ஒரு முறை சார்ஜ் செய்தால் சென்னை-கன்னியாகுமரி போயிரலாம்! போட்டி நிறுவனங்களை நடுங்க வைத்த புதிய எலெக்ட்ரிக் கார்
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இதன் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலை ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
2026 ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில், முன்பை காட்டிலும் அளவில் பெரிய பேட்டரி (Battery) தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அது 84 kWh பேட்டரி ஆகும். இதை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 690 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும் என ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. 690 கிலோ மீட்டர்கள் என்பது கிட்டத்தட்ட சென்னையில் இருந்து கன்னியாகுமரி இடையேயான தொலைவு ஆகும்.

இது அராய் (ARAI) அமைப்பு சான்று வழங்கிய டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) ஆகும். இது மிகவும் அதிகமான டிரைவிங் ரேஞ்ச் என்பதால், தொலை தூர பயணங்களை அச்சமின்றி மேற்கொள்ள முடியும். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முந்தைய வெர்ஷனில் 72.6 kWh பேட்டரி தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பேட்டரி தொகுப்பு மட்டுமல்லாது, ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் வசதிகளிலும் (Features), ஹூண்டாய் நிறுவனம் மாற்றங்களை செய்துள்ளது. ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரில் ஏற்கனவே அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) பாதுகாப்பு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த பாதுகாப்பு தொகுப்பில் தற்போது கூடுதலாக 2 புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியையும் ஹூண்டாய் நிறுவனம் புதிதாக வழங்கியுள்ளது. இருப்பினும் 12.3 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் தொடர்கின்றன.
இங்கே மற்றொரு விஷயத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காருக்கு நீங்கள் சார்ஜ் ஏற்றினால், அதற்கு பணம் செலுத்த தனியாக செயலி அல்லது கார்டு என எதுவும் தேவையில்லை. புதிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மூலமாகவே பணம் செலுத்தி கொள்ளலாம். இது புதிய வசதியாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 55.70 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் முந்தைய வெர்ஷன் 43.60 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனையாகி கொண்டிருந்தது. அதாவது பழைய வெர்ஷனை விட புதிய வெர்ஷன் 12.10 லட்ச ரூபாய் அதிகம் ஆகும். விலை உயர்த்தப்பட்டிருந்தாலும் கூட, அதற்கு ஏற்ப ஏராளமான வசதிகளை, ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது. எனவே இது வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாகவே இருக்கும்.
ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் காரின் வருகை, இந்திய சந்தையில், பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ்1 (BMW iX1), வால்வோ இஎக்ஸ்40 (Volvo EX40), கியா இவி6 (Kia EV6) மற்றும் பிஒய்டி சீலயன் 7 (BYD Sealion 7) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கு எல்லாம் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications