சிஎன்ஜி டேங்க் என்ன காருக்கு அடியில் இருக்கு... மைலேஜை வாரி வழங்கும் பிரெஸ்ஸாவில் மாருதி செய்த அதிரடி மாற்றம்!
2026 மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) காரின் சோதனை ஓட்டத்தில், வழக்கமான சிஎன்ஜி கிட்களுக்குப் பதிலாக, காரின் அடிப்பகுதியில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி சிலிண்டர் அமைப்பு தென்பட்டுள்ளது. அதாவது, வழக்கமான சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட் ஸ்பேஸ் பகுதியில் வழங்கப்படும் இந்த சிலிண்டர் அமைப்பானது தற்போது காருக்கு அடியில் வழங்கப்பட்டுள்ளது.
மாருதி சுஸுகி தனது விக்டோரிஸ் (Victoris) காரில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய இந்த தொழில்நுட்பம், பிரெஸ்ஸாவிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இது இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் பிரிவில் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில் 'ட்ரூ கார் அட்வைஸ்' (True Car Advice) என்கிற யூடியூப் சேனல் (Youtube Channal) மூலம் கிடைத்துள்ள படங்களில் புதிய பிரெஸ்ஸா எந்தவித மறைப்பும் இல்லாமல் காட்சியளித்துள்ளது.

2026 பிரெஸ்ஸா காரின் தோற்றத்தில் பெரியதாக எந்த மேம்பாடுகளையும் எதிர்பார்க்க முடியாது என்பதை இது காட்டுகிறது. சிவப்பு நிற வாகன பதிவு எண்களுடன் காணப்படும் இந்த சோதனை பிரெஸ்ஸா கார், விக்டோரிஸ் காரில் உள்ளதைப் போன்ற புதிய அண்டர்பாடி எஸ்-சிஎன்ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது.
சந்தைப் போக்குகளைப் பின்பற்றி இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்தை நாடாமல், மாருதி தனது தனித்துவமான அண்டர்பாடி சிஎன்ஜி முறையைப் பயன்படுத்த துவங்கியுள்ளது. இந்த மாற்றம், வழக்கமான சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட்ஸ்பேஸ் (Boot Space) பகுதியில் ஏற்படும் இடவசதி இழப்பை முழுமையாகத் தீர்க்கும். இந்தியாவில் 4 சக்கர சிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் மாருதி சுஸுகி முன்னணியில் உள்ளது.

இருப்பினும், மற்ற சிஎன்ஜி கார் உற்பத்தி நிறுவனங்களான டாடா மற்றும் ஹூண்டாய் வழங்கும் இரட்டை சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் ஒப்பிடுகையில் மாருதி சுஸுகி சிஎன்ஜி கார்களில் பின்பக்க பூட்ஸ்பேஸ் இடவசதி ஆனது குறைவாகவே இருந்தது. ஆனால், 2026 பிரெஸ்ஸாவில் அறிமுகப்படுத்தப்படும் அண்டர்பாடி சிஎன்ஜி அம்சம், சிறந்த லக்கேஜ் தீர்வை வழங்கும்.
இருப்பினும், இந்த புதிய அமைப்பில் டாடா கார்களில் உள்ளதைப் போல ஸ்பேர் வீல் இருக்காது எனத் தெரிகிறது. 2026 பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை என ஸ்பை படங்கள் தெரிவிக்கின்றன. இதனால், தற்போதைய மாடலின் ஹெட்லைட்கள், டெயில்லைட்கள் மற்றும் முழுவதும் கருப்பு நிறத்திலான சக்கரங்கள் புதிய மாடலிலும் தொடரும்.

இருப்பினும், காரின் உட்புறத்தில் சில மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம். முன்னதாக இருந்த 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் திரைக்குப் பதிலாக, பெரிய 10.1-இன்ச் தொடுதிரை மற்றும் காற்றோட்டமான (Ventilated) இருக்கைகள் போன்ற அம்சங்கள் சேர்க்கப்படலாம். என்ஜினைப் பொறுத்தவரை, அதே 1.5 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தொடரும்.
சிஎன்ஜியில் இந்த என்ஜின் இயங்கும்போது, சுமார் 87 பிஹெச்பி பவரையும், 121.5 என்எம் டார்க் திறனையும் வெளியிடும். பெட்ரோலில் இயக்கும்போது, 99 பிஹெச்பி பவரையும், 137.1 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யும். இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 எர்டிகா காரின் மேம்படுத்தலை போன்று, மாருதி சுஸுகி 2026 பிரெஸ்ஸாவை அமைதியாக அறிமுகப்படுத்தலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், புதிய பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் தாக்கம் மார்க்கெட்டில் பெரியதாக இருக்கும் என்பது உறுதி. தற்போது சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளதால், புதிய பிரெஸ்ஸா சிஎன்ஜி காரின் அறிமுகம் விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









