பேட்டரிக்கான காச வேணாம் சொல்லிட்டாங்க.. அதான் விற்பனை ஜோரா இருக்கு.. நெக்ஸான் இவிக்கே விபூதி அடித்த எம்ஜி கார்
எலெக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வாங்கலாம்னு இருக்கீங்களா?.. இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் எது என உங்களுக்கு தெரியுமா?.. இதைதான் நீங்கள் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால் உங்கள் தேடலை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடல் எம்ஜி விண்ட்ஸர் இவி (MG Windsor EV) ஆகும். ஆமாங்க, இந்தியாவில் மிக அதிகமாக இந்த கார் மாடலே விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. முன்னதாக இந்த இடத்தை டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) அலங்கரித்து வந்தது குறிப்பிடத்தகுந்தது.
அதன் இடத்தையே தற்போது விண்ட்ஸர் இவி தட்டி பறித்திருக்கின்றது. இந்த இடத்தை விண்ட்ஸர் இவி எப்படி தட்டி பறித்தது என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்தியர்கள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதற்கான காரணங்களையே பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பேட்டரி அஸ் எ சர்வீஸ் திட்டம்: இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க அதன் குறைவான விலை ஓர் முக்கிய காரணமாக இருக்கின்றது. ரூ. 10 லட்சம் இந்த காரின் ஆரம்ப விலை ஆகும். பேட்டரி அஸ் எ சர்வீஸ்-இன் கீழ் வாங்கும்போதே இந்த அளவு குறைவான விலைக்கு அது கிடைக்கும்.
இந்த திட்டத்தின்கீழ் காரை வாங்கும்போது, அதில் இடம் பெற்றிருக்கும் பேட்டரி பேக்கிற்கான தொகையை செலுத்த வேண்டியதில்லை. அதேவேளையில், கிமீ பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். அதாவது, ஒரு கிமீ டிராவல் செய்கிறோம் என்றால் 3 ரூபாய் மற்றும் 50 காசுகள் கட்டணமாக செலுத்த வேண்டும்.
சார்ஜ் செய்வதற்கான கட்டணம் இதில் அடங்காது. இது கார் உரிமையாளரின் தனி செலவாகும். பேட்டரி அஸ் எ சர்வீஸ், திட்டத்தால் பேட்டரி மீதான கவலையை எம்ஜி நிறுவனம் போக்கி இருக்கின்றது. இவையே பிளஸ்ஸாக மாறி அந்த காரின் விற்பனையை இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியடையச் செய்து இருக்கின்றது.
விண்ட்ஸர் இவியின் சிறப்புகள்: விலை குறைவாக இருந்தாலும் இந்த கார் அதிக சிறப்புமிக்கதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, இதன் கேபின் பிரீமியம் அம்சங்களால் நிரப்பட்டதாகக் காட்சியளிக்கின்றது. உயர் ரக மெட்டீரியல்களால் இதன் உட்பக்கம் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக, பின்னிருக்கையாளர்களுக்கும் அதிக சிறப்புகள் சென்று சேருகின்ற மாதிரியான வேலைகளை விண்ட்ஸர் இவியில் எம்ஜி பார்த்திருக்கின்றது.
135 டிகிரி வரை சாய்த்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கையே பின் பக்கத்தில் வழங்கி இருக்கின்றனர். அதில், மூன்று பேர் மிக தாராளமாக அமர முடியும். இத்துடன், பெரிய பனோரமிக் சன்ரூஃப், 9 ஸ்பீக்கர்கள் அடங்கிய இன்ஃபினிட்டி சவுண்டு சிஸ்டம், 15.6 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட்சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கும்.
இதுமட்டுமல்ல, வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, 256 வண்ணங்கள் கொண்ட ஆம்பியன்ட் லைட், வயர்லெஸ் செல்போன் சார்ஜர் போன்ற அம்சங்களும் விண்ட்ஸர் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், சென்சார் வசதிக் கொண்ட 360 டிகிரி பார்வை திறனுடைய கேமிரா பார்க்கிங்கிற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஒரே ஒரு சியூவி ரக கார் மாடலும் இதுவே ஆகும். எஸ்யூவி காருக்கே இட வசதியில் டஃப் கொடுக்கும் ரகம் என்றால் அது இதுதான் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமாதிரியான தனி சிறப்புகளைக் கொண்டே இந்தியர்களை தன் பக்கம் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றது விண்ட்ஸர் இவி.
ரேஞ்ச் மற்றும் மின்சார மோட்டார் விபரம்: இந்த காரில் ஓர் முழு சார்ஜில் 332 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 38.7 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 136 பிஎஸ் மற்றும் 200 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரையே இந்த காரில் எம்ஜி வழங்கி இருக்கின்றனர்.
சென்ற மாதத்தில் எவ்வளவு யூனிட்டுகள் விற்பனையாகின? விற்பனைக்கு வந்த இரண்டாவது மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் இது 3 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது. இதன் மிகப் பெரிய போட்டியாளரான நெக்ஸான் ஒவ்வொரு மாதமும் 2 ஆயிரம் யூனிட்டுகளை தொடவே போராடிக் கொண்டிருக்கின்ற சூழலில் விண்ட்ஸர் இவி 3 ஆயிரம் யூனிட்டுகளைத் தாண்டியே விற்பனையாகிக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, ஜனவரி 2025 மாதத்தில் மட்டும் 3,450 யூனிட்டுகள் வரை விண்ட்ஸர் இவி விற்பனையாகி இருக்கின்றது. அதேவேளையில், நெக்ஸான் இவி 1,289 யூனிட்டுகள் மட்டுமே அந்த மாதத்தில் விற்பனையாகின. இவ்வாறே தொடர்ச்சியாக விண்ட்ஸர் இவிக்கு கிடைக்கும் வரவேற்பானது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன்வாயிலாக இந்தியாவின் நம்பர் 1 எலெக்ட்ரிக் கார் மாடலாகவும் அது உருவெடுத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முந்தைய மாதங்களில் மட்டுமல்ல வரும் மாதங்களிலும் இந்த கார் விற்பனையில் மிகப் பெரிய வளர்ச்சியைக் காணும் என நம்பப்படுகின்றது. இதற்கு சான்றாகவே அது கடந்து வந்த பாதை இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் விற்பனை அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. இது டாடா மோட்டார்ஸ்க்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications








