யூரோ என்கேப் கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற புதிய கியா செல்டோஸ்!

கார் வாங்கும்போது அதன் வடிவமைப்பு, மைலேஜ், வசதிகள் ஆகியவற்றுக்கு இணையாக பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் கிராஷ் டெஸ்ட் சோதனை முடிவுகள் கார்களின் பாதுகாப்புத் தரத்தை வாடிக்கையாளர்களும் எளிதாக அறிந்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. அந்த வகையில், தற்போது புதிய தலைமுறை கியா செல்டோஸ் காரின் மோதல் சோதனை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

ஐரோப்பிய புதிய கார் மதிப்பீட்டு திட்டமான யூரோ என்கேப் (Euro NCAP) நடத்திய மோதல் சோதனையில் புதிய தலைமுறை கியா செல்டோஸ் கார் ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. நான்கு முக்கிய பாதுகாப்புப் பிரிவுகளிலும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்றிருப்பது இந்த எஸ்யூவியின் பாதுகாப்பு அம்சங்களில் சிறப்பாக இருப்பதை காட்டுவதாக அமைந்துள்ளது.

Kia Seltos

யூரோ என்கேப் அமைப்பு வாகனங்களின் பாதுகாப்பை நான்கு முக்கியப் பிரிவுகளாகப் பிரித்து மதிப்பிடுகிறது. பாதுகாப்பான ஓட்டுதல் தரம், விபத்தைத் தவிர்க்கும் திறன், மோதலின்போது பயணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு மற்றும் விபத்துக்குப் பிறகான பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும். ஒவ்வொரு பிரிவிலும் கிடைக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் நட்சத்திர மதிப்பீடு வழங்கப்படுகிறது.

புதிய கியா செல்டோஸ் பாதுகாப்பான ஓட்டுதல் பிரிவில் 67 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளது. விபத்தைத் தவிர்க்கும் தொழில்நுட்பங்களுக்கான பிரிவில் 71 சதவீதமும், மோதலின்போது பயணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பில் 84 சதவீதமும் பெற்றிருக்கிறது. விபத்துக்குப் பிந்தைய பாதுகாப்புப் பிரிவில் அதிகபட்சமாக 90 சதவீத மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

பக்கவாட்டு மோதல் சோதனையில் செல்டோஸ் காரின் செயல்பாடு சிறப்பாக இருந்ததாக யூரோ என்சிஏபி அமைப்பு தெரிவித்துள்ளது. பக்கவாட்டிலிருந்து மற்றொரு வாகனம் மோதும் சோதனையில், பயணிகளின் முக்கிய உடல் உறுப்புகளுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் பக்கவாட்டு மோதல்களின்போது பயணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அதிக வேகத்தில் கம்பம் போன்ற குறுகிய தடையின் மீது மோதும் சோதனையில் ஓட்டுனரின் மார்புப் பகுதிக்கான பாதுகாப்பு குறைவான மதிப்பீட்டையே பெற்றுள்ளது. முன்பக்க இருக்கைகளுக்கு இடையில் பயணிகள் ஒருவருக்கொருவர் மோதுவதைத் தடுக்கும் வகையில் நடுப்பகுதி ஏர்பேக் (Centre Airbag) வழங்கப்பட்டுள்ளது. இது தலைப்பகுதிக்குச் சிறப்பான பாதுகாப்பை வழங்கியுள்ளது.

Also Read

முன்பக்க மோதல் சோதனையில் செல்டோஸ் சில பிரிவுகளில் சிறப்பாகவும், சில பிரிவுகளில் மேம்படுத்த வேண்டிய நிலையிலும் இருந்துள்ளது. குறிப்பாக, முன்பக்கத்தில் ஒரு பகுதி மட்டும் தடையின் மீது மோதும் சோதனையில் ஓட்டுனரின் மார்புப் பகுதிக்கான பாதுகாப்பு சராசரி அளவில் மதிப்பிடப்பட்டுள்ளது. முன்பக்க பயணியின் மார்புப் பாதுகாப்பு பலவீனமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்ட பிறகு ஏற்படக்கூடிய கூடுதல் பாதிப்புகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்பங்களில் செல்டோஸ் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. முதல் மோதலுக்குப் பிறகு தானாகவே பிரேக் செயல்பட்டு, கார் மீண்டும் நகர்ந்து மற்றொரு மோதலை ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்கும் வசதி இதில் இடம்பெற்றுள்ளது. இதற்காக அதிக மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

Also Read

மேலும், விபத்து ஏற்படும்போது அவசர உதவிக் குழுவினருக்குத் தகவல்களை அனுப்பும் மேம்பட்ட இ-கால் (Advanced eCall) வசதியும் வழங்கப்பட்டுள்ளது. காரில் எத்தனை பேர் இருந்தனர், எந்த வகையான மோதல் ஏற்பட்டது போன்ற விவரங்களை அவசர உதவிக் குழுவினர் அறிந்துகொள்ள இது உதவுகிறது. மீட்புப் பணிகளுக்கான வசதிகளிலும் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.

யூரோ என்சிஏபி வழங்கியுள்ள ஐந்து நட்சத்திர மதிப்பீடு அனைத்து சந்தைகளிலும் விற்பனை செய்யப்படும் செல்டோஸ் கார்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக, ஐரோப்பிய சந்தைக்கான 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் டர்போ பெட்ரோல் ஹைபிரிட் மாடல்கள் இந்தச் சோதனையில் இடம்பெற்றுள்ளன.

இந்த மதிப்பீட்டில் இடதுபுறம் மற்றும் வலதுபுறம் ஸ்டீயரிங் அமைப்பைக் கொண்ட குறிப்பிட்ட மாடல்களும் இடம்பெற்றுள்ளன. எனவே, ஐரோப்பிய சந்தையில் சோதனை செய்யப்பட்ட காரின் முடிவுகளை இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வேரியண்டிற்கும் அப்படியே பொருத்திப் பார்ப்பது சரியானதாக இருக்காது. சந்தைக்கு ஏற்ப உபகரணங்களும் தொழில்நுட்பங்களும் மாறுபடலாம்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய தலைமுறை கியா செல்டோஸ் ஏற்கெனவே பாரத் என்கேப் (Bharat NCAP) மோதல் சோதனையில் ஐந்து நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்புப் பிரிவில் 32 புள்ளிகளுக்கு 31.70 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்புப் பிரிவில் 49 புள்ளிகளுக்கு 45 புள்ளிகளையும் பெற்று சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் செல்டோஸ் காரில் வலுவான கட்டமைப்பைக் கொண்ட கே3 (K3) தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிக வலிமை கொண்ட உருக்கு மற்றும் கூடுதல் வலுப்படுத்தப்பட்ட கட்டமைப்புப் பகுதிகள் மோதலின்போது ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க உதவுகின்றன. பாரத் என்சிஏபி அமைப்பு மதிப்பீட்டிலும் இதன் கட்டமைப்பு நிலையானதாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Article Published On: Thursday, November 19, 2026, 10:35 [IST]
English summary
2026 kia seltos euro ncap 5 star safety rating
மேலும்... #kia motors
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out