2026இல் எந்த காரை வாங்குறதுனு புரியாம அலைய போறோம்! ஜனவரிக்குள் இத்தனை புதிய கார்கள் அறிமுகமா?
இந்திய கார் சந்தையானது டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. குறைந்தது ஆறு பிரீமியம் மற்றும் சொகுசு கார்கள் இந்த இரு மாதங்களில் மட்டும் அறிமுகமாகவுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை பிரீமியம் தரத்திலான எஸ்யூவி (SUV) கார் மாடல்களாகும். அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
டாடா ஹாரியர் & சஃபாரி பெட்ரோல் (Tata Harrier & Safari Petrol): டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சமீபத்தில் வெளிவந்த சியராவில் அறிமுகப்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் ஹைப்ரியன் டர்போசார்ஜ்டு டைரக்ட்-இன்ஜெக்ஷன் என்ஜின் கொண்ட ஹாரியர் பெட்ரோல் (Harrier petrol) காரை நாளை (டிசம்பர் 9) அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த என்ஜின் 158 பிஎச்பி குதிரைத்திறன் மற்றும் 255 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடனும் இது வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த மாதமே டாடா சஃபாரி பெட்ரோல் (Safari petrol) காரும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஹாரியர் பெட்ரோலில் உள்ள அதே என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் சஃபாரியிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த தலைமுறை கியா செல்டோஸ் (New-Gen Kia Seltos): புதிய செல்டோஸ் கார் டிசம்பர் 10 அன்று அறிமுகமாகி, ஜனவரியில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. இது மேம்படுத்தப்பட்ட இடவசதி மற்றும் சவுகரியத்துடன் கூடிய பெரிய உடலமைப்பை பெற்று வருகிறது. ட்ரினிட்டி பனோரமிக் டிஸ்ப்ளே உட்பட பல புதிய மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன், கவர்ச்சியான வெளிப்புறத் தோற்றத்தையும், பிரீமியம் உட்புறத்தையும் கொண்டிருக்கும். தற்போதைய செல்டோஸ் காரில் உள்ள என்ஜின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள் புதிய மாடலிலும் தொடரும் எனத் தெரிகிறது.

புத்தம் புதிய மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் (MINI Cooper Convertible): கச்சிதமான வடிவில் ஓபன்-ஏர் டிரைவிங் அனுபவத்தை விரும்புபவர்களை ஈர்க்கும் விதமாக ஜனவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மணிக்கு 30 கி.மீ வேகத்தில் செல்லும்போதும், இதன் முழு தானியங்கி ஃபேப்ரிக் கூரையை 18 வினாடிகளில் திறக்கவோ அல்லது மூடவோ முடியும்.
2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்கும் இது, 201 எச்பி குதிரைத்திறன் மற்றும் 300 என்.எம் டார்க் திறனை உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது. மேலும், 0 முதல் 100 கி.மீ வேகத்தை வெறும் 6.9 வினாடிகளில் எட்டி, மணிக்கு 237 கி.மீ உச்சப்பட்ச வேகத்தை அடையும்.

மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara): ஜனவரியில் விற்பனைக்கு வரவுள்ளது. இது ஹூண்டாய் க்ரெட்டா எலெக்ட்ரிக் காருக்கு போட்டியாளராக களமிறங்க உள்ளது. இ-விட்டாரா, 18-இன்ச் அலாய் சக்கரங்கள், 10-வழி பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, ஸ்லைடிங் மற்றும் 40:20:40 என்கிற விகிதத்தில் பிரிக்கக்கூடிய பின் இருக்கை, 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், லெவல்-2 மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS) மற்றும் ஏழு ஏர்பேக்குகள் போன்ற பிரீமியம் அம்சங்களுடனும் வருகிறது. இது 543 கி.மீ வரை ரேஞ்சை வழங்கவல்லது.

மஹிந்திரா எக்ஸ்யூவி700 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV700 Facelift): வருகிற 2026 ஜனவரியில் மஹிந்திரா (எக்ஸ்யூவி 7எக்ஸ்.ஓ) என்கிற பெயரில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடல், புதிய ரேடியேட்டர் கிரில், இன்னும் எடுப்பான ஹெட்லேம்ப்கள், புதிய அலாய் சக்கரங்கள், மாற்றியமைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள், மேம்படுத்தப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் போன்ற பல புதுப்பித்தல்களுடன் வருகிறது. இருப்பினும், தற்போதைய எக்ஸ்யூவி700 காரில் இருந்து என்ஜின் அல்லது கியர்பாக்ஸில் பெரியதாக மாற்றங்கள் இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார்கள் மார்க்கெட், சமீப காலங்களில் பெரிய அளவில் மாற்றம் கண்டுள்ளது. விரைவில் வர போகும் இந்த புதிய கார்களை எல்லாம் பார்த்தால், அடுத்த சில மாதங்களில் இந்த மாற்றம் இன்னும் பெரியதாக இருக்கும் என்பதுபோல் தெரிகிறது. மேலும், இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள கார்கள் இல்லாமல், நாம் எதிர்பார்க்காத புதிய கார்களும் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது. அவற்றை எல்லாம் தெரிந்துக் கொள்ள நமது டிரைவ்ஸ்பார்க் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கவும்.


Click it and Unblock the Notifications









