டாடா இந்த காரை தான் யாருக்கும் தெரியாம உருவாக்கிட்டு இருந்துச்சா! முதல்முறையா பொது வெளியில்!!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் தனது டியாகோ (Tiago) காரின் மூலம் மார்க்கெட்டில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவில் தற்போது எஸ்யூவி கார்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், டியாகோ போன்றதான ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களுக்கான தேவை சற்று குறைந்துள்ளது.
இருப்பினும், டாடா நிறுவனம் டியாகோ மீதான நம்பிக்கையைத் தொடர்வதோடு, கடந்த 2025ஆம் ஆண்டில் பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் (EV) ஆகிய இரு மாடல்களுக்கும் மேம்பாடுகளை வழங்கியது. இந்த நிலையில், 2026ஆம் ஆண்டிற்கான புதிய டியாகோ மாடலுக்கும் டாடா மோட்டார்ஸ் மேலும் ஒரு மேம்பாட்டை வழங்க தயாராகி வருவதாகத் தெரிகிறது.

சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட டியாகோ இவி (EV) எலெக்ட்ரிக் கார் முதன்முறையாக பொது வெளியில் காட்சித் தந்துள்ளது. இருப்பினும், இதுதொடர்பான ஸ்பை படங்களில் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் புதிய டியாகோ இவி காட்சியளிக்கிறது. இது டாடாவின் மிகவும் மலிவான இவி மாடல் என்பதால், இந்த மேம்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.
வெளிப்புற வடிவமைப்பு மாற்றங்களைப் பொறுத்தவரை, தற்போது வெளியாகி இருக்கும் புதிய ஸ்பை படங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் தென்படவில்லை. காரின் உலோகப் பகுதிகளில் பெரிய மாற்றங்கள் இல்லாமல், ஃபைபர் பாகங்கள் மற்றும் விளக்குகளில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஹெட்லைட்கள், டெயில்லைட்கள் அல்லது அவற்றின் உள் அமைப்புகளில் திருத்தங்கள் இருக்கலாம்.

புதிய வீல் ஆர்ச்சுகள் அல்லது அலாய் சக்கரங்களும் சேர்க்கப்படலாம். மேலும், புதிய கலர் ஆப்ஷன்களும் வரக்கூடும். இனிவரும் சோதனை ஓட்ட ஸ்பை படங்களை வைத்து மேலும் பல தகவல்கள் வெளிவரலாம். 2026 டியாகோ இவி எலெக்ட்ரிக் காரில் உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதன்படி, புதிய பன்ச் ஃபேஸ்லிஃப்ட் காரில் காணப்பட்ட 7 அங்குல TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், தானாக ஒளி மங்கும் IRVM (Auto-dimming IRVM), சென்டர் ஆர்ம்ரெஸ்டுடன் கூடிய புதிய சென்டர் கன்சோல் பகுதி, ஒருங்கிணைந்த பின்புற ஏசி வென்ட்கள், புதிய டச் மற்றும் டோகிள் க்ளைமேட் கண்ட்ரோல் கன்சோல், வயர்லெஸ் சார்ஜிங் பேட் போன்ற அம்சங்கள் புதிய டியாகோ இவி காரில் இடம்பெறலாம். தற்போது, டியாகோ இவி 19.2 kWh அல்லது 24 kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது.

இவை முறையே 257 கிமீ மற்றும் 315 கிமீ தூரம் வரை காரை இயக்கி செல்லும் திறன் கொண்டவை. 2026 டியாகோ இவி காரில், டாடா நிறுவனம் பன்ச் இவி-யில் உள்ளதைப் போல பெரிய 35 kWh பேட்டரி பேக்கை அறிமுகப்படுத்தி, 450 கிமீ-க்கு அதிகமான ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், தற்போதைய டியாகோ இவி-யின் 74 bhp மற்றும் 114 Nm செயல்திறன் தொடரலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றாக டியாகோ இவி விளங்குகிறது. இதனாலேயே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட கால இடைவெளியில் மறக்காமல் டியாகோ இவி காரை அப்கிரேட் செய்துவிடுகிறது. தற்போதுதான் முதல்முறையாக சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டு இருந்தாலும், 2026 டியாகோ இவி-இன் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









