11 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வந்த ஆர்டர்... இந்திய இவி கம்பெனி சந்தோஷத்தில் திக்கு முக்காடுது!
வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபிலிட்டி (Wardwizard Innovations & Mobility), இந்தியாவில் செயல்படும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம். தற்போதைக்கு எலக்ட்ரிக் 2-சக்கர மற்றும் 3-சக்கர வாகனங்களை மட்டுமே வார்ட்விசார்ட் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் 'ஜாய் இ-பைக்' (Joy e-bike), ஜாய் இ-ரிக் (Joy e-rik) என இரு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஜாய் இ-பைக்கில் இருந்து எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களும், ஜாய் இ-ரிக்கில் இருந்து எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதில், ஜாய் இ-ரிக் நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் தற்போது வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வார்ட்விசார்ட் நிறுவனத்திற்கு இந்தியாவை தாண்டி சில வெளிநாடுகளிலும் நெட்வொர்க் உள்ளது. இதற்காக சில வெளிநாட்டு நிறுவனங்கள் உடன் இந்த இந்திய இவி நிறுவனம் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

அவ்வாறு, வார்ட்விசார்ட் நிறுவனம் பிலிப்பைன்ஸ் (Philippines) நாட்டின் பியூலா இண்டர்நேஷ்னல் டெவலப்மெண்ட் கார்ப்பிரேஷன் (Beulah International Development Corporation) என்கிற ரியல் எஸ்டேட் டெவலப்பர் (Real estate developer) நிறுவனத்துடன் கூட்டணியில் உள்ளது. இந்த கூட்டணி ஆனது கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது ஆகும்.
சுமார் 129 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான எலக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள பியூலா நிறுவனத்திற்கு வழங்குவதுதான் வார்ட்விசார்ட் நிறுவனம் ஏற்படுத்திக் கொண்ட அந்த கூட்டணி ஒப்பந்தம் ஆகும். இதன்படி, எலக்ட்ரிக் 2-சக்கர மற்றும் 3-சக்கர வாகனங்கள் மட்டுமின்றி கமர்ஷியல் பயன்பாட்டிற்கான எலக்ட்ரிக் 4-சக்கர வாகனங்களையும் பிலிப்பைன்ஸுக்கு வார்ட்விசார்ட் நிறுவனம் அனுப்ப வேண்டியுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் உருவாக்கிய எலக்ட்ரிக் வாகனங்களை வார்ட்விசார்ட் நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் தலைமையகத்தை கொண்ட பியூலா நிறுவனத்துக்கு அனுப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது வார்ட்விசார்ட் நிறுவனத்தின் 4 விதமான எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் பியூலா நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
ஜாய் இ-ரிக் நிறுவனத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த 4 எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களில் ஒன்று, குறைந்த எடையுடன் டிரைவர் உடன் சேர்த்து மொத்தம் 6 பேர் பயணிக்கக்கூடியதாக உள்ளது. மற்ற இரு எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் டிரைவர் உடன் சேர்த்து 7 பேர் வரையில் பயணிக்கக்கூடியதாக உள்ளது. ஏற்றி செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்த எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களின் எடையும், தோற்றமும் மாறுப்படுகின்றன.

இருப்பினும், இவை மூன்றுமே நெரிசல் மிகுந்த மணிலா போன்ற மாநகரத்தில் மக்களுக்கான போக்குவரத்து வாகனமாக இருக்கும். கடைசி 4வது எலக்ட்ரிக் 3-சக்கர வாகனம் ஆனது சரக்கு வாகனமாக பொருட்களை கொண்டு செல்லக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்படும் இந்த எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்கள் யாவும் வார்ட்விசார்ட் நிறுவனத்தில் பல்வேறு கட்ட சோதனைகளில் உட்படுத்தப்பட்டு இருந்தாலும், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அந்த நாட்டின் தரம் & விதிமுறைகளுக்கு ஏற்ப சோதனை செய்யப்பட உள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களின் பொது போக்குவரத்தில் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதுதான், வார்ட்விசார்ட் மற்றும் பியூலா நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணியின் முக்கிய நோக்கம் ஆகும். எலக்ட்ரிக் 4-சக்கர வாகனங்களை உருவாக்குவது வார்ட்விசார்ட் நிறுவனத்திற்கு அனுபவமில்லாத ஒன்றாகும். இருப்பினும், பியூலா நிறுவனத்துடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்காக கமர்ஷியல் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் 4-சக்கர வாகனங்களை பிரத்யேகமாக உருவாக்கி கொடுக்க உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 129 கோடி அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.11,216 கோடி) என்பது மிக பெரிய தொகை ஆகும். ஆதலால், பியூலா நிறுவனத்துக்கு இன்னும் நிறைய வாகனங்களை வார்ட்விசார்ட் நிறுவனம் உருவாக்கி கொடுக்க வேண்டியுள்ளது. மேலும், இந்தியாவில் உருவாக்கப்படும் மேட்-இன்-இந்தியா எலக்ட்ரிக் வாகனங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு வரும் மாதங்களில் அதிகமாக செல்ல உள்ளன.


Click it and Unblock the Notifications









