளதால், புதிய எக்ஸ்சி90 ஃபேஸ்லிஃப்ட் காருக்கு இந்தியாவில் அதிக கஸ்டமர்கள் கிடைப்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இந்த காரின் டெலிவிரிகள் இந்த மார்ச் மாதத்தில் இருந்தே துவங்கப்பட உள்ளது. இந்த வால்வோ காருக்கு விற்பனையில் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி கார்கள் போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications









