பெட்ரோல் கிடைக்காதோ என்ற அச்சத்தில் பெங்களூரில்... இந்தியாவையே திரும்பி பாக்க வைத்த மக்கள்!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு மிகவும் வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக கர்நாடக மாநில தலைநகரான பெங்களூர் (Bangalore), எலெக்ட்ரிக் வாகனங்களின் தலைநகரமாகவும் மாறி கொண்டுள்ளது. அந்த அளவிற்கு அங்கு எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
இதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. அரசின் கொள்கைகள் சாதகமாக இருப்பது முதல் காரணம் ஆகும். அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு அரசு ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது. இதற்கு அடுத்தபடியாக சார்ஜிங் ஸ்டேஷன்கள் (Charging Stations) போன்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் அதிகமாக இருப்பது இரண்டாவது காரணம் ஆகும்.

எனவே பெங்களூர் நகரில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவு அதிகமாக நடைபெற்று வருகிறது. பெங்களூர் நகரில் ஒட்டுமொத்தமாக 11 ஆர்டிஓ அலுவலகங்கள் உள்ளன. அங்கு கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சராசரியாக ஒரு நாளைக்கு 267 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதுவே சற்று அதிக எண்ணிக்கையாகதான் கருதப்படுகிறது. ஆனால் கடந்த மார்ச் 31ம் தேதி ஒரே நாளில் மட்டும், பெங்களூர் நகரில் உள்ள 11 ஆர்டிஓ அலுவலகங்களிலும் சேர்த்து, ஒட்டுமொத்தமாக 13 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. bengaluru4u இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு 2 முக்கியமான காரணங்கள் உள்ளன. இதில், சாலை வரி (Road Tax) ஒரு காரணம் ஆகும். பெங்களூரில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை அனைத்து வகையான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் சாலை வரி கிடையாது. ஆனால் கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து எலெக்ட்ரிக் கார்களுக்கு சாலை வரி விதிக்கப்பட்டு வருகிறது.
இதன்படி 10 லட்ச ரூபாய் வரை விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு 5 சதவீதம் சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10 லட்ச ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய் வரை விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு 8 சதவீத சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது. 25 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட எலெக்ட்ரிக் கார்களுக்கு 10 சதவீதம் சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி விதிப்பு நடைமுறை கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாகவே கடந்த மார்ச் 31ம் தேதி ஒரே நாளில் பெங்களூரில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கே ஒரு விஷயத்தை நாங்கள் குறிப்பிட்டாக வேண்டும். பெங்களூரில் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு முன்பும் சாலை வரி கிடையாது. தற்போதும் சாலை வரி கிடையாது.
ஆனால் கடந்த மார்ச் 31ம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ள 13 ஆயிரம் எலெக்ட்ரிக் வாகனங்களில் பெரும்பாலானவை டூவீலர்கள் ஆகும். இதன் மூலம் தெரிய வருவது என்னவென்றால், சாலை வரி உயர்வினாலும் மட்டும் பொதுமக்கள் திடீரென எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி படையெடுக்கவில்லை. தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடைபெற்று வரும் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை மிக கடுமையாக உயரலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசலுக்கு மிகவும் கடுமையான தட்டுப்பாடு உருவாகலாம் என்ற அச்சமும் பொதுமக்களுக்கு இருக்கிறது. எனவே பெங்களூரில் ஒரே நாளில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதற்கு, பொதுமக்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் குறித்து இருக்கும் அச்சமும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: எதிர்காலத்தில் இந்திய சாலைகளை எலெக்ட்ரிக் வாகனங்கள்தான் ஆட்சி செய்ய போகின்றன என்பதை எடுத்துக்காட்டுவதாகவே இந்த சம்பவம் உள்ளது. எரிபொருள் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த அச்சம் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான் என்றாலும் கூட, எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது உண்மையிலேயே நல்ல விஷயம்தான். இது காற்று மாசுபாடு பிரச்சனையை குறைக்க உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications








